சொன்னதைச் செய்யும் தேவன்

"கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று." யோசுவா 21:45

கர்த்தராகிய தேவன் ஆபிரகாமோடே நான் கானான் தேசத்தை உன்னுடைய சந்ததிக்குத் தருவேன் என்று வாக்கு பண்ணினார். அந்த வாக்குத்தத்தம் சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின்பாக நிறைவேறியது. ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிறைவேறிற்று. ஆண்டவர் நம்முடைய வாழ்விலும் பல்வேறு வாக்குத்ததங்களைத் தருகின்றார் ஆனால் அவைகள் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் நம்முடைய நல்நடக்கைகளில் தான் உள்ளது. வாக்குத்தத்தங்களை ஆண்டவர் கீழ்க்கண்டவாறு நிறைவேற்றுகின்றார்.

1.உடனடியாக கிடைக்கும் ஆசீர்வாதம்:
கர்த்தர் நோவாவை நோக்கி நான் பூமியை அழிக்கப் போகின்றேன் உன்னையும் உன் சந்ததியையும் காப்பதற்காகப் பேழையைக் கட்டு என்றுக் கூறினார். நோவா ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினால் உலகத்தின் அழிவினிற்று அவனும் அவனுடையக் குடும்பமும் காக்கப்படுகின்ற்றது. நோவாவின் சந்ததியினால் பூமியில் வம்சங்கள் உண்டாயின.

2. தாமதமாகக் கிடைக்கும் ஆசீர்வாதம்:
கர்த்தர் ஆபிரகாமோடே வாக்குத்தத்தம்பண்ணி நீ கால்மிதிக்கும் தேசத்தையெல்லாம் உன் சந்ததிக்குச் சுதந்திரமாகத் தருவேன் அவர்கள் 400 வருடங்கள் அந்நிய தேசத்திலே அடிமைகளாக இருப்பார்கள். அதன்பின்பு கானான் தேசாத்தைச் சுதந்தரிப்பார்கள் என்று சொன்னார். எகிப்து தேசத்திலே ஆண்டவரை மறந்து சேவித்து உபத்திரவத்தின் போது ஆண்டவரைத் தேடினார்கள் ஆண்டவர் ஆபிரகாமுக்குச் சொன்ன வாக்குத்ததை நினைத்து மோசேயை அனுப்பினார். பின்னும் பிரயாணங்களிலே ஆண்டவரைக் கோபப்படுத்தினதினால் மேலும் நாற்பது ஆஅண்டுகாலம் தாமதமாக கானானைச் சுதந்தரித்தார்கள்.


3.குறைவுபட்டுக் கிடைக்கும் ஆசீர்வாதம்:
சில வேளைகளிம் நாம் செய்யும் பாவங்கள் ஆண்டவர் வாக்குப்பண்ணின ஆசீர்வாதங்களைக் குறைவுபட வைக்க்கின்றது. தாவீதுக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணி உன் சந்ததியார் என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆள்வார்கள், சவுலை விட்டு நான் ராஜ்யபாரத்தை எடுத்தது போல உன் சந்ததியை விட்டு  விலக்கமாட்டேன் என்று கூறினார். ஆனால் சாலமோன் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிச் சோரம் போனதினால் அவனுடையக் காலாத்திற்குப் பின்பு 12 கோத்திரங்களில் 1.5 கோத்திரங்களை மாத்திரம் மட்டும் ஆளுகின்ற ஆசீர்வாதக் குறைவு ஏற்பட்டது.

4.நிராகரிக்கப்படும் ஆசீர்வாதம்
ஆண்டவருக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்து தவறு என்று உணர்ந்து குணப்படாமல் துன்மார்க்க வழியை விட்டு மனந்திரும்பாமல் நடக்கின்ற போது ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணின ஆசீர்வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஊழியம் செய்யும் போது தம்முடைய சீடர்களிடம் நீங்கள் மறுமையின் ராஜ்ஜியத்தில் இஸ்வேலின் கோத்திரங்களை நியாயம் விசாரிப்பீர்களென்று வாக்குப் பண்ணினார். ஆனால் யூதாஸ்காரியோத்து ஆண்டவராகிய இயேசுவைக் காட்டிக் கொடுத்து மனம் திரும்பாமல் நாண்டுகொண்டு மரித்ததினால் பரலோடகத்திற்கு செல்லும் பாக்கியத்தையே இழந்துப் போனான்.

பேதுரு ஆண்டவரை மறுதலித்தபோதும் மனம்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக் கொண்டான். அதோடு கூட பரலோகராஜ்ஜியத்தில் நியாயம் விசாரிக்கக் கூடிய பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டான்.

சிந்தனை: ஆண்டவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற நம்மில் குறைகள் காணப்படுகின்றதா?

ஜெபம் : அன்பின் ஆண்டவரே, என்னிலுள்ள பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்து நீர் எங்களுக்கு வாக்குப்பண்ணின்ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ள எங்களைத் தகுதிப்படுத்திப் பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதித்து உம்முடைய நன்மையினால் நிரப்பியருளும்.ஆமேன்

பரிசுத்தத்தின் பலன்

"உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்."யோசுவா 3:5


பரிசுத்தமுள்ளவராகிய தேவன் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாமும் பரிசுத்தமுள்ளவர்களாகவே வாழ‌ விரும்புகின்றார். ஆனால் நாமோ நம்முடைய சுய இச்சைகளால் இழுப்புண்டவர்களாகப் பல வேளைகளில் தவறுகள் செய்து பாவிகளாக மாறி விடுகின்றோம். ஆண்டவர் நம்முடையப் பாவங்களை விட்டு விலகி பரிசுத்தமானவர்களாக வாழ‌ நம்மை அழைக்கின்றார். அப்படி நாம் பரிசுத்தமுள்ளவர்களாக மாறும் போது ஆண்டவர் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள்

1. தடைகளை நீக்குகின்றார்:

நாம் நம்முடையக் குறைகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு பரிசுத்தத்தில் நடக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றத் தடைகளை நீக்கி ஆசீர்வதிக்கின்றார். அன்று இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிண‌பின்பு அவர்களின் கானானை சுதந்தரிக்கச் சென்றப் பயணத்தில் முன்னேறிச் செல்லத் தடையாக இருந்த யோர்தான் நதியைப் பிளந்து வெட்டாந்தரையில் நடந்து பயணிக்கச் செய்தார். நாமும் நம்மைப் பரிசுத்த வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கும்போது நம்முடைய வாழ்வில் இருக்கின்றத் தடைகளை ஆண்டவர் நீக்கிப்போடுகின்றார்

2.வெற்றி தருகின்றார்:

பரிசுத்தமாக நாம் வாழும்போது தோல்வி நிறைந்த நம்முடைய வாழ்வைவெற்றியாக மாறச் செய்கின்றார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் எரிகோவை ஒப்புக்கொடுக்கும் போது யோசுவாவின் மூலமாகஎரிகோவின் பொருட்களில் ஒன்றையும் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் ஆகான் சாபத்தீடானதில் களவு செய்தபடியினால் மிகவும் சிறிய பட்டணமாகிய ஆயியை அவர்களால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. பின்னர் தங்களைப் பரிசுத்தம் பண்ணி சாபத்தீடானதைத் தங்களை விட்டு அகற்றியபோது ஆயி பட்டணத்தை  வெற்றி பெற முடிந்தது. நாமும் பரிசுத்தமானவர்களாக மாறும் போது நம்முடைய தோல்வியின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக ஆண்டவர் மாற்றித் தருவார்.

3.நித்திய வாழ்வு தருகிறார்:

நாம் பாவத்தை விட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டு பரிசுத்தமாகும்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி தருவதோடு மட்டுமல்லாமல் நாம் இந்த உலகைவிட்டு எடுத்துக் கொள்ளப்படும் போது நமக்குப் பரலோக வாழ்வாகிய நித்திய ஜீவ வாழ்வைத் தருகின்றார்.

"நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்."ரோமர் 6:22

சிந்தனை: நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருக்கின்றேனா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுப் பரிசுத்தமாக வாழ்ந்து எங்களுக்கு ஏற்படுகின்றத் தடைகள் உம்மால் நீங்கப் பெற்று வெற்றியுள்ள வாழ்வு வாழக் கிருபைபுரிந்து முடிவிலே நித்திய வாழ்வு பெற்றுக் கொள்ள இயேசுவின் நாமத்திலே வேனண்டிக் கொள்கின்றேன்.ஆமேன் 

பெருமையின் வீழ்ச்சி

"அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் ."தானியேல் 4:37

நேபுகாத்நேச்சார் என்கின்ற பாபிலோனை ஆண்ட ராஜா வர வர மிகவும் பலப்பட்டுக் கொண்டு போகின்றான். நேபுகாத்நேச்சார் பல தேசங்களின் ராஜாக்களை வீழ்த்தி மிகவும் பலமான சக்கரவர்த்தியாக ஆனான். அவன் உயர்வைப் பெற்ற பின்பாக அவனுக்குள் பெருமை குடி கொள்ள ஆரம்பித்து விடுகின்றது. தனக்கென்று சிலை உண்டாக்கி அதனை அனைவரும் வணங்கச் செய்யும் அளவுக்கு மிகவும் பெருமை கொண்டான். சாத்ராக், மேஷாக் , ஆபேத் நேகோ ஆகிய மூவரும் அக்கினிக்குத் தப்புவிக்கப்பட்டும் நேபுகாத்நேச்சார் தாழ்மையைத் தரிக்கவில்லை .



நேபுகாத்நேச்சார் கடவுள் தான் தனக்கு ஆளுகை செய்யும் அதிகாரத்தைத் தந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. ஆகவே நேபுகாத்நேச்சாரை சொப்பனத்தின் மூலமாக ஆண்டவர் எச்சரிக்கைக் கொடுக்கின்றார். தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி தன்னுடையப் பாவங்களை எல்லாம் விட்டுவிட்டு மனத்தாழ்மையைத் தரித்துக் கொண்டு சிறுமையானவர்களுக்கு இரங்கி அக்கிரமத்தை விட்டுவிட எச்சரிக்கை செய்கின்றார்.


எச்சரிப்பின் சத்தத்தை உணர்ந்து கொள்ளாத நேபுகாத்நேச்சார் மீண்டும் பெருமை கொண்டு தன்னை தான் புகழுகின்ற போது அவன் மனிதரினிற்று தள்ளப்பட்டு மிருகத்தைப் போலப் புல்லைத் தின்கின்றான். நீண்ட நாட்கள் ஆனபின்பு கடவுளால் தான் தனக்குத் தேசங்களை ஆள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுகின்றான். ஆண்டவரைப் போற்றிப் புகழுகின்றான். ராஜ்ஜியத்தின் ஆளுகையை மீண்டும் பெற்றுக் கொண்டு தாழ்மையைத் தரித்துக் கொண்டான்.

சிந்தனை: நான் என்கின்ற சுய பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா அல்லது தாழ்மையாய் நடக்கின்றோமா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, என்னிலுள்ள பெருமை குணங்களை நீக்கி விட்டு நான் தாழ்மையாய் நடந்து உம்மை மகிமைப்படுத்த உதவி புரியும். ஆமேன்

அன்பு

"நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்." 1 கொரிந்தியர் 13:1

             இந்த அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் அன்பு உள்ளவர்களிடத்தில் காணப்படவேண்டிய நற்குணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

  • தீர்க்கதரிசன வரத்தை உடையவவர்களாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவர்களாயிருந்தாலும், அவர்கள் ஒன்றுமில்லை.(ZERO,பூஜ்ஜியம்).
  • மனிதர்கள் தங்களுக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம்பண்ணினாலும், அவர்கள் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லை என்றால் அவர்களுக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
  • அன்பு உள்ள மனிதர்கள்  சாந்தமும் தயவுமுள்ளவர்களாயிருப்பார்கள்; 
  • அன்பு உள்ள மனிதர்கள் பொறாமையில்லாதவர்களாயிருப்பார்கள்; 
  • அன்பு உள்ள மனிதர்கள்  தங்களைத் தாங்களே புகழுகின்றவர்களாய் இருக்க மாட்டார்கள்,
  • அன்பு உள்ள மனிதர்கள் இறுமாப்பாயிருக்கமாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் அயோக்கியமானதைச் செய்ய மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் தற்பொழிவை நாட மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் சினமடைய மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் தீங்கு நினைக்க‌ மாட்டார்கள்,
  • அன்பு உள்ள மனிதர்கள் அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவார்கள்.
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் தாங்குவார்கள், 
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் விசுவாசிப்பார்கள், 
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் நம்புவார்கள்.
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் சகிப்பார்கள், \
  • அன்பு உள்ள மனிதர்கள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை.



சிந்தனை: நான் அன்புடன் நடந்து கொள்கின்றேனா? "அன்பே பெரியது."

ஜெபம்: அன்பின் ஆண்டவரே மாயமான இந்த உலகத்தில் நான் அன்புடன் நடந்து கொள்ள என்னை உம்முடைய அன்பினால் நிரப்பி என்னை வழி நடத்தியருளும். ஆமேன்

ஆறுதல் செய்யும் தேவன்

                "தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்."  2 கொரிந்தியர் 1:4

                  இயேசு கிறிஸ்துவின் அடியவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நமக்கு வரும் துன்பங்கள் உபத்திரவங்கள் துயரங்கள் நம்மை நெருக்குகின்ற வேளைகளில் நாம் சோர்ந்து போய் துவண்டு விடக் கூடாது. சில வேளைகளில் நாம் செய்த தப்பிதங்களை நாம் திருத்திக் கொள்ளும்படியான சிட்சையாகக் கூட அவைகள் இருக்கலாம். சில வேளைகளில் அவைகள் நாம் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை ஆண்டவரண்டை நடத்தக் கூடிய அனுபவப் பாடமாக இருக்கலாம். ஆனாலும் நமக்கு வருகின்றத் துன்பங்கள் எல்லாவற்றினின்றும் ஆண்டவர் நமக்கு ஆறுதல் தருகின்றவராகவும் நம்மை ஆறுதல்படுத்திகிறவராகவும் இருந்து நம்மை இக்கட்டுகளுக்கு விலக்கிக் காக்கின்றார்.


                   அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியப் பாதையில் பலவிதமானப் பாடுகள் துன்பங்கள் உபத்திரவங்கள் எதிர்ப்புகள் அடிகள் காவல்கள் போன்றவைகள் ஏற்பட்டாலும் கூட அநேகருக்கு ஆறுதல் சொல்லி அவர்களைத் தேற்ற முடிந்தது. ஏனென்றால் கிறிஸ்து என்னோடுக்கூட இருக்கின்றார் நான் எதற்கும் கவலைப்படுவதில்லை என்ற விசுவாசத்தோடு வைராக்கியமாக ஊழியம் செய்ய முடிந்தது. நாமும் நம்முடைய சோதனை வேளைகளில் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் போது நாம் ஆண்டவரால் ஆறுதலைப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாது நாம் அநேகரை ஆறுதல்படுத்தி அவர்களை ஆண்டவரண்டை வழி நடத்தும் கருவியாகப் பயன்படுத்த ஆண்டவர் சித்தமாயிருக்கிறார்.

சிந்தனை:"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்."  சங்கீதம் 119:71.


ஜெபம்: கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே எனக்கு நேரிடுகின்ற உபத்திரவங்களில் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு பாடு அனுபவிக்கின்றவர்களை உம்மண்டை வழிநடத்தவும் எனக்கு நேரிடுகின்ற துன்பங்களினின்று விடுதலை பெற்று உம்மை மகிமைப்படுத்தவும் உதவி புரிந்தருளும். ஆமேன்