சத்துரு தலைகுனிவான்

வேதபகுதி:மீகா 7:10

உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவன் அதைப் பார்க்கும் போது வெட்கம் அவனை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். வசனம் 10





நம்முடைய வாழ்க்கையில் இருவிதமான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஒன்று சாத்தான் அடுத்து மனிதர்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. சாத்தான் எல்லா கடவுளுடைய பிள்ளைகளுக்கும் எதிர். மனிதர்கள் எல்லாரும் நமக்கு எதிரிகள் கிடையாது. சத்துரு எதிர்பாராத நேரத்தில் வெள்ளம் போல திடீரென வரும் பொழுது ஆவியானவர் நமக்கு வெற்றி தருவார். கெர்ச்சிக்கிற சிங்கள் போல நம்மை விழுங்க சுற்றித் திரியும் சாத்தான் வெட்கப்பட்டுப் போவான். நமக்கு கண்ணி வலை விரிக்கின்ற எதிரிகள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
"இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி
இயேசுவுக்காய் சாட்சி சொல்ல
இயெசுவின் நாமத்தைச் சொல்ல
அவன் தொற்றுப் போனவன் தானே, ஓடிப்போவான்"

என்று பக்தன் பாடுகிறார். சத்துருவைச் சிலுவையில் தோற்கடித்த ஆண்டவர் பிசாசின் தலையை நசுக்கி மிதித்து விட்டார். ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நம்மைச் சத்துரு தொட முடியாது. அல்லேலுயா.





சிந்தனை: சத்துரு தலை கவிழ்ந்தோட

நித்தமும் கிரியை செய்திடும்

தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே


ஜெபம்: வெற்றி வேந்தரே, உலகத்தில் வரும் உபத்திரவங்களிலிருந்து வெற்றியை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் எதிராக வருவார்கள்?

வேதபகுதி:மீகா 7:6- 9

மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. வசனம். 6





ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். இந்த வசனத்தை இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாம் எந்த ஒரு நல்லகாரியத்திற்கும், ஊழியத்திற்கும் போக ஒரு நடை முன் வைப்போமானால் முதலில் விமர்சிப்பவர் நம் குடும்பத்தார்தான் குறை சொல்லுவார்கள். ரொம்ப வேகமாக போகிறான் எங்கே போய் முட்டுவானோ தெரியவில்லை என்பார்கள். தடை போடுவார்கள், படிப்படியாகப் போகலாம் ஒரேயடியாக வேகம் வேண்டாம் என்பார்கள், தடை போடுவார்கள். இங்கே தேவை இருக்கும் போது வேறு இடத்துக்கு அனுப்பவும் வேண்டாம், போகவும் வேண்டாம் என்பார்கள். இயேசுவையே அவருடைய குடும்பத்தில் வெறுத்தார்கள். அவரை பிடித்து ஊழியத்தை தடுத்து நிறுத்த எண்ணினார்கள், பஸ்கா பண்டிகையின் போது விளம்பரப்படுத்திக் கொள் என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. நமக்கு எதிராக வருகிறவர்களுக்கு இடம் கொடாமலே நாம் முன்னேறிச் செல்வோம்.



சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கையிலே எத்தனை முறை தம் சொந்த ஜனங்களாலும், குடும்பத்தாராலும், சமயத் தலைவர்களாலும் பகைக்கப்பட்டார். ஆனால் இயெசுவைச் சொல்வதை மாத்திரம் நிறுத்தவில்லை. கடைசிவரை இயேசுவைப் பறைசாற்றினார். நாம் எப்படி இருக்கிறோம்.




சிந்தனை: யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார். தந்தையும் தாயும் கைவிட்டாலும் கைவிடாத நேசரவர்.


ஜெபம்: கைவிடாத நேசரே, இவ்வுலக உறவுகளினாலே சோர்ந்து போகின்ற வேளையிலே என்னை உற்சாகப்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நம்பிக்கைத் துரோகம்

வேதபகுதி:மீகா 7:5

சினேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்ப வேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. வசனம் .5





மாப்பிள்ளை மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாப்பிளை வீட்டார் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. தென் தமிழ்நாட்டில் குடியிருந்த ஒரே மகளையுடையவர், மகளுக்குக் குடும்ப வாழ்க்கை சொகுசாக அமையவேண்டும் என்று விரும்பி தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்தார். மாதத்தில் ஒரு நாள் கணவர் இரவு வீடு வராமலிருந்தார். கேட்டாள், மறைத்துவிட்டார். ஊரை மூட உளைமுடி இல்லை என்ற வழக்குச் சொல்லின் படி மனைவிக்கு கணவனின் கள்ளத் தொடர்பு தெரியவந்தது. நம்பிக்கைத் துரோகம் கணவன் மனைவிக்கிடையில். ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகள், நண்பர்கள் கூட ஏமாற்றி விடுகிறார்கள். பக்கத்தில் இருப்பவர் ஏமாற்றுகிறார். சங்கீதம் 118:8ன் படி மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று சொல்லப்படுகிறது. கவனமாயிருப்போம், மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமலிருப்போம்.





சிந்தனை: சிம்சோனுக்கு ஒரு தெலிலாள்
இஸ்ரவேலுக்கு ஒரு ஆகான்
இயேசுவுக்கு ஒரு யூதாஸ்
மற்றவர்களுக்கு நாம் எப்படி?


ஜெபம்: நம்பிக்கையின் நங்கூரமே, உம்மை மறுதலிக்காமல் உண்மையாய் உம்மை ஜீவிக்க உம்முடைய தூய ஆவியால் என்னைப் பெலப்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

போலியான வாழ்க்கை

வேதபகுதி:மீகா 7:4

அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டணையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. வசனம் .4





இயேசுவின் காலத்தில் பரிசேயர், சதுசேயர், யூதர்கள் தங்கள் தான் நீதிமான்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மாயக்காரரே உங்களுக்கு ஐயோ என்று சாடினார். இன்று அநேகர் வெளிப்புறமாக சமுதாயம், சபைக்கு முன் உத்தமர் போல் நடிக்கிறார்கள். ஓர் ஊழியர் ஒரு சபையில் ஊழியம் செய்து வந்தார். அவர் ஊழியஞ்செய்கிற சபையில் சபையார் எல்லாரும் குறை சொன்னார்கள். என்னவென்று பார்த்தால் அவர் அவருடைய மனைவியிடம் பேசிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். அருமையானவர்களே, நாம் இன்றைக்கு நல்லவன் போல வேஷம் போடுகிறோம். அதனால் தான் வேதம் நல்லவன் முட்செடிபோலவும், செம்மையானவன் நெரிஞ்சலைப் போலவும் இருக்கிறான் என்று தீர்க்கன் சொல்லுகிறார்.



Duplicate பெருகி வரும் காலத்தில் Original ஆக வாழ அழைக்கப்படுகிறோம். ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாக அல்ல எல்லா நாலும் கிறிஸ்தவனாக வாழ அழைக்கப்படுகிறோம்.





சிந்தனை: ஞாயிற்றுக்கிழமையிலே வேடத்தைக் கலைப்பேன்.
கோயிலிலே காபிரியேல் நானேதான்
பாட்டுப்பாடி பரமனோடு ஒன்றிய பின்னே
கூட்டை விட்டு சுய உருவில் வெளியிலே வருவேன்.


ஜெபம்: வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்போல் பார்வைக்குப் பகட்டாய் வாழாதபடி உள்சுத்தம் தாரும் தேவனே. ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்