சிம்சோனின் வீழ்ச்சி

                  "பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக்கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்."நியாயாதிபதிகள் 16:21

      சிம்சோன் இஸ்ரவேலின் மக்களைப் பெலிஸ்தரின் அடிமைத்தனத்தினின்று மீட்கும்படியாகக் கடவுளால் அழைக்கப்பட்டவன். இரட்சகனாகத் திகழ்ந்த சிம்சோன் வீழ்ந்து போக அவனிடம் காணப்பட்ட தீய குணங்கள்

1. அழைக்கப்பட்ட நோக்கத்தை மறந்தான்:

                  சிம்சோன் தான் இஸ்ரவேலை பெலிஸ்தரிடமிருந்து மீட்கும் தலைவனாகக் கடவுளால் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மறந்து சிற்றின்பப் பிரியனாகவும் கடவுளின் கட்டளைகளை மீறுகின்றவனாகவும் மாறிப் போனான்.

2.கடவுளின் கட்டளைகளை மீறி நடந்தான்:

                    கடவுளால் நசரேயனாக அழைக்கப்பட்ட சிம்சோன், கடவுள் விதித்தக் கட்டளைகளை மீறி நடந்தான். மோசே மூலமாக கடவுள் புறஜாதிப் பெண்களைக் மணம் புரிய வேண்டாம் என்று கூறின கட்டளையை மீறி நடந்து பெலிஸ்தியப் பெண்ணை மணம் புரிய ஓடினான். மேலும் விபசாரம் செய்கின்றப் பெண்ணிடமும் தொடர்பு வைத்துக் கொண்டான்.

3. பெற்றோரின் வார்த்தைகளை உதாசீனம் செய்தான்:

                          சிம்சோனின் பெற்றோர் பெலிஸ்தரின் பெண்ணை மனைவியாகக் கொள்ள வேண்டாம், இஸ்ரவேல் புத்திரப் பெண்ணை உனக்கு மனைவியாகக் கொள்வோம் என்று சொல்லியவார்த்தைகளை உதாசினப்படுத்தி,எனக்கு பெலிஸ்தியப் பெண்ணைத் தான் மனைவியாகக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்‍தான்.

சிந்தனை: சிம்சோனைப் போலப் பாவத்திலே வீழ்ந்து கிடக்கின்றோமா? ஆண்டவர் இயேசு நம்மை விடுவிக்கும்படியாக அழைக்கின்றார்.

ஜெபம்: அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே, பாவத்திலே அடிமைப்பட்டுக் கிடக்கின்ற என்னை உம்முடைய திரு இரத்தத்தினாலேக் கழுவிப் பரிசுத்தப்படுத்தி, நான் உமது பிள்ளையாக வாழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள உதவி புரின்‍தருளும். ஆமேன்.