பாவ மன்னிப்பு




வேத பகுதி: ஏசாயா 44: 21,22

"உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்." ஏசாயா 44:22


         ஆண்டவர் பாவ வாழ்க்கையை விட்டு மீட்பராகிய தம்மிடம் வரும்படியாக நம்மைப் பார்த்து அழைக்கின்றார். பாவ உலகத்திலே வாழ்ந்து கொண்டு வருகின்ற நம்மைப் பார்த்து நீ என் தாசன் நீ என்னால் மறக்கப்படுவதில்லை, உன்னை நான் மீட்டுக் கொள்ளும்படியாக ஆயத்தமாயிருக்கின்றேன். ஆனால் நீயோ உன் மனம் போன போக்கிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே உன் இஷ்டப்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. உன் பாவ வாழ்க்கை எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு என்னிடம் வா என்று தன் இரு கரம் நீட்டி அழைக்கின்றார்.


   பாவம் நிறைந்த இந்த உலகத்திலே பரிசுத்தம் நிறைந்தவர்களாக உண்மையுள்ளவர்களாக நேர்மை உடையவர்களாக வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. பொய் சொல்வது, லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது, பிறருக்கு விரோதமாகக் கோள்சொல்வது, ஏமாற்றுவது போன்ற காரியங்கள் தவறு என்றாலும் மக்கள் அதனைத் தவறு என்று உணராமல் பாவமான காரியங்களைச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டு வருகின்ற காலங்களிலே வாழ்ந்து கொண்டு வருகின்ற நம்மைப் பார்த்து தான் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆண்டவர் அழைக்கின்றார். நம்மிடமும் இப்படிப்பட்ட பாவமான காரியங்கள் காணப்படுமென்றால் நாம் ஆண்டவரிடத்தில் ஒப்புரவாகுவோம். அவரும் தம்முடையச் சொந்தப் பிள்ளைகளாக நம்மை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கின்றார். கிறிஸ்து பிறப்புப் பண்டிகையைக் கொண்டாடுகின்ற நம்முடைய உள்ளத்திலே மெய்யாகவே கிறிஸ்து பிறக்கும்படியாக ஆண்டவரிடம் மன்றாடுவோம். அவரும் நம்முடைய பாவங்களை மன்னித்து நித்திய சந்தோஷத்தையும் நித்திய சமாதானத்தையும் தர வல்லவராயிருக்கிறார்.


சிந்தனை: இயேசு என் உள்ளத்தில் வாசம் செய்கின்றாரா?


ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே என் பாவங்களையெல்லாம் மன்னித்து பரிசுத்தமாய் வாழ உதவி புரிந்தருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

1 comments:

சொன்னது…

நல்ல பல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.