நித்திய வெளிச்சம்


வேத பகுதி: ஏசாயா 60: 19,20

"கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்." ஏசாயா 60: 19 பி

தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலமாக இந்த வாக்குத்தத்தத்தைக் கர்த்தர் நமக்குக்கொடுக்கின்றார். நாம் நம்மை கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணித்து அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரது பிள்ளைகளாக வாழும்போது கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமும் மகிமையுமாக காணப்படுகின்றார். நம்முடையக் கிரியைகள் தேவனுக்குப் பிரியமானவைகளாகக் காணப்படும்போது அவருடையக் கரம் நம்மைத் தாங்கி நடத்துகின்றது. எந்தவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் நமக்கு வந்தாலும் அவர் நமக்கு ஆறுதலையும் சகாயத்தையும் தந்து வழிநடத்துகின்றார். இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையின் வாழ்க்கையிலும் கர்த்தர் நம்மோடு கூட இருப்பார்.

நாம் நம்மைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். நாம் ஆண்டவருடையப் பிள்ளைகளாக வாழ நம்மை அர்ப்பணிக்கும்போது இவ்வுலகத்தின் துன்பங்கள் சோதனைகள் நிறைந்த வாழ்க்கையிலும் கர்த்தரே நமக்குத் துணையாக நின்று நம்மை வழி நடத்துவார். கர்த்தர் நமக்குத் துணையாய் இராவிட்டால்  இவ்வுலக வாழ்க்கையின் சோதனைகளில் நாம் வீழ்ந்து விடுவோம். பொறாமைகள் வஞ்சகங்கள் நிறைந்த இந்த உலகத்திலே மனிதர்கள் நம்மைக் கைவிட்டு விடுவார்கள் ஆனால் நாம் கர்த்தரை முழுமையாக நம்பி அவரைச் சார்ந்து வாழும் போது அவர் நமக்கு நித்திய வெளிச்சமாக இருந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: நான் கர்த்தரை நம்பியிருக்கின்றேனா? அல்லது மனிதர்களையா, படிப்பையா, பணத்தையை, சொத்துக்களையா? எதனை நம்பியிருக்கின்றேன்?

ஜெபம்: கிருபையும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே நான் என்னையே முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன். நீரே எனக்கு நித்திய வெளிச்சமாக இருந்து என்னை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே.ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்