ஆலோசனையில் பெரியவர்

"அவர்(கர்த்தர்) ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்." ஏசாயா 28:29





நமது தேவனுக்கு இன்னொரு பெயர் ஆலோசனைக் கர்த்தர் என்பதாகும். இறைவன் கொடுக்கும் ஆலோசனைகள் ஆச்சரியமானவை அதிசயமானவை. ஆனால் நாமோ அவைகளைக் கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் முயல்வதில்லை. அவருடைய ஆலோசனைகளுக்குச் செவி கொடுத்து அதின்படி நடக்கும்போது அவைகளின் முடிவோ நாம் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அரிய காரியங்களைச் செயல்படுத்துவார். ஆனால் நாமோ இறைவனுடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுப்பதில்லை.







மோசேயும் தன்னுடைய வாழ்வில் ஒரு சோதனையைச் சந்திக்க நேரிட்டது. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானானுக்கு வழிநடத்திச் செல்லுகின்ற வழியிலே காதேசிலே தண்ணீர் இல்லாதிருந்தது. கர்த்தர் மோசேயினிடமும் ஆரோனிடமும் தேவனுடையக் கோலை எடுத்துக் கொண்டு கன்மலையிடம் பேசுங்கள் என்று சொன்னார். ஆனால் அவர்களோ கன்மலையை அடித்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைத்தது ஆனால் மோசேக்கும் ஆரோனுக்கும் கானானுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை.



இறைவனுடைய ஆலோசனைகளை நாமும் பெற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து இறைவனுடைய சன்னிதியில் காத்திருப்போமானால் அவர் தமது ஆலோசனைகளை தரிசனங்களின் மூலமாகவோ அல்லது வேதவசனங்களின் மூலமாகவோ நமக்கு அருளிச் செய்வார். தேவ சன்னிதியில் நாமும் காத்திருந்து ஜெபிப்போம் கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்வார்.







சிந்தனை: நான் தேவனுடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுக்கின்றேனா?





ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடைய ஆலோசனைகளுக்குச் செவிகொடுத்து அதன்படி நடக்கக் கிருபை செய்யும். ஆமேன்.







தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்