வழி நடத்தும் தேவன்

"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." சங்கீதம் 37:5





நமது ஆண்டவர் நம்மை முன்சென்று வழிநடத்தும் தேவனாயிருக்கின்றார். அவர் நம்மை நேரானப் பாதையிலே நல்ல மேய்ப்பனாக வழிநடத்துகின்றார். நாம் செல்ல வேண்டியப் பாதை எதுவோ அதனை நமக்குக் காட்டி நம்மை வழிநடத்துகின்றார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டு வரும் போது கர்த்தர் செங்கடலின் வழியாக அவர்களை நடத்துகின்றார். கர்த்தர் அவர்களை குறுக்கான வழியிலே நடத்தியிருக்கலாம். அப்படி நடத்தியிருந்தால் எகிப்தின் சேனைகளினால் பிடிபட்டுப் போயிருப்பார்கள். நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவருடையச் சித்ததிற்கு நம்மை கையளிப்போமானால் கர்த்தர் நம்முடையக் காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். நாம் செய்ய வேண்டியது நம்முடையப் பாரங்கள் எல்லாவற்றையும் அவருடைய சமூகத்தில் ஊற்றி விட வேண்டும். அநேகர் இதனைச் செய்ய மறந்து விடுகின்றனர். பின்னர் நான் கர்த்தருக்குப் பயந்து நடக்கின்றேனே ஏன் எனக்கு இந்தக் காரியம் ஏற்பட்டது என்று புலம்புகிறார்கள்.




ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக எனது உயரதிகாரி தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். அவர் தான் தங்கியிருக்கும் இடத்தின் முகவரியைக் கொடுத்து அங்கு வந்து பார்க்கும்படியாகச் சொன்னார். எனக்கோ அந்த இடமோ தெரியாது. நான் புறபட்டவுடன் ஆண்டவரே எனக்கு இடம் தெரியாது நீரே என்னை நேர் வழியிலே நடத்தி சரியான இடத்திற்குச் செல்லத் துணை புரியும் என்று ஜெபித்துவிட்டுக் கிளம்பினேன். யாரிடமும் அந்த முகவரியைக் குறித்து விசாரிக்கவில்லை. ஆனால் நான் பல்வேறு சாலைகளைக் கடந்து செல்லுகின்றேன் எனக்குச் சிறிது சந்தேகம் நான் சரியானப் பாதையிலேச் செலுகின்றேனா என்று ஆனால் முடிவிலே நான் செல்லவேண்டிய முகவரிக்கு நேராகக் கர்த்தர் என்னை வழிநடத்தினார். ஆம் பிரியமானவர்களே நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன்பாகவும் ஜெபித்துச் செயல்படுவோமானால் கர்த்தர் நம்முடையக் காரியங்களை ஜெயமாக முடியப்பண்ணுவார்.





சிந்தனை: நான் என்னுடையக் காரியங்களை முதலாவதாகத் தேவனுக்குத் தெரியப்படுத்துகின்றேனா?


ஜெபம்:
கர்தாவே நான் எல்லாக் காரியங்களையும் முதலாவதாக உமக்குத் தெரியப்படுத்தி அதன் மூலமாக ஜெயமாகக் காரியங்களை முடிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்