யாரைப் பிரியப்படுத்துகிறேன்?

வேத பகுதி: மாற்கு 15: 1 - 15


"பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." மாற்கு 15:15

யூத ஜனங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பிடித்துக் கொண்டு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுக்கின்றார்கள். யூத ஜனங்கள் பிலாத்துவினிடம் இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். பிலாத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசாரித்து விட்டு அவரிடம் ஒரு குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்லுகின்றான். யூதர்களோ இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று சத்தமிடுகின்றார்கள். ஜனங்களுக்கு நீதி நியாயங்களைச் செய்ய வேண்டிய தேசாதிபதியாகிய பிலாத்துவோ இயேசுகிறிஸ்துவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை, என்றாலும் யூத ஜனங்களைப் பிரியப்படுத்துகின்றவனாய் இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுக்கின்றான்.

ஆம் பிரியமானவர்களே நாம் யாரைப் பிரியப்படுத்துகின்றோம்? நணபர்களைப் பிரியப்படுத்துகின்றோமா? அல்லது மேலதிகாரிகளைப் பிரியப்படுத்தும்படி கிறிஸ்துவுக்குப் பிரியமில்லாதக் காரியங்களைச் செய்கின்றோமா? அல்லது குடும்பத்தினர் உறவினர்களைப் பிரியப்படுத்தும்படி நடந்து கொள்ளுகின்றோமா? இல்லை நாம் தேவனைப் பிரியப்படுத்துகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். சவுல் ஜனங்களைப் பிரியப்படுத்துகின்றவனாய் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. சவுலுடைய முடிவு பரிதாபம். பிலாத்துவின் முடிவும் மிகப் பரிதாபம். கர்த்தருக்குப் பயந்து அவருடைய கட்டளைகளுக்கு மிகவும் பிரியமாய் நடக்கும் போது நாம் பாக்கியவான்களாய் பாக்கியவதிகளாய் மாறுவோம்.


சிந்தனை: நான் யாரைப் பிரியப்படுத்துகின்றேன்? என்னுடைய நடவடிக்கை யாரைப் பிரியப்படுத்துகின்றன? கிறிஸ்த்துவையா அல்லது உலகத்தின் காரியங்களையா?

ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடைய நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் உம்மைப் பிரியப்படுத்தி பாக்கியாவானா(ளா)க இந்த உலகத்திலே உமக்குச் சாட்சியாக ஜீவிக்கக் கிருபையையும் பெலனையும் தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்