துன்பத்தில் துணை

"நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்."சங்கீதம் 138 :7



சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார். சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உண்வில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார்.



மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார். நாமும் கிறிஸ்துவுக்காக நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் போது நாம் துன்பத்தில் நடந்தாலும் கர்த்தர் நம்மை உயிர்பித்து வழிநடத்துவார்.





சிந்தனை: நான் என்னைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருக்கிறேனா?


ஜெபம்:
தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன் என்னுடைய துன்பங்கள் எல்லவற்றிலும் நீரே என்னுடையத் துணையாக இருந்து வழிநடத்தும். ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கீழ்ப்படிதல்


"பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்." 1 சாமுவேல் 15 : 22



நாம் யாருக்கெல்லாம் கீழ்ப்படியவேண்டும் என்றுப் பார்ப்போமானால்

1.தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்:

நாம் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கர்த்தர் நமக்குக் கொடுத்தக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் அவருடையச் சத்தத்திற்குச் செவிகொடாமல் நாம் நடப்போமானால் நமக்குச் சாபத்தை வருவித்துக் கொள்ளுவோம்.

"இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்."உபாகமம் 11 : 27,28

2.பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்:

நம்மை இம்மட்டும் வளர்த்து உயர்வடையச் செய்த நம்முடையப் பெற்றோருக்கு எதிர்த்துப் பேசாமல் கீழ்ப்படிந்து அவர்கள் சொல்கின்றபடி கேட்டு நடக்க வேண்டும்.
"உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." யாத்திராகமம் 20 :12
"பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்" எபேசியர் 6 : 1
"பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது." கொலோசேயர் 3:20

3. பெரியவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்:

நம்முடைய நன்மைக்காக மற்றும் பரிசுத்த வாழ்விற்காகப் பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளைக் கேட்டு அதின்படி நடக்க வேண்டும்.

"இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்" 1 பேதுரு 5: 5

4.எஜமான்கள்/மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

நாம் வேலைப்பார்கின்ற இடங்களில் உள்ள நமக்கு அதிகாரிகளாகக் கொடுக்கப் பட்டிருக்கிறவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
"எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்@ ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை@ உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது." ரோமர் 13 :1

"வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்;கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து;மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்." எபேசியர் 6 : 5,6

எனது தாயார் அடிக்கடிச் சொல்வார்கள் கீழ்ப்படி இல்லையென்றால் மேல்படிக்குப் போகமுடியாது. அதாவது நாம் இவ்வுலக வாழ்விலே நமது பெற்றோர் பெரியவர்கள் மற்றும் நமக்கு மேலான அதிகாரிகள் போன்றவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் போது நாமும் மேன்மையாக வைக்கப்படுவோம். நமது ஆண்வராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கும் போது தமது பெற்றோருக்கும், பிதாவாகிய ஆண்டவருக்கும் மற்றும் இவ்வுலக அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து நடந்து நமக்கு முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிறார். அவரைப் பின்பற்றி வாழும் போது நாமும் மேன்மையைப் பெற்றுக் கொள்ளுவோம் என்பதில் எவ்விதமான சந்தேகமில்லை

சிந்தனை: நான் தேவனுக்கும், பெற்றோர் பெரியவர்களுக்கும், மேலதிகாரிகளுக்கும் கீழ்ப்படிகிறேனா?


ஜெபம்:
தேவனே நான் உமக்கும் என்னுடைய பெற்றோர் மற்றும் பெரியவர்களுக்கும் என்னுடைய அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்து அதன் மூலம் மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள கிருபை தாரும்.ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்