சோதனை

"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்." 1 பேதுரு 1 : 7

           உலக வாழ்க்கையிலே மனிதனுக்குப் பலவித வகைகளிலே சோதனைகள் ஏற்படுகின்றது. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளை மேற்கொண்டு தேவனின் துணை கொண்டு அவைகளை ஜெயித்து வாழும்படியாக நம்மை இந்த உலகத்தில் படைத்திருக்கின்றார். தேவனுடைய மனிதர்கள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை ஜெயித்து கர்த்தரின் நாம மகிமைக்காக இந்த உலகத்திலே சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். ஆபிரகாமுடைய வாழ்க்கையிலும் அவனுடைய விசுவாசத்திற்கும் சோதனை ஏற்பட்டது. ஈசாக்கினிடத்திலே உன்னுடைய சந்ததி விளங்கும், ஈசாக்கின் மூலமாக கடற்கரை மணலத்தனையாய் ஜனங்கள் உருவாகுவார்கள் என்று கர்த்தர் ஆபிரகாமினிடத்தில் வாக்குத்தத்தமாகக் குறிப்பிட்டார். ஆனால் ஆபிரகாமைக் கர்த்தர் அழைத்து ஈசாக்கை எனக்காகப் பலியிடு என்று கூறினார். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று விசுவாசித்து ஈசாக்கைப் பலியிடக் கூட்டிக்கொண்டு சென்றான். தேவதூதன் அங்குத் தரிசனமாகி உன்னுடைய ஏகசுதன் என்றும் பாராமல் எனக்கென்று பலியிட ஒப்புக்கொடுத்தபடியால் நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதித்து ஈசாக்கையும் தப்புவித்தார்.

          மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்திலும் பேதுரு நம்முடைய விசுவாசமும் சோதிக்கப்படும் என்று குறிப்பிடுகின்றார். பொன் எப்படி நிலத்தில் இருந்து பலவிதப் பொருள்களுடன் சேர்ந்து வெட்டி எடுக்கப்பட்டடு பின்பு அக்கினி மற்றும் பலவிதமானக் செயல்பாடுகளின் மூலமாக மின்னும் பொன்னாக உருவாக்கப்படுகின்றதோ அதேப் போல நாம் ஆண்டவர் மேல் வைத்துள்ள நமது நம்பிக்கையும் பலவிதமானச் சோதனைகளின் மூலமாகச் சோதிக்கப்படும். கர்த்தர் நமக்குப் பல வேலைகளில் வாக்குத்தத்தங்களை வேத வசனங்கள் மூலமாகத் தருகின்றார். பல வேலைகளில் கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்கு எதிராக நடப்பது போலத் தோன்றலாம். ஆனால் நாம் வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு விசுவாசமாக இருப்போமேன்றால் ஆபிரகாமின் வாழ்க்கையில் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றின ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். நாம் விசுவாசத்தில் மேலும் உறுதியாக நிலைத்திருக்கும் போது நமக்குப் பரலோக வாழ்வின் ஆனந்தத்தையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: நான் தேவன் மேல் வைத்துள்ள விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கின்றேனா?

ஜெபம்: அன்பு நிறைந்த ஆண்டவரே, என்னுடைய வாழ்விலே சோதனைகள் வரும்போது நீர் எனக்குத் தந்த வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டவனாக விசுவாசத்தில் நிலைத்திருந்து பரலோக வாழ்வைப் பெற்றுக் கொள்ள உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்