கிருபை

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" புலம்பல் 3 :22



கிருபை என்றால் என்ன என்று பார்ப்போமானால் தகுதியில்லாதவர்களுக்குத் தேவன் கொடுக்கின்ற ஈவு. நாம் இம்மட்டும் இருப்பதே கடவுளின் சுத்தக் கிருபையே. அவருடையக் கிருபை இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.தேவன் யாருக்கெல்லாம் தம்முடையக் கிருபைகளைத் தருகின்றார் என்று பார்ப்போமானால்




1தாழ்மை உள்ளவர்களுக்கு:

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபைகளை அளிக்கின்றார். எனது
யாருக்குக் கிருபை என்றப் பதிவில் சிறிது விவரித்து உள்ளேன் அதையும் படிக்கவும்.உசியா ராஜா கடவுள் தனக்கு அளித்திருக்கும் கிருபைகளை மறந்து பெருமை கொண்டு மனமேட்டிமை அடைந்து அவன் செய்த காரியத்தினால் குஷ்ட ரோகியானான்.

"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."1 பேதுரு 5 :5


2. இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்கு:

கர்த்தர் தமக்குப் பயந்து தனது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத் தம்முடையக் கிருபையை அளவில்லாமல் ஊற்றுகின்றார். யோசேப்பின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் இறைவனுக்குப் பயந்து நடந்ததினால் கர்த்தர் தமது கிருபையினால் அவனை எகிப்தின் அதிபதியாக உயர்த்தினார்.

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" சங்கீதம் 103:17

"கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்." சங்கீதம் 25:10

3. இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு(Faith in God):

தேவன் தம்மேல் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு கிருபைகளை அளித்து ஆசீர்வதிப்பார். எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவனை எதிரிகள் துரத்துகின்ற சமயத்தில் எல்லாம் அவன் கர்த்தரை மட்டுமே நம்பி ஜெபித்ததினால் அவனுக்கு கிருபை அளித்து அவனுடைய சத்துருக்களினின்று அவனை விலக்கிக் காத்தார்.

"துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்." சங்கீதம் 32:10



நானும் கடந்த வாரத்திற்கு முந்தின வாரத்தில் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது முன்பதாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் திடீரெனத் திரும்பியதினால் விபத்திற்குள்ளானேன். வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டேன். ஆனாலும் சிறியக் காயங்களுடன் கர்த்தர் கிருபையாகக் காத்துக் கொண்டார். ஆம் இறைவனின் கிருபை இல்லையென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

"என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது." சங்கீதம் 94:18




சிந்தனை: "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். " 2 கொரிந்தியர் 15:9


ஜெபம்:
கர்த்தாவே உம்முடையக் கிருபைகளை எங்களுக்கு அதிகமாய்த் தந்து எங்களை வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்