வேத பகுதி: ஆதியாகமம் 50: 15 - 21
அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா ; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ஆதியாகமம் 50: 19, 20
சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்த மக்களை அரசி மேரி துன்புறுத்திய காலத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காகக் கைது செய்து காவலில் வைக்கப்பட்டார் பெர்னார்ட் கில்பின் (1517 - 1583) என்ற தேவ மனிதர். மரண தண்டனைக்காக லண்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் அவர் குதிரையிலிருந்த்து கீழே விழுந்து விட்டார். ஆனால் அவரோ எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அவர் கீழே விழுந்ததினால் பிரயாணம் சில நாட்கள் தடைபட்டது. மீண்டுமாக லண்டனுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் லண்டனை நெருங்கிய போது ஆலய மணி ஒலித்தது. விசாரித்த போது அரசி மேரி இறந்து விட்டார் சீர்திருத்தத் திருச்சபையினரை எரிப்பதும் நின்று விட்டதாகக் கூறினார்கள். கில்பின் காவலர்களிடம் எல்லாம் நன்மையாக நடந்தது என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.
யோசேப்பினுடைய சகோதரர்கள் தங்களுடைய தகப்பன் மறைவிற்குப் பின்பு யோசேப்பு தங்களைப் பழி வாங்குவான் என்று எண்ணி யோசேப்பிடம் மன்றாடுகின்றார்கள். ஆனால் யோசேப்பு அவர்களைப் பார்த்து நீங்கள் எனகுத் தீங்கு செய்ய நினைத்தீர்கள் ஆனால் தேவனோ எல்லாவற்றையும் நன்மையாக மாற்றினார் என்று சொல்லி அவர்களைப் பாதுகாத்தான். நாமும் தேவனுக்குப் பயந்து அவருடையக் கற்பனைகளுக்குப் பயந்து நடக்கும் போது நமக்குத் துன்பங்கள் கஷ்டங்கள் வந்தாலும் தேவன் நமக்கு எல்லாவற்றையும் நன்மையாகச் செய்வார் என்று அவரை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமானால் கர்த்தர் நம்மையும் யோசேப்பைப் போல உயர்த்தி ஆசீர்வதிப்பார். அப்படிப்பட்டக் கிருபைகளை தேவன் நமக்குத் தந்து வழிநடத்துவாராக.
சிந்தனை: சோதனைகள் துன்பங்கள் கஷ்டங்கள் வரும்போது நாம் தேவனை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றோமா?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே எனக்குத் துன்பங்கள் கஷ்டங்கள் வருகின்ற வேளைகளில் நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொள்ள உதவி புரிந்தருளும். அதன் மூலமாக உம்மிடத்திலிருந்து பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள உதவியருளும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்