பழி வாங்குதல்

வேத பகுதி: ஆதியாகமம் 50: 15 - 21


"பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்."



          தென் ஆப்பிரிக்காவில் நிற வெறியால் கறுப்பினத்தவரை வெள்ளையர்கள் கொன்று குவித்தனர். ஒரு போலிஸ்காரர் ஒரு கறுப்பரையும் அவர் மகனையும் அவரது வீட்டுக்கு முன்பாகவே கொடூரமாகக் கொன்றார். ஆட்சி மாறிய பின்னர், வெள்ளைக் காரர்களைப் பழி வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தக் கறுப்பினப் பெண்ணிடம் போலீஸ்காரர் மன்னிப்புக் கேட்டார். அந்தப் பெண் அவரைப் பார்த்து, நான் நன்றாகச் சமைப்பேன், என் கணவரும் மகனும் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போது அவர்கள் இல்லாததால் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு விருந்திற்கு வர வேண்டும் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்தப் போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.



      நமது ஆண்டவரும் நமக்கு எதிராகத் தீமைச் செய்பவர்களை நாம் மன்னிக்கும்படியாக விரும்புகிறார். பதவியும் அதிகாரங்களும் யோசேப்பிற்குக் கிடைத்த போதிலும் அவர் தனது சகோதரர் செய்த தவறுகளுக்காகப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக தனது சகோதரர்களிடம் நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள் ஆனால் தேவனோ அவைகளை நன்மையாக்கினார் என்று அவர்களிடம் பட்சமாய்ப் பேசினான். தேவனை நேசிக்கிறவர்களின் உள்ளம் அன்பினால் நிறைந்திருக்கும், அங்கே கசப்பிற்கோ, பழி வாங்குதலுக்கோ இடமில்லை. நமக்கு வாய்ப்புகள் வரும்போது நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்கும்படியாகவும் அவர்களிடம் அன்பு செலுத்தும்படியாகவும் தேவன் விரும்புகிறார். மாறாக நாம் அவர்களுக்கு எதிராகத் தீங்கு செய்வோமென்றால் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற நற்குணங்கள் நம்மிடம் இல்லை. வெறும் வாய் அளவிலே மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு உள்ளத்தில் பகை உணர்வோடு இருக்கும் குணத்தையும் ஆண்டவர் விரும்பவில்லை. யோசேப்பைப் போல மன்னிப்பதோடு மட்டுமில்லாமல் தீங்கு செய்த தன்னுடையச் சகோதரர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யவே ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். நாம் எப்படிப்பட்ட குணம் உடையவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.



சிந்தனை: "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்" ரோமர் 12 : 19



ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே, பழி வாங்கும் குணத்தை என்னிலிருந்து எடுத்துப் போட்டு உம்முடையை நல்லாவியை எனக்குள்ளாகத் தந்து நான் பரிசுத்தமாயும் உமக்குப் பிரியமாயும் வாழ உதவி புரிந்தருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்