நன்மை

"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ரோமர் 8 :28


யோசேப்பின் வாழ்க்கையை நாம் உற்று நோக்குவோமானால் அவன் தன்னுடையச் சகோதரர்களால் எகிப்துக்குச் செல்லும் வியாபாரிகளிடம் விற்கப்பட்டான். அவனை அவர்கள் எகிப்து அதிகாரியான போத்திபாரினிடத்தில் விற்றுப்போட்டார்கள். அங்கு போத்திபாரின் மனைவியின் பேச்சிற்கு இணங்கிப் பாவம் செய்யாமல் தேவனுக்குப் பயந்து நடந்ததினால் சிறையில் அடைக்கப்பட்டான். தேவன் சிறைச்சாலைத் தலைவன் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார். பார்வோன் கண்டச் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னதின் விளைவாக எகிப்து நாட்டிற்கு அதிபதியாக்கப்பட்டான். உலகமெங்கும் பஞ்சம் ஏற்பட்டதினால் யோசேப்பின் சகோதரர்கள் தானியம் வாங்க வருகிறார்கள். தன்னுடையச் சகோதரர்களிடம் தன்னை வெளிப்படுத்தும் போது நீங்கள் என்னை விற்றுப்போட்டதற்காக வருத்தப்பட வேண்டாம் தேவன் அநேக ஜனங்களைக் காக்கும்படி எல்லாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணினார் என்று தேவனை மகிமைப்படுத்தினான்.



ஆம் பிரியமானவர்களே நமக்குத் துன்பங்கள் துயரங்கள் வருகின்ற நேரங்களிலெல்லாம் நாம் தேவனை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு அவருடைய சித்தத்தின்படி நடக்கும் போது அவர் நமக்கு நேரிட்டுள்ள துன்பங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றி நம்மை மற்ற மனிதர்களுக்கு முன்பாக நம்மை உயர்த்துவார். யோபுவின் வாழ்க்கையிலும் இது தான் நடந்தது, யோபு தன்னுடைய துன்ப நேரத்திலும் தேவனை மறுதலிக்கவோ தூஷிக்கவொ இல்லை. எனவே தேவன் அவருடையத் துன்பங்கள் எல்லாவற்றையும் மாற்றி அவருடைய வாழ்க்கையிலே இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்தருளினார். நாம் நம்முடையத் துன்ப வேளைகளிலே எப்படி நடக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்.




சிந்தனை: நாம் நமது துன்ப வேளைகளில் தேவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது தேவனைத் தானே நான் நம்பியிருக்கின்றேன் எனக்கு ஏன் துன்பம் வருகின்றது என்று முறுமுறுக்கின்றோமா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையக் கஷ்ட வேளைகளிலும் துன்ப வேளைகளிலும் உம்மை விடாமல் பற்றிக் கொள்ளக் கிருபைகளைத் தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்