விசுவாசம்

"அவன்(ஆபிரகாம்) பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்." எபிரேயர் 6:15


அந்தக் கிராமத்தில் அந்த வருடம் மழை பெய்யவில்லை. அந்த ஊரின் போதகர் நாம் அனைவரும் பத்து நாட்கள் நமது கிராமத்தை சுற்றி வந்து கர்த்தரைத் துதித்து நாம் வேண்டுதல் செய்வோம் என்று அறிவிப்புக் கொடுத்தார். அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் தொடர்ந்து 9 நாட்கள் ஊரைச் சுற்றி வந்து ஜெபித்தார்கள். பத்தாவது நாளும் வந்த்தது ஒரே ஒரு சிறுமி மட்டும் குடையுடன் அந்த ஜெபத்திற்கு வந்திருந்தாள். அந்தச் சிறுமியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தார்கள். ஆனால் அந்தச் சிறுமியோ எதற்கும் கவலைப்படாமல் விசுவாசத்தோடு அந்தக் கிராமத்தைச் சுற்றி வந்தாள். ஊரின் எல்லையில் வந்தவுடன் போதகர் ஜெபித்து ஆசிர்வாதம் கூறியவுடன் சோரென மழை பெய்ய ஆரம்பித்தது. சிறுமியைக் கேலி செய்தவர்கள் வெட்கத்துடன் மழையில் நனைந்தார்கள். சிறுமியோ தன்னுடையக் குடையினால் மற்றவர்களுக்கு உதவி செய்தாள்.


ஆம் பிரியமானவர்களே அந்தச் சிறுமியின் விசுவாசம் மழையைக் கொண்டு வந்தது. அபிரகாமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டுத் தன்னுடைய சொந்த ஜனங்களை எல்லாம் விட்டு விட்டுக் கர்த்தர் காண்பிக்கும் இடத்திற்கு நேராகச் செல்கின்றார். தனக்கு வயதாகி விட்டபோதிலும் கர்த்தர் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியை ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன வார்த்தையை விசுவாசித்ததினால் சாராள் வயது சென்றவளாயிருந்தாலும் அவள் மூலமாக ஈசாக்கைப் பெருகிறான். கால் மிதிக்கும் தேசத்தை உன் சந்ததிக்குத் தருவேன் என்று தேவன் சொன்னதை விசுவாசித்ததினால் இஸ்ரவேலர் கானான் தேசத்தைச் சுதந்தரிக்கிறார்கள். ஆகவே ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுகின்றான். பிரியமானவர்களே நாமும் நம்முடைய விசுவாசம் எப்படியிருக்கிறதென்று சோதித்து அறிவோம். விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாய் நாம் இருப்போமானால் தேவன் நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்ய இறைவனிடம் மன்றாடுவோம். கிறிஸ்தவத்தின் வாழ்க்கையே விசுவாசத்தில் தான் அடங்கி இருக்கின்றது. விசுவாசத்தில் பெலப்படுவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.



சிந்தனை: "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" மத்தேயு 21: 22


ஜெபம்:
அன்பின் தேவனே நீர் வாக்குப் பண்ணினவைகளைப் பெற்றுக் கொள்ள விசுவாசத்துடன் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்ளக் கிருபைகளைத் தந்து வழி நடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்