பூரண நன்மை

வேதபகுதி:யாக்கோபு 1 : 16 - 18



நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்......பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது வசனம் 17




பூரணம் என்பது உறுதிப்பட்ட நிலை என்பதாகும். ஒரு மண்பானை (அ) செங்கல் பூரணமாக வேகாவிட்டால் அது ஒரு பொருளாகக் காட்சியளித்தாலும், அவை சீக்கிரமாகப் பயனற்றதாகிவிடும். உணவுப் பொருளும் பூரணமாக வேகாவிட்டால் நன்மை பயக்காது. உடல் நலக்கேடு ஏற்படுத்தும்.




ஒரு கட்டடம் பூரணமாக வேலை முடிந்தபின் பார்த்தல் தான் அழகு காணப்படும். கல்வியிலும் பூரணமாகத் தேறாவிடில் வேலை கிடைப்பது கடினம். மேற்படிப்பு படிப்பதற்கும் முடியாது. அது போல ஆண்டவருக்குள் நாம் பூரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எதில் எல்லாம் என்று பார்ப்போமானால்



  • சற்குணத்தில் பூரணப்படவேண்டும் - மத்தேயு 5:40



  • பரிசுத்தமாக்குதலை தேவபயத்தோடு பூரணப்படுத்த வேண்டும் 1 கொரிந்தியர் 7 :1



  • பொறுமையில் பூரணராக இருக்க வேண்டும் - யாக்கோபு 1 :4



  • விசுவாசத்தில் பூரணமாயிருக்க வேண்டும் யாக்கோபு 2 :22



  • உலகுக்குப் பயப்படாத பூரண அன்பு பெற வேண்டும் - 1 யோவான் 4 :18





ஆண்டவரே நம்மைப் பூரணப்படுத்துகிறார். மனிதனின் பாவம் தேவனுக்கும் நமக்கும் தடுப்புச் சுவர். பாவ மன்னிப்புக்காக ஓரே பலியாக ஏசுவைப் பிதாவானவர் அனுப்பி, நமக்கும் அவருக்கும் உள்ள தடைகளை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்கி பூரணப்படுத்தி இருக்கிறார் என்று அறிந்து கர்த்தரைத் துதிப்போம். அவர் நம்மைப் பரிபூரண ஆசிர்வாதங்களால் நிரப்புகிறவர் என்று அறிந்து நன்றி செலுத்துவோம்.




சிந்தனை: அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினார்(பூரணப்படுத்தினார்).


ஜெபம்: ஆண்டவரே, என்னை உம்முடைய நன்மையினால் பூரணப்படுத்தி உமது இரத்தத்தினால் கழுவி சுத்தப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஐசுவரியம் வாடுமோ

வேதபகுதி:யாக்கோபு 1 - 9 - 11


பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான் வசனம் 2



யாக்கோபு நிருபம் மற்ற நிருபங்களிலிருந்து வித்தியாசமானது. இந்த நிருபத்தில் கிருபைக்குரிய கிரியை செய்ய வேண்டிய செயல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய காரியங்கள் ஆகும். ஐசுவரியத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதீர்கள் (சங்கீதம் 62:10). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதிமொழிகள் 11:28)



கி.பி. 1900ல் மார்ட்டின் என்ற ஏழ்மையான விவசாயி அமெரிக்காவிலுள்ள நியுயார்க்கில் வாழ்ந்து வந்தார். தேவபக்தியுள்ள மனிதர். ஆலயம் செல்வதில் தவறுவது இல்லை. தனக்கு வருமானம் உண்டாயிருக்க்கப் பால்மாடு ஒன்றை விலைக்கு வாங்கினார். பால்பண்ணை பெருகியது. பெரும் தனவந்தன் ஆனார். இறைவனை விட்டு விலகி, பால்பண்ணையே கதி என முழுவதும் அதிலே தனது நேரத்தைச் செலவு செய்தார். ஒருநாள் மாடுகளுக்குத் தண்ணிர் காட்டச் சென்றபோது ஒரு மாடு தவிர அனைத்தும் செத்துக்கிடந்தது. உள்ளம் உடைந்தது. அவரால் ஜீரணிக்க முடியவில்லை.




தன் தவறை உணர்ந்தார். இறைவனிடம் தன் தவறை அறிக்கை செய்து மீண்டும் தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 3:8ன் படி ஐசுவரியத்தை நம்பிக் கெட்டுப்போனேன் என்று அங்கலாய்த்தார்.




சிந்தனை: கர்த்தரானவர் தம்மைத் தொழுது கொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார். ரோமர் 10:12


ஜெபம்: ஆண்டவரே ஐசுவரியத்தை விரும்பி, நாடி ஓடாமல் வாடாத கிரீடத்தைப் பெற உம்மை நாடி ஓடி வரக் கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஞானம் கிடைக்கும்

வேதபகுதி: யாக்கோபு 1: 5 - 8


உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். வசனம் 5



கல்லூரியில் படிக்கும் வாலிபன் தனது கல்லுரிப்படிப்பில் இரண்டு முறை தோல்வியடைந்தான். இந்தத் தோல்வியால் அவனுக்கு வாழ்க்கை கசந்தது. மன நிம்மதியில்லாமல் இருந்தபோது அவன் இயேசுவை அறிந்தான். தன் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டுப் புதிய வாழ்வு பெற்றான்.



இப்பொழுது அவன் உள்ளத்தில் ஒரு புதிய நம்பிக்கை உண்டானது. இனி நான் தேவனுடைய பிள்ளை. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்(நீதிமொழிகள் 2:6). எனவே அவர் எனக்கு உதவி செய்வார் என நம்பினான். ஊக்கமாக ஜெபித்தான், படித்தான், பட்டம் பெற்றான்.




நமது ஆண்டவர் ஞானத்தை சாலமோன் ராஜாவுக்கு மட்டுமல்ல, விசுவாசத்தோடு கேட்கிற யாவருக்கும் கொடுக்க மனதுள்ளவர். அவர் பட்சபாதமுள்ளவர் அல்லவே.



கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்(மத்தேயு 7 : 7,8).



கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஞானத்தையும் புத்தியையும் வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.




சிந்தனை: தேவனுக்குப் பயந்து ஜீவிப்போமானால், இவ்வுலக வாழ்விற்குரிய ஞானத்தையும் நித்திய வாழ்வையும் நமக்குத் தந்து ஆசிர்வதிப்பார்.


ஜெபம்: தேவனே உமக்குப் பிரியமாய் நடக்க ஞானமுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பரீட்சை

வேதபகுதி: யாக்கோபு 1 : 1 - 4


என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் வசனம் 2,3



பொதுவாகப் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் மாணவர்கள் தவறாது கலந்துக் கொள்ளும்போது இறுதித் தேர்வில் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சிபெறுகிறதை அறிந்திருக்கிறோம்.



வாழ்க்கை என்னும் பள்ளியில் நாம் பல பாராட்டுகளுக்கு உட்படும்போது பல பிரச்சனைகள். துன்பங்கள் மூலம் நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கபடுகிறது. நான் உபத்திரவப்பட்டது நல்லது அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.




இயேசு 40 நாள் உபவாசிக்கும்போது அவருக்கு சோதனை வந்தது. உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சைபாராதிருப்பாயாக என்றார்.



இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையின் முன்பாதிரி. அவரைப்போல சோதனை நேரத்தில் பொறுமையோடு இருப்போம். விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்.




சிந்தனை: உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மைபாரட்டுகிறோம்.


ஜெபம்: ஆண்டவரே எங்கள் உபத்திரவத்தில் பொறுமையோடு இருந்து விசுவாசத்தைக் காத்துக் கொள்ள பெலன் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்