ஒளியினிடத்தில் வருதல்

"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்." யோவான் 3 : 21



கடுமையான வெயில் காலம் ஒன்றின் இரவுப் பொழுதில் திடீரென மின்சாரம் தடைபட்டு விடுகின்றது. நம்மால் வீட்டிற்குள் ஒரு சில நிமிடங்கள் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை காரணம் வெயில் காலத்திலே வீட்டின் வெப்பநிலை மிகவும் அதிகமாகக் காணப்படும். வீட்டிற்கு வெளியே காற்று அடிக்குமா என்று வீட்டிற்கு வெளியே வருகின்றோம். சிறிது நேரத்தில் தடைபட்டிருந்த மின்சாரம் வருகின்றது. உடனே நாம் வீட்டிற்குள்ளே சென்று மின்விசிறிக்குக் கீழேயோ அல்லது குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பாகவோ சென்று நிற்கின்றோம். மின்சாரம் வந்ததினால் நமது வீட்டினுடைய வெப்பநிலையைச் சிறிது குறைக்கும் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம்.




இதனைப் போலத்தான் இருளான உலக வாழ்விற்கும் சாத்தானிற்கும் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நாம் ஒளியான இயேசுக் கிறிஸ்துவினிடத்திற்கு வரும்போது நமக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சி அளவிடமுடியாதது. நமது உள்ளம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைவாகக் காணப்படும். ஆனால் நாமோ கற்களுக்கு அடியில் வாழும் சிறு பூச்சிகளைப்போலக் கல்லைப் புரட்டினாலும் மீண்டும் அந்த இருளான கற்களுக்கு அடியிலே செல்வது போல நாமும் மனந்திரும்பாமல் மீண்டும் மீண்டும் பாவமான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றோம். இப்படியே நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதனால் நமக்கும் பயன் இல்லை இந்த உலகத்தில் வாழ்கின்ற மற்ற மக்களுக்கும் பயன் இல்லை. நாம் ஒளியான கிறிஸ்துவை நம் உள்ளத்தில் தரித்துக் கொள்ளும் போது மலையின் மேல் உள்ள பட்டணம் எங்கும் தெரிவது போல நாமும் நம்முடைய நற்காரியங்களால் மற்ற மக்களையும் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். இதன் பலன் நமக்குக் கிறிஸ்துவின் வருகையில் அளிக்கப்படும்.




சிந்தனை: நாம் ஒளியின் பிள்ளையாக வாழ்கின்றோமா? அல்லது இருளின் பிள்ளயாக வாழ்கின்றோமா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கின்றேன் நான் உமது பிள்ளையாக உம் சித்தத்தின்படி நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்