உலகப் பொருளில் உண்மை

வேதபகுதி: ஆதியாகமம் 14:14 - 24


"நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,வானத்தையும பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்." ஆதியாகமம் 14:22,23


ஆபிரகாம் சோதோமின் ஜனங்களைப் பிடித்துச் சென்ற இராஜாக்களைப் பின் தொடர்ந்து சென்று சோதோமின் ஜனங்கள் மற்றும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றப் பொருள்களை எல்லாம் மீட்டு வருகின்றான். ஆபிரகாமை வரவேற்க சென்ற சோதோமின் ராஜா ஜனங்களை மட்டும் தன்னிடம் ஒப்படைத்து விட்டுப் பொருள்களை எல்லாம் ஆபிரகாமை எடுத்துக் கொள்ளும் படியுமாகக் கேட்கின்றான். ஆனால் ஆபிரகாம் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி தன்னுடன் வந்தவர்களுடையப் பங்கை மாத்திரம் கேட்டுத் தான் மீட்டு வந்தப் பொருள்கள் மற்றும் ஜனங்களைச் சோதோமுடைய ராஜாவினிடம் ஒப்படைக்கின்றான். ஆகையினால் கர்த்தர் ஆபிரகாமை அதிகமாக ஆசீர்வதித்தார்.


மற்றவர்களுடையப் பொருளை எப்படி அபகரிக்கலாம், குறுக்கு வழியில் எப்படிப் பணம் சம்பாதிக்கலாம், கூட இருக்கின்றவர்களை எப்படி ஏமாற்றி அவர்களுடையப் பணத்தையோ அல்லது அவர்களுடைய சொத்தையோ எப்படி அபகரிக்கலாம் என்று இருக்கின்றக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். நம்முடையச் சிந்தனைகள் மற்றும் செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது என்று சிந்திப்போம். நாம் கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கின்ற உலகப் பொருள்கள், பணிகள் மற்றும் பதவிகளிலே உண்மையுள்ளவர்களாய் நடந்த்து நேர்மையாய் நடக்கும் போது கர்த்தர் நம்மையும் நம்முடையக் குடும்பங்களையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்.



சிந்தனை: "அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?" லூக்கா 16:11


ஜெபம்:
அன்பின் தேவனே நீர் எனக்கு இந்த உலகத்தில் எனக்குத் தந்திருக்கின்றக் காரியங்கள் அனைத்திலும் நான் உண்மையாய் நடந்து கொள்ள தேவ ஒத்தாசையையும் பெலனையும் தந்து வழிநடத்தும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அர்ப்பணிப்பு

வேதபகுதி: அப்போஸ்தலர் 9 : 1 - 18

"ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். " அப்போஸ்தலர் 9:6 a


தேவனுடையப் பிள்ளைகளைக் கட்டி துன்பப்படுத்தும்படி சவுல் பிரதான ஆசாரியரிடத்திலே நிருபங்களை வாங்கிக் கொண்டு தமஸ்குவை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே தேவன் சவுலைச் சந்திக்கின்றார். அந்த இடத்திலேயே ஆண்டவரே நீர் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்று சவுல் தன்னை அர்ப்பணிக்கின்றார். ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணித்தபடியினால் கர்த்தர் சவுலை பவுலாக மாற்றி வல்லமையாக எடுத்துப் பயண்படுத்தினார். புறஜாதிகள் அநேகரைக் கர்த்தருக்குள்ளாகக் கொண்டு வருவதற்கும் அநேகச் சபைகளை உருவாக்குவதற்கும் பவுல் அப்போஸ்தலன் காரணமாக இருந்தார்.


வேதாகமத்தில் அநேகர் தங்களை ஆண்டவரின் அழைப்பிற்கு இணங்கி தங்களை அர்ப்பணித்துப் பெரிய காரியங்கள் அவர்களால் செய்யப்படவும் அவர்களும் அவர்களுடையக் குடும்பங்களும் அசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். நாமும் நம்மை கர்த்தருடையச் சத்தத்திற்குச் செவிகொடுத்து அர்ப்பணித்து அருடையச் சித்தத்தின்படி நடப்போமானால் நாமும் நம்முடையக் குடும்பங்களும் ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்கும் மாறாக நாம் அவருடையச் சித்தத்தின்படி செய்யாமல் நம்முடைய மனம் போனபடிச் செய்வோமானால் நமது துன்ப நேரங்களில் அவரும் நம்மைக் கைவிட்டு விடுவார். நாம் அவருடைய சித்தத்தின்படி செய்யும் போது நமது துன்பங்களையெல்லாம் இன்பமாக மாற்றி விடுவார்.



சிந்தனை: நான் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறேனா?


ஜெபம்:
கிருபையுள்ள அன்பின் தேவனே நான் என்னையே உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன் நீரே என்னை உம்முடைய சித்தத்தின்படி வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தானியேலின் தீர்மானம்

வேதபகுதி: தானியேல் 1: 3 - 20


"தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்." தானியேல் 1:8


தானியேல் தான் பாபிலோன் அரசனால் சிறைபிடிக்கப்பட்டு வந்தாலும், பாபிலோனில் உள்ளப் பாவக் காரியங்களால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தீர்மானம் பண்ணுகின்றான். தீர்மானம் பண்ணுவதோடு நின்று விடாமல் ஜெபத்தோடு கூட அந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்காக வேண்டிய முயற்சிகளை எடுக்கின்றான். தேவன் தானியேலின் தீர்மானம் நிறைவேறப் பிரதானிகளின் தலைவனுடைய கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார். மேலும் ராஜபோஜனத்தை உண்கின்ற மற்ற வாலிபர்களைக் காட்டிலும் தானியேல் மற்றும் அவருடைய நண்பர்களின் முகம் களையுள்ளதாயும் சரீரம் புஷ்டியாகவும் மாறச் செய்தார். மேலும் மற்ற மனிதர்களைக் காட்டிலும் ஞானத்தையும் அறிவையும் சாமர்த்தியத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.


நாம் எப்படிப்பட்டத் தீர்மானங்களை நம்முடைய வாழ்க்கையில் எடுக்கின்றோம் அல்லது நாம் எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்கின்றோமா? ஏதோ புதிய வருடங்களில் அல்லது நற்செய்திக் கூட்டங்களில் தீர்மானங்களை மட்டும் எடுக்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது தீர்மானங்களை நிறைவேற்றிக் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகின்றவர்களாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம் . கிறிஸ்துவுக்குள்ளாக நல்ல தீர்மானங்களை எடுப்போம், எடுத்தத் தீர்மானங்களுக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம். தீர்மானங்களை நிறைவேற்றுவோம், கர்த்தர் தானியேலைப் போல நம்மையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.



சிந்தனை: நாம் எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்கின்றோமா?


ஜெபம்:
கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவனே, நான் உமக்குள்ளாகத் தீர்மானங்களை எடுக்கவும் அந்தத் தீர்மானங்களில் நிலைத்து இருக்கவும் தேவ ஒத்தாசையையும் கிருபையையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அரசுக்கு முறையாக வரி செலுத்துதல்

வேதபகுதி: லூக்கா 20:20 - 26

"இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்" லூக்கா 20 : 25

இயேசு கிறிஸ்துவினிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படியாக பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரிடத்தில் வேவுகாரரை அனுப்புகின்றார்கள். ஏனென்றால் இயேசு கிறிஸ்து தனது பிரசங்கங்களில் அவர்களது தவறான வாழ்க்கை முறைகளைச் சுட்டிக்காட்டினதினால் அவரிடம் குற்றம் கண்டுபிடித்து அவரைத் தேசாதிபதியினிடம் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று திட்டம் தீட்டுகின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவர்களுடைய தந்திரத்தை அறிந்து கொண்டு அவர்களிடம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்த வேண்டும் என்று பதில் கூறுகின்றார்.


பிரியமானவர்களே நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம். நாம் முறையாக வரி செலுத்துகின்றோமா? தசமபாகம் செலுத்துகின்றோமா? அல்லது கள்ள கணக்குக் காண்பித்து வரியைக் குறைவாகச் செலுத்துகின்றோமா? தசமபாகத்திலே வஞ்சனை செய்கின்றோமா? என்ன நிலைமையில் நாம் இருக்கின்றோம் சிந்தித்துப் பார்ப்போம்? கர்த்தர் நம்மைப் பார்த்து மனிதன் என்னைக் காணிக்கைகளினாலும் தசமபாகங்களினாலும் அல்லவோ வஞ்சிக்கிறான் என்று மல்கியா தீர்க்கன் மூலமாக நம்மை எச்சரிக்கின்றார். மேலும் தசமபாகங்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் அதன் மூலமாக நான் உங்களை இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்றும் மல்கியா தீர்க்கன் மூலமாகக் கூறுகின்றார். அரசுக்கு முறையாக வரி செலுத்துவோம், தசமபாகங்களைத் தேவனிடத்தில் கொண்டு வருவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.



சிந்தனை: நான் அரசுக்கு முறையாக வரிசெலுத்துகின்றேனா? தசமபாகத்தைத் தேவனுக்குச் செலுத்துகின்றேனா?


ஜெபம்:
அன்பின் ஆண்டவரே நீர் கற்றுத் தந்தபடி நான் அரசுக்கு முறையாக வரி செலுத்தவும் உமக்குத் தசமபாகத்தைத் தவறாது செலுத்தவும் தேவ பெலனையும் ஒத்தாசையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி செலுத்தும் உணர்வு

"அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான்" லூக்கா 17:5

நாம் ஒரு நபரிடத்திலே நன்மைக்காகச் செல்கின்றோம். அவரும் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார். நாம் நமக்கு நன்மை கிடைத்த பின்பு அவரைப் பார்த்து நாம் நன்றி சொல்லுகின்றபோது அவருக்கு மற்ற மக்களுக்கு நம்மால் நன்மை செய்ய முடிகின்றது என்று மகிழ்கின்றார். இது அவருக்கு மேலும் பல நன்மைகளை மற்ற மக்களுக்குச் செய்ய ஒரு உந்துதலாக இருக்கும். மாறாக நமக்கு நன்மை செய்தவரை நாம் மதிக்காமல் நடக்கும் போது அந்த மனிதருக்கு நன்மை செய்கின்ற எண்ணமே இல்லாமல் போய் விடும்.


நன்றி சொல்வது என்பது மிக உயரிய பண்பு ஆகும். இந்தக் காலத்தில் நன்றி சொல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது மாறாக நன்றி மறத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. நமது ஆண்டவர் நமக்கு எவ்வளவோ அதிகமான நன்மைகளைச் செய்திருக்கின்றார். நாம் ஆண்டவர் நமக்குச் செய்த ஒவ்வொரு நன்மைகளையும் நினைத்து அவருக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கும்போது கர்த்தர் நம்மில் மிகவும் பிரியப்படுகின்றார். மேலும் நமக்குப் பல்வேறு ஆசிர்வாதங்களையும் தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றார். மாறாக நாம் ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்து நடப்போமானால் நமக்கு ஆசிர்வாதக் குறைவு தான் கிடைக்கும்.


சிந்தனை: நன்றி மறப்பது நன்றன்று

ஜெபம்:அன்பின் தேவா, எனக்கு நன்றி நிறைந்த உள்ளத்தை அதிகமாகத் தந்து வழிநடத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உன்னதமானவரின் பிள்ளைகள்

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்" லூக்கா 6:35

குஷ்டரோகிகள் மத்தியிலே ஊழியம் செய்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் எரித்துக் கொன்றார்கள். கிரகாம் ஸ்டெய்ன்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி.கிளாடிஸ் அம்மையார் அவர்கள் நான் என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளையும் எரித்துக் கொன்றவர்களை மன்னிக்கிறேன் என்று அறிக்கை விட்டார்கள். இதன் மூலமாக கிறிஸ்துவின் மன்னிப்பின் குணத்தை அநேக மக்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களது இந்த மன்னிப்பின் குணம் தாங்கள் உன்னதமானவரின் பிள்ளைகள் என்பதை இந்த உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட அறிவுறைகளை மக்களுக்கு வழங்கியதோடு மட்டும் இல்லாது தன்னுடைய வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார். பிரதான ஆசாரியர்கள் அவரைப் பிடிக்க வரும்போது பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரரின் காதை வெட்டி விடுகின்றான். கர்த்தரோ அந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதைக் குணப்படுத்தி அற்புதம் செய்தார். ஆம் பிரியமானவர்களே நம்மிடம் இயெசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட பகைவர்களை நேசிக்கின்ற மன்னிக்கின்ற குணம் காணப்படுகின்றதா? இல்லையென்றால் நாம் இன்றே உன்னதமானவரின் பிள்ளைகளாக மாறுவதற்காக கர்த்தர் நமக்குச் சத்துருக்களைச் சிநேகிக்கின்ற மன்னிக்கின்ற குணத்தை அருளும்படி மன்றாடுவோம்.



சிந்தனை: நான் உன்னதமானவரின் பிள்ளையாக மாறிவிட்டேனா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் உம்முடையப் பிள்ளையாக நடப்பதற்கு என்னுடையச் சத்துருக்களைச் சிநேகிக்கவும் மன்னிக்கவும் கூடிய நல்ல குணத்தைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

விசுவாசம்

"அவன்(ஆபிரகாம்) பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்." எபிரேயர் 6:15


அந்தக் கிராமத்தில் அந்த வருடம் மழை பெய்யவில்லை. அந்த ஊரின் போதகர் நாம் அனைவரும் பத்து நாட்கள் நமது கிராமத்தை சுற்றி வந்து கர்த்தரைத் துதித்து நாம் வேண்டுதல் செய்வோம் என்று அறிவிப்புக் கொடுத்தார். அந்த கிராமத்தின் மக்கள் அனைவரும் தொடர்ந்து 9 நாட்கள் ஊரைச் சுற்றி வந்து ஜெபித்தார்கள். பத்தாவது நாளும் வந்த்தது ஒரே ஒரு சிறுமி மட்டும் குடையுடன் அந்த ஜெபத்திற்கு வந்திருந்தாள். அந்தச் சிறுமியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தார்கள். ஆனால் அந்தச் சிறுமியோ எதற்கும் கவலைப்படாமல் விசுவாசத்தோடு அந்தக் கிராமத்தைச் சுற்றி வந்தாள். ஊரின் எல்லையில் வந்தவுடன் போதகர் ஜெபித்து ஆசிர்வாதம் கூறியவுடன் சோரென மழை பெய்ய ஆரம்பித்தது. சிறுமியைக் கேலி செய்தவர்கள் வெட்கத்துடன் மழையில் நனைந்தார்கள். சிறுமியோ தன்னுடையக் குடையினால் மற்றவர்களுக்கு உதவி செய்தாள்.


ஆம் பிரியமானவர்களே அந்தச் சிறுமியின் விசுவாசம் மழையைக் கொண்டு வந்தது. அபிரகாமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டுத் தன்னுடைய சொந்த ஜனங்களை எல்லாம் விட்டு விட்டுக் கர்த்தர் காண்பிக்கும் இடத்திற்கு நேராகச் செல்கின்றார். தனக்கு வயதாகி விட்டபோதிலும் கர்த்தர் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியை ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன வார்த்தையை விசுவாசித்ததினால் சாராள் வயது சென்றவளாயிருந்தாலும் அவள் மூலமாக ஈசாக்கைப் பெருகிறான். கால் மிதிக்கும் தேசத்தை உன் சந்ததிக்குத் தருவேன் என்று தேவன் சொன்னதை விசுவாசித்ததினால் இஸ்ரவேலர் கானான் தேசத்தைச் சுதந்தரிக்கிறார்கள். ஆகவே ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுகின்றான். பிரியமானவர்களே நாமும் நம்முடைய விசுவாசம் எப்படியிருக்கிறதென்று சோதித்து அறிவோம். விசுவாசத்தில் குறைவுள்ளவர்களாய் நாம் இருப்போமானால் தேவன் நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்ய இறைவனிடம் மன்றாடுவோம். கிறிஸ்தவத்தின் வாழ்க்கையே விசுவாசத்தில் தான் அடங்கி இருக்கின்றது. விசுவாசத்தில் பெலப்படுவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.



சிந்தனை: "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" மத்தேயு 21: 22


ஜெபம்:
அன்பின் தேவனே நீர் வாக்குப் பண்ணினவைகளைப் பெற்றுக் கொள்ள விசுவாசத்துடன் பொறுமையாய்க் காத்திருந்து வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்ளக் கிருபைகளைத் தந்து வழி நடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தீமையின் பலன்

"பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்." நியாயாதிபதிகள் 9:56 பி


காண்ட்ரக்டர் ஒருவர் ஒரு கட்டுமான நிருவனத்திற்குப் பல பணிகளைச் செய்து கொடுத்து வந்தார். தனக்கு வயதாகிவிட்டபடியினால் இனிமேல் தன்னால் அப்படி காண்ட்ராக்ட் எடுத்துச் செய்ய முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவரிடம் சொன்னார். அதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் சரி கடைசியாக ஒரே ஒரு வீடு மட்டும் காண்ட்ராக்டில் கட்டிக் கொடுங்கள் என்று சொன்னார். இவரும் அந்த வீட்டை மிகவும் மலிவான பொருள்களைக் கொண்டு தரமில்லாமல் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். வீட்டின் திறப்பு விழாவிற்கு அந்தக் காண்ட்ரக்டரை குடும்பத்தோடு அழைத்தார். அந்தத் திறப்பு விழாவில் அந்த நிறுவனத்தின் தலைவர் காண்ட்ரக்டரிடம் இதுவரை எங்களது நிறுவனத்திற்கு நீங்கள் செய்த பணிக்காக இந்த வீட்டை உனக்குச் சொந்தமாகத் தருகிறேன் என்றார். காண்ட்ரக்டருக்கு தலை சுற்றியது. ஐயோ இந்த வீடு எனக்கு என்று முன்பதாகத் தெரிந்திருந்தால் நான் தரமானப் பொருள்களைக் கொண்டு கட்டியிருப்பேனே என்று அவன் புலம்பினான் .



ஆம் பிரியமானவர்களே நாம் செய்கின்ற தீமையான எல்லாச் செயல்களும் மீண்டும் நம்மை நோக்கியே வரும். அபிமெலேக்கின் வாழ்க்கையிலும் இது தான் பலித்தது. தன்னுடைய சகோதரர்கள் 70 பேரையும் கொலை செய்து விட்டு சீகேமின் அரசனாக மாறினான். இவனுடைய இந்தத் தீமையானச் செயலுக்கு சீகேமின் மனுஷரும் உடந்தையாக இருந்தார்கள். முடிவிலே சீகேமின் மனுஷருக்கும் அபிமெலேக்கிற்கும் பிரிவினை உண்டாகின்றது. முடிவிலே அபிமெலேக்கின் மரணம் ஒரு பெண்ணால் வருகின்றது. அபிமெலேக்கு செய்த எல்லாத் தீமையானக் காரியங்களுக்கும் கர்த்தர் அவனுக்குப் பதிலளித்தார்.




சிந்தனை: தன் வினை தன்னைச் சுடும்.


ஜெபம்:
அன்பின் தேவனே நான் நன்மையானக் காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் பெலன் தந்து தீமையானக் காரியங்களுக்கு என்னை விலக்கிக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்