பரிசுத்தம்


வேத பகுதி: 1 தெசலோனிக்கேயர் 4

"தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." 1தெசலோனிக்கேயர் 4: 7


இறைவன் நம்மை இந்த உலகத்தில் படைத்தது நாம் பரிசுத்தமானவர்களாக வாழ்ந்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காகத்தான். ஆனால் ஆதாம் ஏவாள் முதற்கொண்டு நாம் அனைவரும் தவறுகளைச் செய்து பரிசுத்தம் இல்லாதவர்களாகத் தான் வாழ்ந்து வருகின்றோம். அதைத் தான் பவுல் தெசலோனிக்கே மக்களுக்கு எழுதும் போது தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். பாவம் நிறைந்த இந்த உலகத்திலே பரிசுத்தமாக வாழ்வது மிகவும் கடினமான காரியமாக இருந்த்தாலும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அர்ப்பணித்து அவருடைய இரத்தத்தால் கழுவப்படும் போது நாம் பரிசுத்தமாக வாழ அவர் பெலன் தருகின்றார்.

பவுல் இந்த அதிகாரத்திலே தேவனுக்குப் பிரியமாய் இருக்க வேண்டும், வேசித்தனத்திற்கு விலக வேண்டும் ,மோக இச்சைக்குட்படாமல் சரீரத்தை பரிசுத்தமாக ஆண்டு கொள்ள வேண்டும், சகோதரனை வஞ்சியாமல் இருக்க வேண்டும், மனிதரை அசட்டை பண்ணக் கூடாது,அன்பாயிருக்க வேண்டும், அமைதலாயிருக்க வேண்டும் போன்ற காரியங்களைக் குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்ட காரியங்களை நாம் கைக்கொண்டு வாழும் போது நாமும் இந்த உலகத்தின் அசுத்தங்களை உதறித் தள்ளி விட்டுப் பரிசுத்தமாக வாழ முடியும்.


சிந்தனை: நாம் பரிசுத்தமாக வாழ்கின்றோமா?


ஜெபம்: நல்ல ஆண்டவரே, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் நான் பரிசுத்தமாக வாழ உதவி புரியும். ஆமேன்.