யாருக்குக் கிருபை

வேதபகுதி:யாக்கோபு 4 : 5 - 6


தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். வசனம் 6



தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தாழ்மையாக நடக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே உள்ள சுயம் என்ற பெருமை குணம் நாம் தாழ்மையாக நடப்பதைத் தடுத்துவிடுகிறது. இதை ஒருவரும் மறுக்க முடியாது.



ஆதியில் சாத்தானும் தேவதூதனாயிருந்தவன் தான், பெருமையினால் கீழே தள்ளப்பட்டான். ஆதாமும் பெருமையினால் தன் தவறை ஒத்துக் கொள்ள இயலாமல் ஏவாள் மீதும் தேவன் மீதும் பழியைச் சாட்டுகிறான். நம்முடைய இரத்தத்திலேயே ஊறிப்போன நிறப்பெருமை, பணப்பெருமை, இனப்பெருமை ஆகியவை மாறித் தாழ்மை நமக்குள் வரும்போது மட்டுமே தேவகிருபையை நாம் பெற்றுக் கொள்ளத் தகுதியடைகிறோம்.




ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்(1 பேதுரு 5:5) என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவும் தன் வாழ்க்கையில் சரீரப்பிரகாரமாக இவ்வுலகில் அவரை வளர்த்த பெற்றாருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். பிலிப்பியர் 2 :8 ல் கூறியுள்ளபடி பிதாவுக்கும் கீழ்ப்படிந்தார், மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகித் தம்மைத் தாமே தாழ்த்தினார்.




சிந்தனை: கீழ்படிதலே தாழ்மை, தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை.


ஜெபம்: ஆண்டவரே என்னைத் தாழ்த்தி உம் பாதம் வருகிறேன், பெருமையை என்னை விட்டு அகற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எதினால்?

வேதபகுதி:யாக்கோபு 4 : 1 - 4


உங்களுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் எதினாலே வருகிறது. வசனம். 1



சண்டைகள் ஏன்? எதினால் என ஆராய்ந்து பார்க்கும்போது அவைகளின் அடித்தளமாக ஒரு மனிதனுடைய இச்சையே காணப்படும். இதையே வேதம் கூறுகிறது. ஆசை என்பது சாதாரணமானது. இச்சை என்பது அதை விட ஒரு படி மிகவும் மோசமானது.



தேவனிடம் நாம் ஜெபித்தால், நம்முடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். கேட்பதேல்லாம் கிடைத்துவிடும் என நாம் போதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது? "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1). இதன் பொருள் என்னவென்றால் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறபடியால் என்னை தேவையிலிருக்கவிடமாட்டார். எனவே தேவன் நம்முடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றாமல் நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்.



சாத்தானின் குணம் - இச்சை

சாதாரண மனித குணம் - ஆசை

சாதிக்கும் தேவ மனிதனின் குணம் - தேவ சித்தம்


ஆவிக்குரிய மனிதனின் குணம்: தேவனுடைய சித்தம், விருப்பம் ஆகியவற்றோடு இணைந்துவிடும்போது அந்த மனிதனின் விருப்பங்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவைகளாயிருக்கும். என்வே அவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதி 10:24).




சிந்தனை: நாம் எப்படிப்பட்ட குணத்தை உடையவர்களாக இருக்கிறோம்?


ஜெபம்: தேவனே உம்முடைய இருதயத்தின் எண்ணங்களும் ஏக்கங்களும் என் விருப்பங்களாய் மாற கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பரம ஞானம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 14 - 18


பரத்திலிருந்து வருகிற ஞானமோ....நற்கனிகளாலும் நிறைந்ததாயுமிருக்கிறது. வசனம் 17.



இக்காலத்தில் அன்பைக் குறித்து அதிகமாய்ப் பிரசங்கிக்கப்படுகிறது. இயெசு நாதர் வாழ்ந்து காட்டிய அன்பு, சத்தியத்தோடு இணைத்துப் பரத்திலிருந்து ஊற்றப்பட்டு ஞானிகளிடம் காணப்படுகிறது.



நோவா, மக்கள் கேலி செய்தபோதும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது கொண்ட அன்பால் பேழையைச் செய்தான். மோசே இஸ்ரவேலரின் மீது கொண்ட அன்பால் திறப்பில் நின்றான். யோசேப்பு தன்னை வெகுவாய்ப் பகைத்த சகோதரர்களை அவர்கள் மீது கொண்ட அன்பினிமித்தம் பஞ்சத்தினின்று காப்பாற்றினான்.





கசப்பான வைராக்கியம், விரோதம், பொய் சொல்லுதல் பேய்த்தனமானது, பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருபவை. அசுத்தமானவை. ஆனால், பரமஞானம் பரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஞானம், இணக்கமுள்ளது, இரக்கமுள்ளது, சாந்தமுள்ளது. சமாதானத்திற்கு நேராய் வழிநடத்துவது.



நமது நாவு பரம ஞானத்தினால் நிறைந்திருக்குமானால் நீதியின் கனியாகிய அன்பையே வெளிப்படுத்தி, சமாதானத்தை நடப்பிக்கும்.



சிந்தனை: என்னுடைய செய்கைகள் பரம ஞானத்தால் நிறைந்திருக்கிறாதா?


ஜெபம்: ஆண்டவரே என்னுடைய செய்கைகள் , செயல்கள் உம்முடைய பரம ஞானத்தால் நிறைந்து அன்புடனும் சாமாதானத்துடனும் நடக்க கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நடத்தை

வேதபகுதி:யாக்கோபு 3 : 9 - 13


தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். வசனம் 13



ஒருவனுடைய தரம், அவனுடைய கிரியைகள் அல்லது நடக்கையினால் தெரிய வருகிறது. அவனுடைய உள்ளத்தில் இருப்பதே அவனுடைய பேச்சிலும். செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நாமும் நல்லவர்களானால், நல்லதையே பேசுவோம், நன்மையையே செய்வோம்.



நமது பேச்சும் செயலும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. பேச்சு வாயிலிருந்தும் செயல்பாடு உள்ளத்திலிருந்து வந்தாலும் அவை இரண்டும் ஒரே மனிதனின் தரத்தையே வெளிப்படுத்துகிறது. நாவினால் கடவுளைத் துதிக்கிறோம். அதே நாவினால் கடவுள் படைத்த மனிதனைச் சபிக்கிறோம். துதித நாவு தூற்றக்கூடாது. புகழ்ந்த நாவு இகழக்கூடாது. நாவின் செயல்பாடு இரண்டல்ல . ஒன்றே தேவை. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, செய்யவும் முடியாது. ஒன்றையே தெரிந்து கொள்ளவேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.





ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இரண்டு வகையான ருசி தரக்கூடிய நீர் சுரக்காது. ஒருவகை மரம் மற்றொரு வகையான கனி தராது. நன்மையே செய்பவராகச் சுற்றித்திருந்த இயேசு நாதரின் பிள்ளைகள் தீய, தீமையான செயல்களைச் செய்யமாட்டார்கள் . துதித்தலும் சபித்தலும்; தித்திப்பும், கசப்பும் நம்முடைய நாவிலிருந்து வெளிவரமுடியாது. வெளிவரவுங் கூடாது. இரண்டல்ல ஒன்றே தேவை.



சிந்தனை: நான் நன்மையானவைகளை, நல்லவைகளைப் பேசிகிறேனா?


ஜெபம்: ஆண்டவரே நான் நல்லதைப் பேசவும் நல்லதைச் செய்யவும் என்னை வழினடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

விஷம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 7 - 8


நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது. வசனம் 8



மனிதனால் கூடாதது தேவனால் கூடும். தேவன் நமது நாவை அடக்கக் கூடும். நம்மால் கூடாத ஒன்றை, நடப்பிக்கக் கூடிய தேவனிடம் ஒப்படைக்க வேண்டும்.



நாவை ஏன் மனிதனால் அடக்கக்கூடாது? மனிதன் தனது அறிவாலும், ஆற்றலாலும் காட்டில் வாழ்வன, நாட்டில் வாழ்வன, கடலில் வாழ்வன அனைத்தையும் அடக்கி ஆள்கிற திறமையை, ஆசீர்வாதத்தை படைப்பிலேயே யானை, புலி, சிங்கம், காண்டாமிருகம், உருவத்திலும் சக்தியிலும் வல்ல, பெரிய அனைத்து விலங்குகளையும் அடக்கிக் கீழ்ப்படுத்திவிட்டான் (ஆதியாகமம் 1 :26).





ஆனால் நாவை மட்டும் அடக்க மனிதனால் ஏன் முடியவில்லை. நாவு கொடியது, அது நஞ்சு போன்றது. நாவில் இருந்து புறப்படும் வார்த்தைகள் விஷம் நிறைந்ததாக இருப்பதால் அது பிறரை மனமடிவாக்கி சோர்வுறச் செய்து செயல்படவிடாமல் முடமாக்கிவிடுகிறது.



ஆனால் விசுவாசிகளான நாம் விஷம் நிறைந்த நம் நாவை கிறிஸ்துவின் கிருபையினால் அடக்கி ஆளும் போது நாம் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளமுடியும்.



சிந்தனை: நாம் நம்முடைய நாவை எப்படிப் பயன்படுத்துகிறோம்?


ஜெபம்: தேவனே என் நாவை உம்முடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதற்குப் பயன்பட பெலத்தையும் ஞானத்தையும் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்