யோசேப்பின் உயர்வு

வேதபகுதி:ஆதியாகமம் 40,41


"நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்களெல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள். சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாயிருப்பேன்" ஆதியாகமம் 41:40



எகிப்து தேசத்தில் ஒரு கைதியாய் இருந்த யோசேப்பை அந்தத் தேசத்திற்கே அதிபதியாகக் கர்த்தர் உயர்த்த யோசேப்பினிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள்.



1. தன்னைத் தாழ்த்தித் தேவனை முன்னிலைப்படுத்துதல்:

யோசேப்பு சொப்பனங்களுடைய அர்த்தத்தை வெளிப்படுத்தக்கூடிய வரத்தைப் பெற்றிருந்தாலும் தன்னைப் பெருமையாக வெளிப்படுத்தாமல், சொப்பனத்திற்கு அர்த்தத்தைத் தேவனே வெளிப்படுத்துவார்( ஆதி 40:8, ஆதி 41:16) என்று தன்னைத் தாழ்த்தித் தேவனை முன்னிலைப்படுத்துகிறான்.

2. பாவத்தை/ துன்மார்க்கமான காரியத்தை வெறுத்தல்:

யோசேப்பு இளவயதாயிருக்கும் போதே தன்னுடைய சகோதரர் செய்யும் தப்பிதங்களைத் தான் சிறுவனாயிருந்தபடியால் தன்னுடைய தகப்பனாரின் கவனத்திற்குக் கொண்டு வந்து தன்னுடைய சகோதரர்களை எச்சரிக்கிறார்.

யோசேப்பு போத்திபாருடைய அரண்மனையில் இருக்கும் போது போத்திபாருடைய மனைவி வலிய அவனிடம் வந்து தவறான உறவிற்கு அழைத்தபோது" நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி" என்று பாவத்திற்கு விலகி ஓடினான்.

3.மன்னிப்பின் குணம்:

யாக்கோபு மரணமடைந்த பின் யோசேப்பின் சகோதரர் தாங்கள் செய்த காரியத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவான் என்று பயந்து ஆள் அனுப்புகிறார்கள். அதற்கு யோசேப்பு "நீங்களோ எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ வெகு ஜனங்களைக் காக்கும்படி அதை நன்மையாக முடியப் பண்ணினார்" என்று அவர்களைச் சமாதானத்தோடே அனுப்பினான்.




தேவன் நமக்குக் கொடுத்த வரங்களினிமித்தம் நம்முடையப் பெருமையை வெளிப்படுத்துகிறோமா அல்லது தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறதா? பாவங்களை வெறுத்து அவைகளுக்கு விலகி ஓடுகிறோமா? மற்றவர்களிடம் பழிக்குப் பழியான காரியங்களிச் செயல்படுத்துகிறோமா அல்லது நன்மை செய்கின்றோமா?




சிந்தனை: நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறோம்? சற்றே சிந்தித்துப் பார்ப்போம். யோசேப்பை உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராயிருக்கிறார்.


ஜெபம்: தேவனே நீர் எனக்குத் தந்த வரங்களினிமித்தம் உம்முடைய நாமம் மட்டும் மகிமைப்படவும், பாவங்களுக்கு விலகி ஓடவும், மற்றவர்களுக்குத் தீமைக்குத் தீமை பாராட்டாமல் நன்மையை மட்டுமே செய்ய எனக்கு உதவி புரியும். ஆமேன்.