பாவ மன்னிப்பு




வேத பகுதி: ஏசாயா 44: 21,22

"உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்." ஏசாயா 44:22


         ஆண்டவர் பாவ வாழ்க்கையை விட்டு மீட்பராகிய தம்மிடம் வரும்படியாக நம்மைப் பார்த்து அழைக்கின்றார். பாவ உலகத்திலே வாழ்ந்து கொண்டு வருகின்ற நம்மைப் பார்த்து நீ என் தாசன் நீ என்னால் மறக்கப்படுவதில்லை, உன்னை நான் மீட்டுக் கொள்ளும்படியாக ஆயத்தமாயிருக்கின்றேன். ஆனால் நீயோ உன் மனம் போன போக்கிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே உன் இஷ்டப்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றாயே. உன் பாவ வாழ்க்கை எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு என்னிடம் வா என்று தன் இரு கரம் நீட்டி அழைக்கின்றார்.


   பாவம் நிறைந்த இந்த உலகத்திலே பரிசுத்தம் நிறைந்தவர்களாக உண்மையுள்ளவர்களாக நேர்மை உடையவர்களாக வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. பொய் சொல்வது, லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது, பிறருக்கு விரோதமாகக் கோள்சொல்வது, ஏமாற்றுவது போன்ற காரியங்கள் தவறு என்றாலும் மக்கள் அதனைத் தவறு என்று உணராமல் பாவமான காரியங்களைச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டு வருகின்ற காலங்களிலே வாழ்ந்து கொண்டு வருகின்ற நம்மைப் பார்த்து தான் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆண்டவர் அழைக்கின்றார். நம்மிடமும் இப்படிப்பட்ட பாவமான காரியங்கள் காணப்படுமென்றால் நாம் ஆண்டவரிடத்தில் ஒப்புரவாகுவோம். அவரும் தம்முடையச் சொந்தப் பிள்ளைகளாக நம்மை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கின்றார். கிறிஸ்து பிறப்புப் பண்டிகையைக் கொண்டாடுகின்ற நம்முடைய உள்ளத்திலே மெய்யாகவே கிறிஸ்து பிறக்கும்படியாக ஆண்டவரிடம் மன்றாடுவோம். அவரும் நம்முடைய பாவங்களை மன்னித்து நித்திய சந்தோஷத்தையும் நித்திய சமாதானத்தையும் தர வல்லவராயிருக்கிறார்.


சிந்தனை: இயேசு என் உள்ளத்தில் வாசம் செய்கின்றாரா?


ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே என் பாவங்களையெல்லாம் மன்னித்து பரிசுத்தமாய் வாழ உதவி புரிந்தருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உதவி செய்தல்


வேத பகுதி: ரோமர் 15: 25 - 28

"மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;" ரோமர் 15: 26

மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் எருசலேமில் உள்ள ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்ததாக இந்தப் பகுதியிலே வாசிக்கின்றோம். இது ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நற்குணங்களை நமக்குக் காட்டுவதாக அமைந்துள்ளது. மக்கெதோனியா மற்றும் அகாயாவில் உள்ள விசுவாசிகள் எருசலேமில் உள்ள ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்யும் அளவிற்கு அவர்கள் பணக்காரர்கள் கிடையாது.  பவுல் 2 கொரிந்தியர் 8: 2 ல் மக்கெதோனியா திருச்சபைகளைக் குறித்துக் கூறும் போது "அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்." என்று குறிப்பிடுகின்றார்.


நமக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக வந்த மிஷனெரிகள் கூட பலர் தங்களது நாட்டில் உள்ள இடங்களை விற்று நம்முடைய தேசத்திலே திருச்சபைகளுக்காகவும் கல்வி நிறுவனங்களுக்காகவும் செலவு செய்தார்கள். ஆனால் நாம் அவைகளுடையப் பலன்களைப் பெற்றுக் கொண்டு நம்மைச் சுற்றி வாழுகின்ற கஷ்டப்படுகின்ற மக்களை, ஏழை மக்களைக் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு உதவி செய்யாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். சில நேரங்களில் சொந்த சகோதர சகோதரிகளுக்குக் கூட நம்மால் உதவி செய்கின்றத் தகுதி இருந்தும் கூட உதவி செய்ய மனம் கஷ்டப்படுகின்றது. இப்படிப்பட்டக் காரியங்களைத் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக நாம் நம்மைச் சுற்றி உள்ள கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவுவதைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். அதனையே மோசே மூலமாகக் கட்டளைகளாக இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்திருக்கின்றார். ஆகவே நாமும் நம்மாலான உதவிகளை நம்மைச் சுற்றிக் கஷ்டப்படுகின்ற மக்களுக்குச் செய்து ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்று கொள்ளுவோம்.


சிந்தனை: நாம் நம்மைச் சுற்றி உதவி தேவைப்பட்டு வாழ்கின்ற மக்களுக்கு உதவி செய்கின்றோமா?

ஜெபம்: அன்பு நிறைந்த ஆண்டவரே நான் உம்முடைய அன்பினை என்னில் காண்பிக்கும்படியாக உதவி தேவைப்பட்டு வாழ்கின்ற மக்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்யும்படி உதவி செய்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எல்லாம் நன்மைக்கே

வேத பகுதி: ஆதியாகமம் 50: 15 - 21


       அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா ; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ஆதியாகமம் 50: 19, 20



            சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்த மக்களை அரசி மேரி துன்புறுத்திய காலத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காகக் கைது செய்து காவலில் வைக்கப்பட்டார் பெர்னார்ட் கில்பின் (1517 - 1583) என்ற தேவ மனிதர். மரண தண்டனைக்காக லண்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் அவர் குதிரையிலிருந்த்து கீழே விழுந்து விட்டார். ஆனால் அவரோ எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அவர் கீழே விழுந்ததினால் பிரயாணம் சில நாட்கள் தடைபட்டது. மீண்டுமாக லண்டனுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் லண்டனை நெருங்கிய போது ஆலய மணி ஒலித்தது. விசாரித்த போது அரசி மேரி இறந்து விட்டார் சீர்திருத்தத் திருச்சபையினரை எரிப்பதும் நின்று விட்டதாகக் கூறினார்கள். கில்பின் காவலர்களிடம் எல்லாம் நன்மையாக நடந்தது என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.


        யோசேப்பினுடைய சகோதரர்கள் தங்களுடைய தகப்பன் மறைவிற்குப் பின்பு யோசேப்பு தங்களைப் பழி வாங்குவான் என்று எண்ணி யோசேப்பிடம் மன்றாடுகின்றார்கள். ஆனால் யோசேப்பு அவர்களைப் பார்த்து நீங்கள் எனகுத் தீங்கு செய்ய நினைத்தீர்கள் ஆனால் தேவனோ எல்லாவற்றையும் நன்மையாக மாற்றினார் என்று சொல்லி அவர்களைப் பாதுகாத்தான். நாமும் தேவனுக்குப் பயந்து அவருடையக் கற்பனைகளுக்குப் பயந்து நடக்கும் போது நமக்குத் துன்பங்கள் கஷ்டங்கள் வந்தாலும் தேவன் நமக்கு எல்லாவற்றையும் நன்மையாகச் செய்வார் என்று அவரை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமானால் கர்த்தர் நம்மையும் யோசேப்பைப் போல உயர்த்தி ஆசீர்வதிப்பார். அப்படிப்பட்டக் கிருபைகளை தேவன் நமக்குத் தந்து வழிநடத்துவாராக.



சிந்தனை: சோதனைகள் துன்பங்கள் கஷ்டங்கள் வரும்போது நாம் தேவனை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றோமா?



ஜெபம்: அன்பின் ஆண்டவரே எனக்குத் துன்பங்கள் கஷ்டங்கள் வருகின்ற வேளைகளில் நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொள்ள உதவி புரிந்தருளும். அதன் மூலமாக உம்மிடத்திலிருந்து பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள உதவியருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பழி வாங்குதல்

வேத பகுதி: ஆதியாகமம் 50: 15 - 21


"பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்."



          தென் ஆப்பிரிக்காவில் நிற வெறியால் கறுப்பினத்தவரை வெள்ளையர்கள் கொன்று குவித்தனர். ஒரு போலிஸ்காரர் ஒரு கறுப்பரையும் அவர் மகனையும் அவரது வீட்டுக்கு முன்பாகவே கொடூரமாகக் கொன்றார். ஆட்சி மாறிய பின்னர், வெள்ளைக் காரர்களைப் பழி வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தக் கறுப்பினப் பெண்ணிடம் போலீஸ்காரர் மன்னிப்புக் கேட்டார். அந்தப் பெண் அவரைப் பார்த்து, நான் நன்றாகச் சமைப்பேன், என் கணவரும் மகனும் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போது அவர்கள் இல்லாததால் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு விருந்திற்கு வர வேண்டும் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்தப் போலீஸ்காரர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.



      நமது ஆண்டவரும் நமக்கு எதிராகத் தீமைச் செய்பவர்களை நாம் மன்னிக்கும்படியாக விரும்புகிறார். பதவியும் அதிகாரங்களும் யோசேப்பிற்குக் கிடைத்த போதிலும் அவர் தனது சகோதரர் செய்த தவறுகளுக்காகப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக தனது சகோதரர்களிடம் நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள் ஆனால் தேவனோ அவைகளை நன்மையாக்கினார் என்று அவர்களிடம் பட்சமாய்ப் பேசினான். தேவனை நேசிக்கிறவர்களின் உள்ளம் அன்பினால் நிறைந்திருக்கும், அங்கே கசப்பிற்கோ, பழி வாங்குதலுக்கோ இடமில்லை. நமக்கு வாய்ப்புகள் வரும்போது நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களை மன்னிக்கும்படியாகவும் அவர்களிடம் அன்பு செலுத்தும்படியாகவும் தேவன் விரும்புகிறார். மாறாக நாம் அவர்களுக்கு எதிராகத் தீங்கு செய்வோமென்றால் இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற நற்குணங்கள் நம்மிடம் இல்லை. வெறும் வாய் அளவிலே மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு உள்ளத்தில் பகை உணர்வோடு இருக்கும் குணத்தையும் ஆண்டவர் விரும்பவில்லை. யோசேப்பைப் போல மன்னிப்பதோடு மட்டுமில்லாமல் தீங்கு செய்த தன்னுடையச் சகோதரர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யவே ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். நாம் எப்படிப்பட்ட குணம் உடையவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.



சிந்தனை: "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்" ரோமர் 12 : 19



ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே, பழி வாங்கும் குணத்தை என்னிலிருந்து எடுத்துப் போட்டு உம்முடையை நல்லாவியை எனக்குள்ளாகத் தந்து நான் பரிசுத்தமாயும் உமக்குப் பிரியமாயும் வாழ உதவி புரிந்தருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

முயற்சி செய்

வேத பகுதி: ஆதியாகமம் 26:12

"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;" ஆதியாகமம் 26:12

ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமைப் போல ஆண்டவரிடம் மிகுந்த பக்தி உடையவனாக வாழ்ந்து வந்தான். இந்த நிலையில் தேசத்திலே பஞ்சம் வந்தது. ஆகவே அவன் பெலிஸ்தரின் தேசத்திற்கு வருகின்றான். தேசத்திலே வறட்சியான நிலையிலும் கர்த்தர் மேல் தன்னுடைய பாரத்தை வைத்து விதை விதைத்து முயற்சி எடுக்கிறான். வறட்சியான நிலைமையிலும் கர்த்தர் அவன் விதைத்ததை ஆசீர்வதித்ததினால் அவன் நூறு மடங்கு பலனைப் பெற்றுக் கொள்ளுகின்றான்.

நம்முடைய தேவன் நல்லவர். அவர் தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களை தள்ளி விடுவதில்லை. தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்கள் அவருக்குப் பிரியமாய் வாழ்ந்து உழைக்கும் போது கர்த்தர் அவர்களை  ஆசீர்வதித்து உயர்த்த வல்லவராயிருக்கிறார். எந்த முயற்ச்சியும் செய்யாமல் சோம்பலாயிருக்கிறவர்களுக்கு அவர் உதவுவதில்லை. நாமும் கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்ந்து வரும்போது நம்முடைய முயற்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து நன்மையினால் நடத்துவார்.

சிந்தனை: "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்." நீதிமொழிகள் 21:31 

ஜெபம்: அன்பு நிறைந்த நல்ல ஆண்டவரே நான் உமக்குப் பிரியமாய் நடந்து கடினமாக உழைத்து உம்மிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உதவியருளும். என்னில் உள்ள சோம்பலை மாற்றி சுறுசுறுப்பைத் தந்தருளும். ஆமேன். 

தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யாருக்கு ஞானம்

வேத பகுதி: பிரசங்கி 2: 26

"தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்" பிரசங்கி 2: 26

பாவமான இந்த உலகில் நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் தேவன் தனக்குப் பயந்து பிரியமானவர்களாய் நடப்பவர்களுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். கர்த்தர் நமக்குத் தந்திருக்கிற அவருடைய எல்லாக் கட்டளைகளையும் நியாயங்களையும் நாம் கைக்கொண்டு நடக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தையும் அறிவையும் தர வல்லவராயிருக்கிறார்.

வேதாகமத்தில் பார்ப்போமென்றால் தானியேலும் அவனது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்பவர்கள் போஜன பதார்த்தத்தினாலும் திராட்சைரசம் மற்றும் மதுபானங்களாலும் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் பரிசுத்தமாய் வாழ்ந்தபடியினால் தேவன் அவர்களுக்கு விஷேசித்த ஞானத்தையும் அறிவையும் புத்தியையும் கொடுத்து உயர்ந்த இடங்களில் அவர்களை வைத்து ஆசீர்வதித்தார். நாமும் ஆண்டவருடையை வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் வாழும் போது நம்மையும் ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிரார்

சிந்தனை: நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாயிருக்கிறோமா?

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே நான் உம்முடைய பார்வைக்குப் பிரியமாய் நடந்து உம்மிடத்தில் இருந்து உன்னதமான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அருள் புரியும். எங்கள் ஆண்டவர் இயேசுவின் மூலம் வேண்டிக்கோள்கிறோம் நல்ல. பிதாவே. ஆமேன்

தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்