அவர் ஆண்டவர்

வேதபகுதி: ஆமோஸ் 9 : 1 - 6


கர்த்தர் என்பது அவருடைய நாமம். வசனம் 6



பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளிடம் தேசப்பிதா காந்தியடிகள் படத்தைக் காட்டி இவர் யார் என்று கேட்டால் உடனே தேசப்பிதா என்றும் அறநெறி வழிகாட்டி என்றும் காந்தி தாத்தா என்றும் பலவிதமான உறவுகளை வெளிப்படுத்தி பிள்ளைகள் பதில் அளிப்பர். அந்த பதிலில் இருந்து உறவை அறிந்து கொள்ள முடியும்.



இங்கோ ஆண்டவர் தம்மைக் குறித்து இஸ்ரவேல் மக்களிடத்தில் நான் உங்களை ஆளுகிறவர் என்று உரைக்கிறார். இஸ்ரவேலரின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த கடவுள் அவர்களது பித்தலாட்ட வாழ்வு நெறியைப் பார்த்து அவர்களை தண்டிக்க விழைவதை வசனம் கூறுகிறது. பகலின் மேகத்தினாலும் இரவில் அக்கினியினாலும் பாதுகாத்து வழிநடத்தி வாழ்வு தந்த அவர்களின் கடவுள் இப்பொழுது அவர்களை எச்சரிப்பதை காண்கிறோம்.




கர்த்தர் சர்வவல்லவர். அவருக்கு ஒன்றும் மறைவில்லை. உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்து வருபவர். அவர்தான் இயற்கையைப் படைத்தவர். அதுமட்டுமல்ல தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறவர்.



நமது வாழ்வில் கடவுள் மன்னிக்கிறவர் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதால் நாம் தவறு செய்வதற்கு அஞ்சுவதில்லை. ஆண்டவரின் கண்களுக்கு மறைவாக மனிதர்கள் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது. நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நமது வாயின் வார்த்தைகளையும் கடவுள் கவனித்துக் கொண்டே இருக்கிறார். நாம் அவருக்குக் கடைசி நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.




சிந்தனை: கர்த்தர் மன்னிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உடையவர்.


ஜெபம்: தீய வாழ்வில் இருந்து என்னை விடுவித்துக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

புதிய பஞ்சம்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 11 - 14


கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை ஆனுப்புவேன். வசனம் 11



இங்கே ஆண்டவர் சொல்லும் பஞ்சம் உண்வுப் பஞ்சமல்ல. தண்ணீர் பஞ்சமல்ல. இவையெல்லாம் மனித சரீர வாழ்வுக்குரியவை. அதைவிட மேலான பஞ்சத்தைப் பற்றி கடவுள் குறிப்பிடுகிறார். அது என்ன? கர்த்தருடைய வார்த்தைக்கு பஞ்சம். இது எதைக் குறிக்கிறது? இஸ்ரவேலரின் வாழ்வில் கடவுளுடைய உறவு அறுபட்ட நிலையைக் குறிக்கிறது. கல்லுகளை அப்பங்களாக மாற்றும் என்ற சோதனைக்காரனுக்கு ஜீவ அப்பமாகிய இயேசு மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றாரே அந்த தேவனுடைய வார்த்தைக்குத் தான் பஞ்சம்.



அந்நாட்களின் நாட்டின் பொதுப் பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் ஆண்டவரின் சித்தத்தை அறியவும் வழிநடத்துதல்களைப் பெறவும் மக்களும் அரசனும் தீர்க்கதரிசிகளை நாடிச் செல்வது வழக்கம். இறைவன் தமது வார்த்தைகளை அவர்களுக்கு வெளிப்படுத்துவார். மக்கள் பெற்று மனமகிழ்வர்.




ஆனால் இப்போதே அதற்குப் பஞ்சம் வரும் என கடவுள் உரைப்பது ஏன்? இஸ்ரவேல் மக்கள் பலமுறை கடவுளுடைய வார்த்தைகளையும் வழி நடத்துதல்களையும் புறக்கணித்து விட்டனர்.



இதுவே தேவன் தரும் மாபெரும் தண்டனை.




சிந்தனை: நீர் விளம்பின வேதமே நலம்.


ஜெபம்: இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அதின் படி நடக்க எனக்கு உதவி புரியும் . ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கசப்பு மிக்க நாள்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 9 - 10


அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். வசனம் 10



2004 டிசம்பர் 26. மறக்கமுடியாத நாள் மிகுந்த உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி மக்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிய நாள். சுனாமி தாக்கிய கசப்பான அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.



இங்கே ஆண்டவரும் இஸ்ரவேலர் எதிர்பார்த்து காத்திருந்த நாளை கசப்பான நாளாக்குவேன் என்கிறார். இஸ்ரவேலருடைய வாழ்வில் கர்த்தருடைய நாள் மகிழ்ச்சியின் நாள். விடுதலையின் நாள். காரணம், அந்நாளில் இஸ்ரவேலருக்கு நன்மை, ஆசிர்வாதம், மீட்பு, வெளிச்சம் உண்டென்றும், இஸ்ரவேலரைப் பகைப்பவர்களுக்குத் தீமை, அழிவு என்றும் இஸ்ரவேலர் நம்பினர். ஆண்டவரும் தம்மை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களது வரலாற்றிலே செயலாற்றியதால் கர்த்தருடைய நாள் அவர்களுக்கு நம்பிக்கையின் நாள் மட்டுமல்ல களிகூறுதலின் நாள்.




ஆனால் அந்தோ பரிதாபம் அவர்களது எதிர்பார்புக்கு எதிர்மாறாக ஆண்டவர் வாக்கு உறைக்கிறார். ஏன்? இஸ்ரவேலரின் மாய்மாலமான வழிபாட்டைக் கடவுள் வெறுக்கிறார்.



அநீதி நிறைந்த சமூக சமய வாழ்வை கடவுள் முடிவுக்குக் கொண்டு வருகிறார். நடக்கப்போவது என்ன? மக்கள் புலம்பி தவிக்கப் போகிறார்கள். மக்கள் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்படப்போகிறார்கள்.



கடவுளின் தண்டனைக்கு யாரும் தப்பமுடியாது. போலியான வாழ்வு. வெளிவேஷமான கடவுள் பக்தி நம்மை கடவுளின் பிள்ளைகளாக்கமாட்டாது. தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இன்றே மனந்திரும்பு.





சிந்தனை: உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்குக் கர்த்தர் துணை.


ஜெபம்: கடவுளே, சுத்த இருதயத்தை எனக்குத் தாரும். நிலைவரமான உமது தூய ஆவியால் என்னை புதுப்பியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எளியவனின் விலை

வேதபகுதி: ஆமோஸ் 8:4- 8


தரித்திரரைப் பணத்துக்கும் எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும்...வசனம் 5



உலக வரலாற்றில் கருப்பு இன மக்களை சந்தைகளில் கால்நடைகளைப் போல் விற்று, சிறுமைப்பட்டவர்களை, ஏழை எளிய மக்களை இழிவாக நடத்திய செயல்களை நாம் நன்கு அறிவோம்.



இஸ்ரவேல் நாட்டிலும் பணக்கார வியாபாரிகள் ஏழை எளிய மக்களைப் பல வழிகளில் துன்புறுத்தினர் . சிறுமைப்பட்ட மக்களை ஒடுக்கினர். எப்படியென்றால் அவர்களது வியாபாரத்தில் உண்மை காணப்படவில்லை. கள்ள தராசு, அளவைகள் , எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன, உணவுப் பொருட்களிலே உதவாத குருணை முதலியவற்றை கலந்து வியாபாரம் செய்தனர். ஏழைகளிடம் இவைகளை வாங்கும்போது எடையளவை அதிகமாக்கியும் விற்கும்போது குறைந்த எடையளவை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். இப்படிப்பட்ட வியாபாரிகளைக் கடவுள் எச்சரிக்கிறார். ஏனென்றால் நம்முடைய தேவன் நீதிபரர்.




இன்றைய வாழ்விலும் நமது உலகில் எங்கும் இன்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் துணிகரமாய்க் கலப்படம் செய்கின்றனர்.



கள்ளக்கடத்தல் நடைபெறுகிறது. இவைகள் யாரைப் பாதிக்கிறது? எளியவர்களை அல்லவா? தேவன் எளியவர்கள் பக்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.



சிந்தனை: எளியவனுக்குக் கர்த்தர் துணை


ஜெபம்: தேவனே எளியவர்களை என்னுடைய வாழ்க்கையில் நேசிக்க உதவிபுரியும்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்