"தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்." 2 கொரிந்தியர் 1:4
இயேசு கிறிஸ்துவின் அடியவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நமக்கு வரும் துன்பங்கள் உபத்திரவங்கள் துயரங்கள் நம்மை நெருக்குகின்ற வேளைகளில் நாம் சோர்ந்து போய் துவண்டு விடக் கூடாது. சில வேளைகளில் நாம் செய்த தப்பிதங்களை நாம் திருத்திக் கொள்ளும்படியான சிட்சையாகக் கூட அவைகள் இருக்கலாம். சில வேளைகளில் அவைகள் நாம் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை ஆண்டவரண்டை நடத்தக் கூடிய அனுபவப் பாடமாக இருக்கலாம். ஆனாலும் நமக்கு வருகின்றத் துன்பங்கள் எல்லாவற்றினின்றும் ஆண்டவர் நமக்கு ஆறுதல் தருகின்றவராகவும் நம்மை ஆறுதல்படுத்திகிறவராகவும் இருந்து நம்மை இக்கட்டுகளுக்கு விலக்கிக் காக்கின்றார்.
அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியப் பாதையில் பலவிதமானப் பாடுகள் துன்பங்கள் உபத்திரவங்கள் எதிர்ப்புகள் அடிகள் காவல்கள் போன்றவைகள் ஏற்பட்டாலும் கூட அநேகருக்கு ஆறுதல் சொல்லி அவர்களைத் தேற்ற முடிந்தது. ஏனென்றால் கிறிஸ்து என்னோடுக்கூட இருக்கின்றார் நான் எதற்கும் கவலைப்படுவதில்லை என்ற விசுவாசத்தோடு வைராக்கியமாக ஊழியம் செய்ய முடிந்தது. நாமும் நம்முடைய சோதனை வேளைகளில் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் போது நாம் ஆண்டவரால் ஆறுதலைப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாது நாம் அநேகரை ஆறுதல்படுத்தி அவர்களை ஆண்டவரண்டை வழி நடத்தும் கருவியாகப் பயன்படுத்த ஆண்டவர் சித்தமாயிருக்கிறார்.
சிந்தனை:"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." சங்கீதம் 119:71.
ஜெபம்: கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே எனக்கு நேரிடுகின்ற உபத்திரவங்களில் உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு பாடு அனுபவிக்கின்றவர்களை உம்மண்டை வழிநடத்தவும் எனக்கு நேரிடுகின்ற துன்பங்களினின்று விடுதலை பெற்று உம்மை மகிமைப்படுத்தவும் உதவி புரிந்தருளும். ஆமேன்
0 comments:
கருத்துரையிடுக