உபவாசம்

"நாங்கள் உபவாசம் பண்ணி , எங்கள் தேவனிடத்தில் அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்" எஸ்ரா 8:23


இந்தப் பகுதியில் எஸ்ரா என்ற வேதபாரகன் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து அர்த்தசஷ்டா ராஜாவினால் எருசலேமிற்கு அனுப்பப்பட்ட வழியில் தன்னோடு கூட வந்த ஜனங்கள் எல்லாரிடமும் உபவாசம் செய்ய வேண்டும் என்று கூறினார்,  ராஜா எருசலேம் தேவாலயத்திற்குத் தந்த பொருட்களை உண்மையாய் ஒப்புவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தார். இவர் உபவாசம் செய்ய குறிப்பிட்ட காரணங்கள் 

1. தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தவும் 
2. தங்களுக்காகவும் 
3. தங்கள்  பிள்ளைகளுக்காகவும் 
4. தங்களுடைய சகல பொருள்களுக்காகவும் 
5. செவ்வையான வழியைத் தேடுகிறதற்காகவும் 

நாமும் மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் உபவாசம் செய்ய அழைக்கப்படுகின்றோம். நாம் கர்த்தரிடம் நம்மைத் தாழ்த்தி ,  நம்முடைய பிள்ளைகளின் இரட்சிப்புக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் , தேவன் தந்த சகல பொருட்களுக்காகவும் , அதைத் தீங்கான காரியத்துக்கு செலவிடாமல் காத்துக் கொள்ளவும் ஜெபிக்க வேண்டும் .

மேலும் வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி தேவன் நம்மை செவ்வையான பாதையில் நடத்தும் படியாகவும் ஜெபிக்க வேண்டும் . அப்படி நாம் ஜெபிக்கும் போது எஸ்ராவின் விண்ணப்பத்தைக் கேட்ட ஆண்டவர் நம்முடைய விண்ணப்பத்திற்கும் பதில் தந்து நம்மை ஆசீர்வதிப்பார் 

சிந்தனை : நம்முடைய உபவாச ஜெபம் எப்படி இருக்கின்றது ?


ஜெபம்: அன்பின் தேவனே நான் உண்மையாக உபவாசித்து ஜெபிக்கவும் பரிசுத்தத்தில் வளர்ந்து பெருக்கவும் கிருபை புரிந்தருளும் . இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.

மகிழ்ச்சி

கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி... எஸ்ரா 6:22

   இந்த உலகம் தரக்கூடாத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் ஆண்டவர் ஒருவராலே மாத்திரம் தான் தரமுடியும். கர்த்தருடைய ஆலயம் நேபுகாத் நேச்சாரால் இடிக்கப்பட்டு தீக்கொளுத்தப்பட்டு கிடந்தபடியினால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த மனவேதனை உண்டானது . பின்னர் ஆலயம் கட்டத் தொடங்கினார்கள். பல்வேறு நெருக்கங்கள் சோதனைகள் மத்தியிலும் தேவன் அவர்களுக்கு ராஜாக்களின் கண்களில் தயவு கிடைக்கப் பண்ணி எருசலேம் தேவாலயத்தை கட்டி முடிக்கப் பண்ணினார்.

      மேலும் புளிப்பில்லா அப்பப்பண்டிகையை மகிழ்ச்சியோடு  ஆசரிக்க ஆண்டவர்  கிருபை பாராட்டினார் . அதோடு கூட பாபிலோன் அடிமைத்தனத்தில் இருக்கும் போது கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் பாடுவது எப்படி என்று கேட்டவர்களை அவர்களது சொந்த தேசத்தில் பாடகர் வரிசையோடு கூட பாட வைத்தார்.

       இது எப்படி சாத்தியமானது என்று பார்ப்போமென்றால் , அடிமைத் தனத்தில் இருக்கும் போது இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கை இட்டார்கள் , உபவாசத்தோடு தேவனிடம் மன்றாடினார்கள். தேவன் அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு இரக்கம் பாராட்டி அவர்களை மகிழப்பண்ணினார் . நாமும் நம்முடைய பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கை செய்து மன்றாடுவோமென்றால் ஆண்டவரும் நம் மேல் மனதுருகி நம் பாவங்களை மன்னித்து நம்முடைய இக்கட்டுகள் வியாதிகள் வேதனைகள்  எல்லாவற்றிலும்  இருந்தும் நம்மை விடுதலையாகி நம்மை மகிழப்பண்ணுவார்.

சிந்தனை : நம்முடைய மகிழ்ச்சிக்கு தடையாய் இருக்கும் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட  ஆயத்தமா?

ஜெபம் : அன்புள்ள ஆண்டவரே எங்கள் மகிழ்ச்சிக்குத் தடையாய் இருக்கின்ற எங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் மீறுதல்கள் எல்லாவற்றையும் தேவரீர் தயவாய் மன்னித்து எங்களை மகிழப்பண்ணுமாறு தாழ்மையுடன் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே . ஆமேன்