எதில் கைதேர்ந்தவர்கள்

வேதபகுதி:மீகா 7:3

பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும். வசனம் .3





தீமை செய்வதில் இவ்வுலகத்தார் கைதேர்ந்தவர்கள். சுரண்டல் நிறைந்த உலகம் அரசியல், அதிகாரம், மதம், இனம், ஜாதி, வியாபாரம் போன்ற போர்வைகளை போட்டு மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாது என் நினைத்துக் கொண்டு சுரண்டி வாழும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எள்ளளவும் கூட சுரண்டாமல் உலகத்தில் உண்மையாக வாழமுடியாது என்று சவால் விடும் மக்களுக்கிடையில் கிறிஸ்தவராகிய நம்முடைய பதில் என்னவாக இருக்கும்.



ஒரு வேளை பணப்ப்ரிமாறாம் கணிணி மூலமாக நாணயமாக நடைபெறும் என்று எதிர்பார்த்தவர்கள் சைபர் க்ரைம் மிகுதியாகி தத்தளிக்கிறார்கள். எங்கு என்ன வேலை ஆக வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் நடக்காது. என்ன செய்வது? அஹா! லஞ்ச ஒழிப்பிற்கு சட்டங்கள் தான் எத்தனை. பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒரு சமுதாயம். கண்களை மூடி உலகத்துக்கு ஒத்துப் போகனுமா அல்லது எதிர் நீச்சல் போடமுடியுமா? என்ன தீர்மானிக்கப் போகிறீர்கள். முதலாவது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள்.





சிந்தனை: தீமை செய்ய நாடுதென்றன் திருக்குநெஞ்சமே
மருள் தீர்க்கும் தஞ்சமே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே.


ஜெபம்: தூய ஆவியானவரே, எங்கள் பொல்லாத செயகளை மன்னித்து , இந்த மாயமான உலகத்தில் பரிசுத்தமாய் ஜீவிக்க அருள் புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆசிர்வாதக் குறைவு

வேதபகுதி:மீகா 6:13 - 16

நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய். வசனம். 14





சாப்பாட்டால் அநேகருக்குப் பிரச்சனை உண்டு. சிலருக்கு இனிப்பு சாப்பிடக்கூடாது, காரணம் சர்க்கரை வியாதி. சிலருக்கு பானை வயிறு என்பார்கள், கொஞ்சம் சாப்பிட்டாலும் எப்பொழுதும் வயிறு பெரிதாகவே இருக்கும். சிலரை நாய் வயிறு என்பார்கள், நாய் சாப்பிட்டுத் திருப்தியானாலும் இன்னும் ஆகாரம் இருக்குமானால் எதாவது ஒரு நாய் வருகிறதென்றால் அதைத் தின்ன விடாமல் இது வேகமாக அதைத் தின்ன ஆரம்பிக்கும், ஆனால் வயிறு பெரிதாகத் தெரியாது.



ஆனால் கடவுளின் ஆசிர்வாதம் மட்டுமே நம்மை திருப்தியடையச் செய்கிறது. உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்கீதம் 65:4) என்று தாவீது சொல்லுகிறார். அப்படியானால் தேவ ஆலயம் அது பரிசுத்தமானது, அது ஆண்டவரின் வீடு, அங்கே நமக்கு நன்மையும் திருப்தியும் உண்டாகிறது. நாம் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்கிறோமா? ஆலயத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? திருமணம் போன்ற காரியங்களுக்கா? இல்லை கல்வி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் படிப்பதற்கான இடம் கிடைப்பதற்கா? இல்லை கமிட்டிகளில் பதவி வகிப்பதற்கா? இல்லை ஊழியக்காரர்களைப் பற்றிக் குறை கூறுவதற்கா? இல்லை ஆலயக் காரியங்களில் ஈடுபடுபவர்களை பற்றிக் கேலி பேசுகிறவர்களாக இருக்கிறோமா?. இப்படிப் பட்டக் காரியங்கள் நமக்கு ஆசிர்வாதக் குறைவைத் தான் கொண்டு வரும்.ஆனால் பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரைத் தொழுது கொண்டால் நமக்கு ஆசிர்வாதமே.



ஆலயத்திற்கு தசமபாகம் கொடுக்கும் போது இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசிர்வாதத்தைத் தருவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார் (மல்கியா 3:10). உற்சாகமாய்க் கொடுத்தால் தேவன் நம் மேல் பிரியமாய் இருப்பாரே. ஆகவே ஆலயத்திற்குக் கொடுப்போம். ஆண்டவரின் ஆசிர்வாதம் பெறுவோம்.




சிந்தனை: ஆலயம் தொழுவது சாலமும் நன்று.


ஜெபம்: உம்முடைய ஆலயத்தின் நன்மையால் என்னை திருப்தியாக்கி ஆசிர்வதியும் ஆண்டவரே. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் சுத்தமுள்ளவன்

வேதபகுதி:மீகா 6:9 - 12

கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? வசனம். 11





யோசுவா ஜனங்களை நோக்கி, உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதம் செய்வார் என்றான் (யோசுவா 3:5). அவ்விதம் அவர்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு யோர்தானைக் கடக்க முயன்றார்கள். அப்பொழுது அது இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. நாமும் ஆண்டவருக்கு முன்பாகப் பரிசுத்தமாக வாழ்ந்தால் அற்புதம் காணமுடியும்.



"புறத்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.



பரிசுத்தம் என்பது முழுவதும் சுத்தம் அதாவது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை. புறத்தூய்மை குளித்தல், கழுவுதல் போன்றவற்றால் அமைகிறது. ஆனால் அகத்தூய்மை, மனதை சுத்தப்படுத்துவது. இயேசுவின் இரத்தம் நம்மை சகல பாவத்திலிருந்தும் சுத்திகரிக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் தேவனைத் தரிசிக்கமுடியும். தேவ வல்லமையையும் அற்புதங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவேதான் தாவீது தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் என்கிறார். இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன். அதன் முடிவு நித்திய ஜீவனாகும் (ரோமர் 6:22). கைகளில் சுத்தம் மற்றும் இருதயத்தில் சுத்தமுள்ளவனே கர்த்தருடைய பர்வதத்தில் எற முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு அநேக ஆசிர்வாதங்கள் இருப்பதால் நாமும் அதைப் பெற்றுக் கொண்டுத் தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.




சிந்தனை: பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்.


ஜெபம்: தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியால் என்னைப் புதுப்பித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மனத்தாழ்மை

"உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்." மீகா 6:8 




யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா எரேமியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்புச் செய்து தேவ ஆலயத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தவில்லை. ஆகவே கர்த்தர் அவனையும் அவன் தேசத்தையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் ஒப்படைத்தார். அவன் பலரைக் கொன்று தேவாலயத்தை அழித்து ராஜாவை சிறைபிடித்தான்.


மேன்மைக்கு முன்னானது தாழ்மை; விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை என சாலமோன் ராஜா கூறுகிறார். வாழ்க்கையில் உயர்வு வேண்டுமா? நம்மை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்த வேண்டும். பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபிக்கும் போது, தன்னைத் தாழ்த்தின ஆயக்காரனை ஆண்டவர் நீதிமானாக்கி உயர்த்தினார். பெருமைபட்டுக் கொண்ட பரிசேயனை வெறுமையாக அனுப்பினார் அல்லவா நம் ஆண்டவர். நான் கட்டிய மகா பாபிலோன் என்று நேபுகாத்நேச்சார் ராஜா தன்னை உயர்த்தியபொழுது, ஆண்டவர் அவனை மனிதனின்று தள்ளினாரே. கிறிஸ்து தன்னை மரண பரியந்தம் தாழ்த்தியதால் நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்க வேண்டும். கடவுள் நம்மை உயர்த்தும் போது ஒருவரும் அதைத் தடுக்க இயலாது. நம் வாழ்க்கையில் நாம் உயர வேண்டுமானல் நம்மை ஆண்டவருக்கு முன்பாகத் தாழ்த்த வேண்டும். ஆண்டவர் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். நாமும் ஆண்டவர் கிருபையைப் பெற்றுக் கொள்ளலாமே.



சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான்.

ஜெபம்: தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கும் ஆண்டவரே என்னை உம்மிடம் தாழ்த்துகிறேன். என் வாழ்வை வளமாக்கும். ஆமேன்.


ஆண்டவரின் பிரியம்

"ஆயிரங்களான ஆட்டுக் கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?. "மீகா 6:7


ஒரு நாள் இயேசு மார்த்தாள் வீட்டிற்குச் சென்றார். அவள் இயேசுவுக்கு விருப்பமான சுவையான பலகாரங்கள் கொடுக்க வேண்டும் என்று பல வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். ஆனால் அவள் சகோதரி மரியாள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள், மார்த்தாள் இயேசுவிடம் மரியாளைப் பற்றி குறை சொல்லும் போது மரியாள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். இயேசுவுக்கு உபசரணையை விட அவர் வார்த்தையைக் கேட்பதுவே அவருக்குப் பிரியம் என்பதை உணர்த்தினார்..


இங்கே மீகா ஆண்டவருக்கு எது பிரியம் என்ற கேள்வியை எழுப்புகிறார். ஆண்டவரை எப்படி ஆராதிக்க வேண்டும்? எப்படி ஆராதித்தால் ஆண்டவர் பிரியப்படுவார் என்பதே அதன் அர்த்தம். இன்றும் ஆண்டவரை பல வழிகளில் ஆராதிக்கிறோம். சிலர் ஆண்டவரை கெம்பீர சத்தமாய் ஆராதிக்கிறோம். வேறுசிலர் ஆண்டவரை அமைதியாகவும், சிலர் ஒழுங்கு முறைகளோடும் ஆராதிக்கிறார்கள். சிலர் ஆண்டவருக்கு உருவம் வைத்து ஆராதிக்கிறார்கள். ஆண்டவருக்கு எது பிரியம்? நம்மைப் பார்த்து ஒருவேளை இப்படிச் சொல்லுவாரோ? இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து உதட்டினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகி இருக்கிறது(மத்தேயு 15:8). நாம் எப்படி ஆண்டவரை ஆராதிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.



சிந்தனை: நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1.

ஜெபம்: என்னை ஜீவ பலியாக உமக்கு ஒப்புவிக்கிறேன், எற்றுக் கொண்டு வழி நடத்தும் ஆண்டவரே.


நீதிகளை நினை

"நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்து கொள்ளும்படி நினைத்துக் கொள்." மீகா 6:5


ஒரு ராஜா தன்னிடம் 10,000 ரூபாய் கடன் பட்டவனை அழைத்து நீ இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்து என்றான். ஆனால் அவனோ ஐயா நான் ஒரு ஏழை, திடுப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன், இன்னும் ஒரு வருடத்தில் அதைத் திரும்பச் செலுத்தி விடுகிறேன் என்றான். ஆனால் அந்த ராஜா அவன் கடனை மன்னித்து நீ திரும்பச் செலுத்த வேண்டாம், அது உனக்கு நன்கொடையாகட்டும் என்றார். ஆனால் அவனோ தன் எதிரே வந்த தன்னிடம் 100 ரூபாய் கடன் பட்டவனை அதைக் கொடுத்துத் தீர்க்கும் வரை காவல் துறையிடம் ஒப்படைத்தான். இதை அறிந்த ராஜா அவனை அழைத்து தாம் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கி இவனையும் சிறையில் அடைத்தான்.


ஆண்டவர் நமக்குப் பாராட்டிய நன்மைகளை நினைவு கூற வேண்டும். மனுஷருடைய தப்பிதங்களை நாம் மன்னிக்காவிட்டால் நாமும் கடவுளின் மன்னிப்பை இழந்து விடுவோம். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூற வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கர்த்தருடைய நீதியை நிலை நாட்டுவோம்.



சிந்தனை: கடவுள் பூரண சற்குணர். நாமும் பூரண சற்குணராயிருப்போம்.

ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். ஆமேன்.

என் துயரம்

"என் ஜனமே, நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்?"மீகா 6:3


மனிதன் ஏன் கவலைப்படுகிறான்? கவலைக்குக் காரணமே இருப்பதில்லை. யோனாவுக்கு ஆமணக்குச் செடி பட்டுப் போனதைக் குறித்துக் கவலை. மார்த்தாளுக்கு மரியாள் உதவவில்லை என்ற கவலை. சிலருக்கு எதிராளி நன்றாக இருக்கிறானே என்ற கவலை. இவ்வசனம் கூறும் விசனம்(கவலை) என்ன? தவறு செய்த மனிதன் எப்படி ஆண்டவரோடு ஒப்புரவாகலாம் என்ற கவலைதான் காரணம். இது நியாயமானதுதானா? தவறு செய்யும் முன்பு அல்லவா இதை யோசிக்க வேண்டும். ஆனாலும் ஆண்டவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவர். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்(சங்கீதம் 103:12). உன் பாவங்களை நினைக்க மாட்டேன் என்றும் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படியானல் இது வீண் கவலை. வாருங்கள் என்னிடம் என்று அழைக்கும் ஆண்டவரிடம் பாரங்களை இறக்கி வைப்பது அல்லவா நம் வேலை. நாம் ஏன் தேவை இல்லாததைச் சுமப்பானேன்.



சிந்தனை: தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள். 28:13

ஜெபம்: என் பாவங்களை உமது தூய இரத்தத்தால் கழுவி பரிசுத்தப்படுத்தும் ஆண்டவரே. ஆமேன்.