சிட்சை

"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்."நீதிமொழிகள் 22:6



அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே பையன் ஆகையால் அவனுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அவன் சிறு பையனாயிருக்கும் போதே மற்றவர்கள் வீட்டிலுள்ளப் பொருட்கள் இவனுக்குப் பிடித்தமாயிருந்தால் அவைகளை எடுத்துக் கொண்டு வந்து விடுவான். அவனுடையத் தாயாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. அது இவனுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. நாளடைவில் பள்ளியில் தன்னுடன் படிக்கும் பிள்ளைகளுடைய பேனா, பென்சில் போன்ற பொருட்களைத் திருடிக் கொண்டு வருவான். அவன் தாயார் அவன் செய்கின்றவைகள் தவறு என்று தெரிந்தும் அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். அவனுக்குப் படிப்பில் நாட்டம் இல்லாமல் படிப்பைப் பாதியிலே விட்டு விட்டு முழு நேரமாகத் திருட்டுத் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டான்.இப்படி ஒரு இடத்தில் திருடச் செல்லும் போது ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டான். அவன் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். தீர்ப்பு நாளும் வந்தது. நீதிபதி அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார். அவனுடையத் தாயார் இதனை அறிந்ததும் அவனைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் சென்றார். அவனைப் பார்த்து அழுதார். அதற்கு அவன் இப்பொழுது அழுது என்ன பிரயோஜனம். நான் சிறு வயதில் திருட ஆரம்பிக்கும் போது என்னைத் தண்டித்திருந்தால் இந்த நிலைமைக்கு வந்திருக்காது என்று சொன்னான்.



நாம் சிறு பிள்ளையிலிருந்தே நமது பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்போமானால் நம்முடையப் பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். மாறாக நாம் நமது பிள்ளைகளை கண்டிக்காமல் வளர்ப்போமானால் அந்தத் தாயாருக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். சிறு வயதிலே தங்களுடையப் பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்ததினால் தான் நாங்கள் இப்பொழுது நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்று பல பேர் சாட்சி கூறினதை நாம் அறிந்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சகோதரர் கூறியிருக்கிற சாட்சியை இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.சாட்சி





சிந்தனை: "உன் மகனை(ளை)ச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்." நீதிமொழிகள் 29:27


ஜெபம்:
கர்த்தாவே நாங்கள் சிறுவயதிலிருந்தே எங்களுடையப் பிள்ளைகளை உம்முடையப் பாதையில் நடத்துவதற்குக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்