உண்மையான நட்பு

வேத பகுதி: I சாமுவேல் 20: 1 - 17


"யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான். தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்." I சாமுவேல் 20: 17

சவுல் தாவீதைக் கொல்ல நினைக்கின்றான். இதனைப் பல்வேறு சூழ்நிலைகளினால் உணர்ந்து கொண்ட தாவீது யோனத்தானிடம் பேசுகின்ற நிகழ்ச்சி தான் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்திலே ஒரு சிறந்த நட்பைக் கூற வேண்டுமானால் யோனத்தான் மற்றும் தாவீதின் இடையில் உள்ள நட்பைக் குறிப்பிடலாம். யோனத்தான் ராஜாவுடையக் குமாரன், சவுலுக்குப் பின்பு ராஜாவாக வேண்டியவன். ஆனால் யோனத்தான் தாவீதிடம் "என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர் அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்" I சாமுவேல் 23:17 . என்று கூறுகின்றார். நண்பணுக்காகத் தன்னுடையப் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கும் படி யோனத்தான் ஆயத்தமாக இருக்கின்றார்.

பிரியமானவர்களே நம்முடைய நட்புகள் எப்படிப்பட்டவைகளாயிருக்கின்றது என்று எண்ணிப் பார்ப்போம். நம்முடைய நட்பு தாவீது மற்றும் யோனத்தானுடைய நட்பைப் போல இருக்கின்றதா? புற பாலினத்தவரிடம் பலகும் போது நாம் எப்படிப்பட்ட நட்புடன் பழகுகின்றோம்? உண்மையான நட்புடனா? அல்லது தவறான எண்ணத்துடனா? சிந்தித்துப் பார்ப்போம். எனக்கு உண்மையான நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விட்டு விட்டு நம்முடையப் பாவங்களுக்காக அக்கிரமங்களுக்காக தன்னுடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தின உண்மையான நண்பராம் இயெசு கிறிஸ்து உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார். உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கும் போது அவர் உங்களைச் செவ்வையானப் பாதையிலே வழிநடத்துவார்.


சிந்தனை: என்னுடைய நட்பு எப்படிப்பட்ட நட்பாயிருக்கின்றது?

ஜெபம்:
அன்பின் இயேசு கிறிஸ்துவே நல்ல நண்பணாகிய உம்மிடம் என்னையே அர்ப்பணிக்கின்றேன். நீரே என்னைச் செவ்வையானப் பாதையிலே வழி நடத்தி இந்த உலக வாழ்க்கையிலே உமக்குச் சாட்சியாக வாழ அருள் புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்