ரூத் பெற்ற மேன்மை

             “நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்.” ரூத் 3:11 (பி)

         மோவாபியர் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று வரும் போது  இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிட்டதினால் கடவுள் அவர்களை விட்டு விலகியிருக்க வேண்டும் அவர்க்ளைக் கர்த்தருடைய சபையில் சேர்க்கக்கூடாது என்று மோசேயின் மூலமாகக் குறிக்கப்பட்ட சந்ததியிலிருந்து வந்த ரூத்தின் சந்ததியில் ராஜாக்களும் விசேஷமாக இயேசு கிறிஸ்துவும் பிறப்பதற்கு ரூத்தினிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள்.

1. யெகோவா தேவனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டாள்:

                ரூத் விக்கிரக வழிபாடுகளை உடைய சந்ததியில் பிறந்து விக்கிரக வழிபாட்டை உடையப் பெண்ணாய் இருந்தாலும் உண்மைக் கடவுளான யெகோவா தேவனைத் தன்னுடையக் கடவுளாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய எல்லா வழிபாடுகளையும் விட்டு விட்டு யெகோவா தேவனை மாத்திரம் வணங்குகின்றப் பெண்ணாக மாறினாள்.

2. மாமியாரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தாள்:

      ரூத் தன்னுடைய தேசத்தையும் தன்னுடைய இனத்தாரையும் உறவினர்களையும் விட்டு விட்டு இஸ்ரவேல் தேசத்திற்குத் தன்னுடைய மாமியாரோடு கூட வந்த பின்பு தன்னுடைய மாமியார் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்து வந்தாள்.

3. உழைக்கும் பெண்ணாகத் திகழ்ந்தாள்:

             ரூத் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தப்பின்பாக தன்னுடைய மாமியார் யாரிடமாவது உணவிற்காகத் தானியத்தைப் பெற்றுத் தருவார் என்று நினைத்து வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொள்ளாமல் தனக்காவும் தன்னுடைய மாமியாருக்காகவும் உணவு சேகரிப்பதற்காகக் கிளம்பிச் சென்று உணவு சேகரிக்கும் பெண்ணாகத் திகழ்ந்தாள்.

4. கற்பைக் காத்துக் கொண்டாள்:

             ரூத் தன்னுடையக் கணவன் மரித்தப் பின்பு வேற்று மனிதர்கள் பின்னாடிச் சென்று தன்னுடையக் கற்பைக் கெடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய மாமியாரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போவாஸை மணமுடித்து ராஜாக்களின் சந்ததிக்குக்த் தாயானாள்.


         இஸ்ரவேல் ஜனங்களாலும் கடவுளாலும் வெறுக்கப்பட்ட சந்ததியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய நல்ல நடக்கைகளால் ரூத் மேன்மையைப் பெற்றுக் கொண்டாள்.




சிந்தனை: ரூத்திடம் காணப்பட்ட நற்குணங்கள் நம்மிடம் காணப்படுகின்றனவா?

ஜெபம்: கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே நாங்களும் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டு உமக்குக் கீழ்ப்படிந்து உமக்குப் பிரியமாய் வாழ்ந்து மேன்மையைப் பெற்றுக் கொள்ள உதவி புரிந்தருளும். ஆமேன்.

சிம்சோனின் வீழ்ச்சி

                  "பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக்கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்."நியாயாதிபதிகள் 16:21

      சிம்சோன் இஸ்ரவேலின் மக்களைப் பெலிஸ்தரின் அடிமைத்தனத்தினின்று மீட்கும்படியாகக் கடவுளால் அழைக்கப்பட்டவன். இரட்சகனாகத் திகழ்ந்த சிம்சோன் வீழ்ந்து போக அவனிடம் காணப்பட்ட தீய குணங்கள்

1. அழைக்கப்பட்ட நோக்கத்தை மறந்தான்:

                  சிம்சோன் தான் இஸ்ரவேலை பெலிஸ்தரிடமிருந்து மீட்கும் தலைவனாகக் கடவுளால் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மறந்து சிற்றின்பப் பிரியனாகவும் கடவுளின் கட்டளைகளை மீறுகின்றவனாகவும் மாறிப் போனான்.

2.கடவுளின் கட்டளைகளை மீறி நடந்தான்:

                    கடவுளால் நசரேயனாக அழைக்கப்பட்ட சிம்சோன், கடவுள் விதித்தக் கட்டளைகளை மீறி நடந்தான். மோசே மூலமாக கடவுள் புறஜாதிப் பெண்களைக் மணம் புரிய வேண்டாம் என்று கூறின கட்டளையை மீறி நடந்து பெலிஸ்தியப் பெண்ணை மணம் புரிய ஓடினான். மேலும் விபசாரம் செய்கின்றப் பெண்ணிடமும் தொடர்பு வைத்துக் கொண்டான்.

3. பெற்றோரின் வார்த்தைகளை உதாசீனம் செய்தான்:

                          சிம்சோனின் பெற்றோர் பெலிஸ்தரின் பெண்ணை மனைவியாகக் கொள்ள வேண்டாம், இஸ்ரவேல் புத்திரப் பெண்ணை உனக்கு மனைவியாகக் கொள்வோம் என்று சொல்லியவார்த்தைகளை உதாசினப்படுத்தி,எனக்கு பெலிஸ்தியப் பெண்ணைத் தான் மனைவியாகக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்‍தான்.

சிந்தனை: சிம்சோனைப் போலப் பாவத்திலே வீழ்ந்து கிடக்கின்றோமா? ஆண்டவர் இயேசு நம்மை விடுவிக்கும்படியாக அழைக்கின்றார்.

ஜெபம்: அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே, பாவத்திலே அடிமைப்பட்டுக் கிடக்கின்ற என்னை உம்முடைய திரு இரத்தத்தினாலேக் கழுவிப் பரிசுத்தப்படுத்தி, நான் உமது பிள்ளையாக வாழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள உதவி புரின்‍தருளும். ஆமேன்.