உதவி செய்தல்


வேத பகுதி: ரோமர் 15: 25 - 28

"மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;" ரோமர் 15: 26

மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் எருசலேமில் உள்ள ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்ததாக இந்தப் பகுதியிலே வாசிக்கின்றோம். இது ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நற்குணங்களை நமக்குக் காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கெதோனியா மற்றும் அகாயாவில் உள்ள விசுவாசிகள் எருசலேமில் உள்ள ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்யும் அளவிற்கு அவர்கள் பணக்காரர்கள் கிடையாது.  பவுல் 2 கொரிந்தியர் 8: 2 ல் மக்கெதோனியா திருச்சபைகளைக் குறித்துக் கூறும் போது "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." என்று குறிப்பிடுகின்றார்.


நமக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக வந்த மிஷனெரிகள் கூட பலர் தங்களது நாட்டில் உள்ள இடங்களை விற்று நம்முடைய தேசத்திலே திருச்சபைகளுக்காகவும் கல்வி நிறுவனங்களுக்காகவும் செலவு செய்தார்கள். ஆனால் நாம் அவைகளுடையப் பலன்களைப் பெற்றுக் கொண்டு நம்மைச் சுற்றி வாழுகின்ற கஷ்டப்படுகின்ற மக்களை, ஏழை மக்களைக் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு உதவி செய்யாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். சில நேரங்களில் சொந்த சகோதர சகோதரிகளுக்குக் கூட நம்மால் உதவி செய்கின்றத் தகுதி இருந்தும் கூட உதவி செய்ய மனம் கஷ்டப்படுகின்றது. இப்படிப்பட்டக் காரியங்களைத் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக நாம் நம்மைச் சுற்றி உள்ள கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவுவதைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். அதனையே மோசே மூலமாகக் கட்டளைகளாக இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்திருக்கின்றார். ஆகவே நாமும் நம்மாலான உதவிகளை நம்மைச் சுற்றிக் கஷ்டப்படுகின்ற மக்களுக்குச் செய்து ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ளுவோம்.


சிந்தனை: நாம் நம்மைச் சுற்றி உதவி தேவைப்பட்டு வாழ்கின்ற மக்களுக்கு உதவி செய்கின்றோமா?

ஜெபம்: அன்பு நிறைந்த ஆண்டவரே நான் உம்முடைய அன்பினை என்னில் காண்பிக்கும்படியாக உதவி தேவைப்பட்டு வாழ்கின்ற மக்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்யும்படி உதவி செய்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்