எஸ்தரின் உயர்வு

                   "ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது@ ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்." எஸ்தர் 2: 17

            யூதா தேசத்தில் இருந்து பாபிலோனுக்கு அகதியாகக் கொண்டு வரப்பட்ட எஸ்தர் என்ற மறுபெயர் உடைய அத்சாள் 127 நாடுகளின் அரசியாக உயர்த்தப்பட்டாள். அந்த எஸ்தர் உயர்த்தப்பட எஸ்தரிடன் காணப்பட்ட நல்ல குணங்கள்

1. திருப்தியான வாழ்வு:

                  எஸ்தர் தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்விலே திருப்தியாக வாழ்ந்து வந்தாள். எஸ்தர் அரசரின் கன்னிமாடத்திலே இருக்கின்றபோது ராஜாவின் பிரதானி நியமித்த காரியங்களைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை(எஸ்தர் 2:15). எஸ்தர் நினைத்திருந்தால் எனக்கு விதவிதமான அணிகலன்கள் வேண்டும், விதவிதமான ஆடைகள் வேண்டும் என்று கேட்டிருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும், ஆனாலும் தனக்குக் கிடைத்தவற்றில் திருப்தியாகத் தன்னை அலங்கரித்து ராஜாவினிடத்தில் சென்றாள்.

2.கீழ்ப்படிதல்

      எஸ்தர் தன்னை வளர்த்த தன்னுடைய வளர்புத் தகப்பனாகிய மொர்தேக்காய்க்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து நடந்து வந்தாள் (எஸ்தர் 2:20). எஸ்தர் அரண்மனைக்குச் சென்ற போதிலும் அரண்மனை வாயில்காப்பானான மொர்தேக்காயின் சொற்படி நடந்து வந்தாள். கீழ்ப்படிதல் இருந்தால் தான் மேல்படிக்குச் செல்ல முடியும். பிள்ளைகளே உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் இது நியாயம்(எபேசியர் 6: 1).

3. விசாரிக்கின்ற குணம்:

        மொர்தேக்காய் இரட்டுடுத்தி அரண்மனை வாயிலின் முகப்பிலே இருக்கின்றான் என்பதை எஸ்தர் அறிந்தவுடன் உடனடியாக அவனுக்கு வஸ்திரங்களை அனுப்புகின்றாள். மொர்தேக்காய் எஸ்தர் அனுப்பிய வஸ்திரங்களைத் திருப்பி அனுப்பினாலும் அவன் எப்படியும் இருந்து விட்டுப் போகின்ற்றான் என்று விட்டுவிடாமல் தன்னுடையப் பிரதானியை அனுப்பி காரியம் என்ன என்று விசாரித்து அறிகின்றாள்(எஸ்தர் 4:5)

4.உபவாசித்து ஜெபிக்கின்ற குணம்:

                   எஸ்தர் தன்னுடைய எல்லாக் காரியங்களிலும் உபவாசித்து ஜெபித்து ஜெயத்தை சுதந்தரிக்கின்றப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அரசரைப் பார்க்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும் ஆனால் எஸ்தர் உபவாசித்து ஜெபித்துச் சென்றதினால் அரசரின் கண்களில் தேவன் தயவு கிடைக்கப் பண்ணினார்.

Queen Esther

5. புத்தியுள்ள பெண்:

       எஸ்தர் பொறுமையாகச் செயல்பட்டு புத்திசாலிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். அரசரை சந்தித்ததும் நேரடியாக ஆமானைக் குறை சொல்லாமல் விருந்திற்கு அழைத்து அரசரிடம் காரியத்தை விவரிக்கின்றாள். புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள்(நீதிமொழிகள் 14:1)


                  இப்படிப்பட்ட நல்ல குணங்கள் எஸ்தரினிடத்தில் காணப்பட்டதினால் தான் அகதியான எஸ்தர் அரசியாக உயர்த்தப்பட்டாள்

சிந்தனை: எஸ்தரிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள் என்னில் காணப்படுகின்றதா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எஸ்தரிடத்தில் காணப்பட்ட இந்த நல்ல குணங்களை எனக்குத் தந்து நானும் உமக்குப் பிரியமாக வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்தவும், நானும் தாழ்வின் நிலைமையில் இருந்து உயர்வைப் பெற்றுக் கொள்ளவும், உயர்ந்த நிலையைப் பெற்ற பின்பும் தாழ்மையாய் நடந்து கொள்ளவும் கிருபை செய்தருளும். ஆமேன்