பரிசுத்தத்தின் பலன்

"உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்."யோசுவா 3:5


பரிசுத்தமுள்ளவராகிய தேவன் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாமும் பரிசுத்தமுள்ளவர்களாகவே வாழ‌ விரும்புகின்றார். ஆனால் நாமோ நம்முடைய சுய இச்சைகளால் இழுப்புண்டவர்களாகப் பல வேளைகளில் தவறுகள் செய்து பாவிகளாக மாறி விடுகின்றோம். ஆண்டவர் நம்முடையப் பாவங்களை விட்டு விலகி பரிசுத்தமானவர்களாக வாழ‌ நம்மை அழைக்கின்றார். அப்படி நாம் பரிசுத்தமுள்ளவர்களாக மாறும் போது ஆண்டவர் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள்

1. தடைகளை நீக்குகின்றார்:

நாம் நம்முடையக் குறைகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு பரிசுத்தத்தில் நடக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றத் தடைகளை நீக்கி ஆசீர்வதிக்கின்றார். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிண‌பின்பு அவர்களின் கானானை சுதந்தரிக்கச் சென்றப் பயணத்தில் முன்னேறிச் செல்லத் தடையாக இருந்த யோர்தான் நதியைப் பிளந்து வெட்டாந்தரையில் நடந்து பயணிக்கச் செய்தார். நாமும் நம்மைப் பரிசுத்த வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கும்போது நம்முடைய வாழ்வில் இருக்கின்றத் தடைகளை ஆண்டவர் நீக்கிப்போடுகின்றார்

2.வெற்றி தருகின்றார்:

பரிசுத்தமாக நாம் வாழும்போது தோல்வி நிறைந்த நம்முடைய வாழ்வைவெற்றியாக மாறச் செய்கின்றார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் எரிகோவை ஒப்புக்கொடுக்கும் போது யோசுவாவின் மூலமாகஎரிகோவின் பொருட்களில் ஒன்றையும் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் ஆகான் சாபத்தீடானதில் களவு செய்தபடியினால் மிகவும் சிறிய பட்டணமாகிய ஆயியை அவர்களால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. பின்னர் தங்களைப் பரிசுத்தம் பண்ணி சாபத்தீடானதைத் தங்களை விட்டு அகற்றியபோது ஆயி பட்டணத்தை  வெற்றி பெற முடிந்தது. நாமும் பரிசுத்தமானவர்களாக மாறும் போது நம்முடைய தோல்வியின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக ஆண்டவர் மாற்றித் தருவார்.

3.நித்திய வாழ்வு தருகிறார்:

நாம் பாவத்தை விட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டு பரிசுத்தமாகும்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி தருவதோடு மட்டுமல்லாமல் நாம் இந்த உலகைவிட்டு எடுத்துக் கொள்ளப்படும் போது நமக்குப் பரலோக வாழ்வாகிய நித்திய ஜீவ வாழ்வைத் தருகின்றார்.

"நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்."ரோமர் 6:22

சிந்தனை: நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருக்கின்றேனா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுப் பரிசுத்தமாக வாழ்ந்து எங்களுக்கு ஏற்படுகின்றத் தடைகள் உம்மால் நீங்கப் பெற்று வெற்றியுள்ள வாழ்வு வாழக் கிருபைபுரிந்து முடிவிலே நித்திய வாழ்வு பெற்றுக் கொள்ள இயேசுவின் நாமத்திலே வேனண்டிக் கொள்கின்றேன்.ஆமேன்