பகைவனையும் நேசி

வேத பகுதி: I சாமுவேல் 26


"சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய் என்றான்" 1 சாமுவேல் 26 : 25

தாவீது இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் சவுல் ராஜாவை விடப் பெயர் பெற்றவனாக மாறுகின்றான். இதனைப் பொறுக்க முடியாத சவுல் தாவிதைக் கொலை செய்ய நினைக்கின்றான். இதை அறிந்த தாவீது சவுலுக்குத் தப்பி ஒடுகின்றான். சவுல் தாவீதைப் பின் தொடருகின்றான். ஒரு மலையில் தாவீதும் இன்னொரு மலையில் சவுலும் இருக்கின்றார்கள். சவுலின் கூட்டத்தார் தூங்குகின்ற வேளையில் தாவீதும் அபிசாயும் சவுல் இருக்கின்ற இடத்திற்கு வருகின்றார்கள். அபிசாய் தாவீதிடம் நம்முடையப் எதிரியாய் இருக்கின்ற சவுலைக் கொன்று போடுவோம் என்று தாவீதிடம் கூறுகின்றான். ஆனால் தாவீதோ சவுலைத் தப்ப விட்டு சவுலுடைய ஈட்டியையும் தண்ணீர்ச் சொம்பையும் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். தாவீது தன்னுடைய இடத்திற்கு வந்து சவுலின் கூட்டத்தாரிடம் பேசுகின்றான். இதனை உணர்ந்த சவுல் தாவீதை நீ மேன்மேலும் பலப்படுவாய் என்று ஆசீர்வதித்து தன் வழியே செல்லுகின்றான்.

ஆம் பிரியமானவர்களே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். மத்தேயு 5: 44,45" என்று தனது மலைப் பிரசங்கத்தில் கூறுகின்றார். நாமும் நமது சத்துருக்களாய், பகைஞர்களாய் இருக்கின்றவர்கள் செய்கின்றத் தீமையானக் காரியங்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்வோமானால் அவர்களும் நமது நல்ல நடக்கைகளைப் பார்த்து கிறிஸ்துவின் அன்பினை அறிந்து கொள்வார்கள்.நம்மையும் கர்த்தர் ஆசீர்வத்து வழிநடத்துவார்.


சிந்தனை: நான் எனக்குத் தீங்கு செய்கிறவர்களுக்குப் பதிலாகத் தீங்கு செய்கின்றேனா அல்லது கிறிஸ்துவின் அன்பினைக் காட்டுகின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவா, நான் எனக்குத் தீமை செய்கிறவர்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்யும்படிக் கிருபையத் தந்து அதன் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப் படும் படி செய்யும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உண்மையான நட்பு

வேத பகுதி: I சாமுவேல் 20: 1 - 17


"யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான். தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்." I சாமுவேல் 20: 17

சவுல் தாவீதைக் கொல்ல நினைக்கின்றான். இதனைப் பல்வேறு சூழ்நிலைகளினால் உணர்ந்து கொண்ட தாவீது யோனத்தானிடம் பேசுகின்ற நிகழ்ச்சி தான் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்திலே ஒரு சிறந்த நட்பைக் கூற வேண்டுமானால் யோனத்தான் மற்றும் தாவீதின் இடையில் உள்ள நட்பைக் குறிப்பிடலாம். யோனத்தான் ராஜாவுடையக் குமாரன், சவுலுக்குப் பின்பு ராஜாவாக வேண்டியவன். ஆனால் யோனத்தான் தாவீதிடம் "என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்க மாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர் அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார்" I சாமுவேல் 23:17 . என்று கூறுகின்றார். நண்பணுக்காகத் தன்னுடையப் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கும் படி யோனத்தான் ஆயத்தமாக இருக்கின்றார்.

பிரியமானவர்களே நம்முடைய நட்புகள் எப்படிப்பட்டவைகளாயிருக்கின்றது என்று எண்ணிப் பார்ப்போம். நம்முடைய நட்பு தாவீது மற்றும் யோனத்தானுடைய நட்பைப் போல இருக்கின்றதா? புற பாலினத்தவரிடம் பலகும் போது நாம் எப்படிப்பட்ட நட்புடன் பழகுகின்றோம்? உண்மையான நட்புடனா? அல்லது தவறான எண்ணத்துடனா? சிந்தித்துப் பார்ப்போம். எனக்கு உண்மையான நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விட்டு விட்டு நம்முடையப் பாவங்களுக்காக அக்கிரமங்களுக்காக தன்னுடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தின உண்மையான நண்பராம் இயெசு கிறிஸ்து உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார். உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கும் போது அவர் உங்களைச் செவ்வையானப் பாதையிலே வழிநடத்துவார்.


சிந்தனை: என்னுடைய நட்பு எப்படிப்பட்ட நட்பாயிருக்கின்றது?

ஜெபம்:
அன்பின் இயேசு கிறிஸ்துவே நல்ல நண்பணாகிய உம்மிடம் என்னையே அர்ப்பணிக்கின்றேன். நீரே என்னைச் செவ்வையானப் பாதையிலே வழி நடத்தி இந்த உலக வாழ்க்கையிலே உமக்குச் சாட்சியாக வாழ அருள் புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் இறைவனின் வீட்டில் தங்குவான்?

வேத பகுதி: சங்கீதம் 15:1 - 5

Remove Formatting from selection
"கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே." சங்கீதம் 15: 1,2

தாவீது ராஜா சங்கீதம் 15 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தில் யார் இறைவனின் வீட்டில் தங்குவான்? என்று கேள்வையைக் கேட்டுவிட்டு அதற்கானப் பதில்களை மீதியுள்ள வசனங்களில் குறிப்பிடுகின்றார். நாம் கர்த்தருடையக் கூடாரத்தில் அதாவது பரலோகப் பாக்கியத்திற்கு நம்மிடம் காணப்பட வேண்டியக் குணாதிசயங்கள்

  • உத்தமமாய்(நேர்மையாக) நடக்க வேண்டும்
  • நீதி செய்ய வேண்டும்
  • உண்மையைப் பேச வேண்டும்
  • புறங்கூறாதவனாய்(ஒருவர் அவ்விடத்தில் இல்லாதபோது அவரைப் பற்றி இழிவாகக் கூறுதல்) இருக்க வேண்டும்
  • அண்டை அயலகத்தாருக்குத் தீங்கு செய்யாதவன்
  • தீய மனிதர்களோடு கலவாதவன்
  • கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம் பண்ணுகின்றவன்
  • வாக்கு தவறாதவன்
  • தன் பணத்தை வட்டிக்குக் கொடாதவன்
  • குற்றம் புரியாதவனுக்கு எதிராகப் பணம் வாங்காதவன்


ஆம் பிரியமானவர்களே நாமும் மேலே கூறப்பட்டக் குணாதியங்களோடு வாழ்வோமானால் இவ்வுலக ஆசீர்வாதங்களோடு கர்த்தரின் கூடாரமாகியப் பரலோக வாழ்க்கைக்குப் பாக்கியவான்களாய் இருப்போம். மாறாக நாம் இன்னும் துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போமானால் நிரந்தர அக்கினிக் கடலாகிய நரகத்திற்குத் தள்ளப்படுவோம். இர'ண்டில் எது நமக்கு வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து அதின் படி நடப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.


சிந்தனை: நான் கர்த்தரின் கூடாரமாகியப் பரலோக வாழ்க்கைக்குப் பாத்திரமாக இருக்கின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவனே நான் பரலோகப் பாக்கியத்திற்குத் தகுதியுள்ளவனா(ளா)கப் பரிசுத்தப்படுத்தி, இந்த உலக வாழ்க்கையில் உமக்குச் சாட்சியாக வாழ உன்னத அருள் புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யாரைப் பிரியப்படுத்துகிறேன்?

வேத பகுதி: மாற்கு 15: 1 - 15


"பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." மாற்கு 15:15

யூத ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பிடித்துக் கொண்டு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுக்கின்றார்கள். யூத ஜனங்கள் பிலாத்துவினிடம் இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். பிலாத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசாரித்து விட்டு அவரிடம் ஒரு குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்லுகின்றான். யூதர்களோ இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று சத்தமிடுகின்றார்கள். ஜனங்களுக்கு நீதி நியாயங்களைச் செய்ய வேண்டிய தேசாதிபதியாகிய பிலாத்துவோ இயேசுகிறிஸ்துவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை, என்றாலும் யூத ஜனங்களைப் பிரியப்படுத்துகின்றவனாய் இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்கின்றான்.

ஆம் பிரியமானவர்களே நாம் யாரைப் பிரியப்படுத்துகின்றோம்? நணபர்களைப் பிரியப்படுத்துகின்றோமா? அல்லது மேலதிகாரிகளைப் பிரியப்படுத்தும்படி கிறிஸ்துவுக்குப் பிரியமில்லாதக் காரியங்களைச் செய்கின்றோமா? அல்லது குடும்பத்தினர் உறவினர்களைப் பிரியப்படுத்தும்படி நடந்து கொள்ளுகின்றோமா? இல்லை நாம் தேவனைப் பிரியப்படுத்துகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். சவுல் ஜனங்களைப் பிரியப்படுத்துகின்றவனாய் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. சவுலுடைய முடிவு பரிதாபம். பிலாத்துவின் முடிவும் மிகப் பரிதாபம். கர்த்தருக்குப் பயந்து அவருடைய கட்டளைகளுக்கு மிகவும் பிரியமாய் நடக்கும் போது நாம் பாக்கியவான்களாய் பாக்கியவதிகளாய் மாறுவோம்.


சிந்தனை: நான் யாரைப் பிரியப்படுத்துகின்றேன்? என்னுடைய நடவடிக்கை யாரைப் பிரியப்படுத்துகின்றன? கிறிஸ்த்துவையா அல்லது உலகத்தின் காரியங்களையா?

ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடைய நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் உம்மைப் பிரியப்படுத்தி பாக்கியாவானா(ளா)க இந்த உலகத்திலே உமக்குச் சாட்சியாக ஜீவிக்கக் கிருபையையும் பெலனையும் தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சாட்சியுள்ள வாழ்க்கை

வேதபகுதி: மாற்கு 5 : 1 - 20


"நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்" மாற்கு 5 : 19

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கதரேனருடைய நாட்டில் உள்ள லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனைக் குணமாக்கினார். குணமாக்கப்பட்ட அந்த மனிதன் ஆண்டவரிடம் வந்து தானும் ஆண்டவருடன் கூட இருக்கும்படியாக ஆணடவரிடம் வேண்டிக்கொள்ளுகின்றான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீ போய் உன்னுடைய இனத்தாரிடத்திலும் உன்னுடைய ஜனத்தினிடத்திற்கும் போய் ஆண்டவர் உனக்குச் செய்த நன்மைகளை அறிவி என்று அவனுக்குச் சொன்னார். அந்தப்படியே அந்த மனிதனும் ஆண்டவர் அவனுக்குச் செய்த நன்மைகள் யாவற்றையும் அந்தப் பகுதி முழுவதும் பிரசித்தப்படுத்தினான்.

ஆம் பிரியமானவர்களே நம்மையும் நம்முடையக் குடும்பத்தினருக்கு முன்பாகவும் நாம் வசிக்கின்றப் பகுதியிலும் ஆண்டவருக்கு நற்சாட்சியாக வாழ இயேசு நம்மை அழைக்கின்றார். நாம் வசிக்கின்றப் பகுதியிலும் நம்முடையக் குடும்பத்திலும் சாட்சியாக வாழாமல் நம்மால் கிறிஸ்துவுக்குள்ளாக வளர முடியாது, ஊழியம் செய்யவும் முடியாது. நாம் நம்முடைய நடக்கையினாலும் சாட்சியினாலும் பரிசுத்தமான வாழ்க்கையினாலும் நம்முடையக் குடும்பத்தில் உள்ள மக்களையும் நாம் வசிக்கின்றப் பகுதியுலுள்ள மக்களையும் கிறிஸ்துவுக்காக ஆதாயம் பண்ணமுடியும்.


சிந்தனை: என்னுடையக் குடும்பத்திலும் நான் வசிக்கின்றப் பகுதியிலும் சாட்சியாக வாழ்கின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையக் குடும்பத்திற்கும் நான் வசிக்கின்றப் பகுதியிலும் உமக்குச் சாட்சியாகவும் பரிசுத்தமாகவும் வாழக் கிருபை தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்