மனந்திருந்திய மைந்தன்

வேதபகுதி: லூக்கா 15 : 11 - 32

"பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். லூக்கா 15 : 21"


அந்தக் குடும்பத்திற்கு மூன்று பிள்ளைகள். இவன் ஒருவன் தான் பையன் மற்றவர்கள் பெண்பிள்ளைகள். ஒரு நாள் தன் பெற்றோரிடத்தில் சண்டை போட்டுக் கொண்டு தூர இடத்திற்குச் சென்று விட்டான். பெற்றோர்கள் அவனைத் தேடிப் பார்த்தார்கள், ஆனால் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குக் கடிதம் வந்தது. அதில் அவனுடைய வீடு ரெயில் தண்டவாளத்திற்கு அருகில் இருப்பதினால் தான் இந்த தேதியில் வருவதாகவும். அந்த நாளில் வீட்டின் முன்பதாக ஒரு வெள்ளைக் கொடி கட்டி வைக்கும் படியாக எழுதியிருந்தான். அந்தக் கொடி கட்டப்பட்டு இருந்தால் வீட்டிற்கு வருவதாகவும் இல்லையென்றால் தான் வந்த வழியே திரும்பிச் செல்வதாகவும் எழுதியிருந்தான். அந்த நாளும் வந்தது. அவன் இரயிலில் தன்னுடைய வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஊர் நெருங்க நெருங்க அவன் மனமோ என்னுடைய பெற்றோர் என்னை மன்னித்து வெள்ளைக் கொடி கட்டியிருப்பார்களா? என்று தவித்துக் கொண்டிருந்தது. அவன் இப்படித் தவித்துக் கொண்டிருந்ததை அருகில் இருந்தப் பெரியவர் கவனித்து தம்பி ஏன் இப்படி அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அவன் நடந்தவைகளையெல்லாம் அவரிடம் கூறினான். உடனே அந்தப் பெரியவர் வெள்ளைக் கொடி எங்காவது கட்டியிருக்கிறதா என்று பார்த்துச் சொல்வதாகக் கூறினார். அவன் வீட்டிற்கு சற்று அருகில் ரெயில் வரும் போது அந்தப் பெரியவர் அவனிடம் தம்பி ஒரு வீட்டில் நிறைய வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு உள்ளது என்று கூறினார். அவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து நேராக வீட்டிற்குச் சென்றான். அங்கு அவன் வீட்டில் பெற்றோர் அவனை அன்புடன் வரவேற்றனர். அவன் தன்னுடைய தகப்பனாரிடம் அப்பா நான் ஒரு வெள்ளைக் கொடி தானே கட்டச் சொன்னேன்? நீங்கள் வீடு முன்பதாக நிறைய வெள்ளைக் கொடிகள் கட்டியிருக்கிறீர்களே என்று கேட்டான். அதற்கு அவனுடைய தகப்பனார். நாங்கள் ஒரு வெள்ளைக் கொடி கட்டி உன் கண்ணில் படாமல் நீ திரும்பிச் சென்று விட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்று கூறினார். உடனே அவன் தன்னுடையப் பெற்றோரைக் கட்டிக் கொண்டு அழுதான்.


ஆம் பிரியமானவர்களே நமது ஆண்டவரும் எனது மகன்/மகள் எப்பொழுது என்னன்டை வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் என்று ஆண்டவர் உங்கள் இருதயத்தைக் கேட்கிறார். மகனே/மகளே என்னன்டை வா என்று கூவி அழைக்கிறார். இன்றே நீ ஆண்டவரண்டை வருவாயா?. மனம் திருந்திய மைந்தனுக்கு அவன் தகப்பனார் அவன் அவருடைய சொத்தை அழித்தாலும் அவனுக்கு உயர்ந்த வஸ்திரத்தை உடுத்தியது போல ஆண்டவரும் உங்களுக்கு ஒரு உயர்ந்ததான எதிர்காலத்தை வைத்திருக்கிறார். இன்றே நாம் ஆண்டவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவருடைய சுதந்திரவாளியாகி ஆசிர்வாதத்தைச் சுதந்தரிப்போம்.



சிந்தனை: ::"உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள்." அப்போஸ்தலர் 3:20

ஜெபம்:
அன்பு நிறைந்த தேவா நான் என்னுடைய பாவங்களையெல்லாம் உம்மிடம் அறிக்கையிடுகிறேன். நீரே என்னை மன்னித்து நான் பரிசுத்தமாய் ஜீவிக்கக் கிருபை தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மனக்கடினம்

"அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்" நீதிமொழிகள் 29:1



அமெரிக்கத் தேசத்தில் ஒரு இனிதான மாலைப் பொழுதினில் நற்செய்தியாளர் ஒருவர் "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது; நாளையத்தினம் நடப்பதை நீ அறிய மாட்டாயே, இன்றே உனக்குக் கடைசி நாளாயிருக்கலாம் ஆகவே இன்றே மனம் திரும்பு" என்று பிரசங்கித்துக் கொண்டிருந்தார். நற்செய்திக் கூட்டம் நடந்த வழியே மர்லின் மன்றோ என்ற நடிகை வந்துக் கொண்டிருக்கிறார், அவர் நற்செய்தியைக் கேட்டதும் அதற்குச் செவிகொடுக்காமல் "எனக்குப் படப்பிடிப்பு வேலைகள் நிறைய இருக்கிறது மனம் திரும்புவதைப் பிறகு பார்க்கலாம் என்று அலட்சியமாகச் சென்று விட்டார். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அவளுக்கு நற்செய்தியைக் கேட்கக் கூடியத் தருணம் கிடைத்தது. அப்போதும் நற்செய்தியாளர் மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த வேளையிலும் அவள் தன் மனதைக் கடினப்படுத்திக் கொண்டுச் சென்று விட்டாள். அந்தோ பரிதாபம்! அன்று இரவே மனதில் அமைதி இல்லாமல் அளவிற்கு அதிகமாகப் போதை வஸ்து உண்டு மரித்தார்.



ஆம் பிரியமானவர்களே, ஆண்டவர் நமக்கும் மனந்திரும்புதலுக்கு பலத் தருணங்களை பல்வேறு ஊழியக்காரர்கள் மூலமாகவோ அல்லது வேதவசனங்கள் மூலமாகவோ எச்சரித்துக் கொண்டிருக்கிறார். நாமும் நமது மனதைக் கடினப்படுத்திக் கொண்டு இன்னமும் மனந்திரும்பாமல் இருப்போமானால் நாம் எரிகிற அக்கினிக்கடலில் தள்ளப்படுவோம். தேவன் கொடுக்கும் எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தி மீண்டும் மீண்டும் பாவம் செய்துக் கொண்டிருப்போமானால் நமக்குச் சடுதியில் நாசம் நேரிடும் அப்பொழுது தேவன் நம்மைக் கைவிட்டு விடுவார். கடைசி நேரத்தில் நாம் கதறினாலும் நமக்கு மன்னிப்பு அருளப்படமாட்டாது. நான் என்னுடையக் கடைசிக் காலத்தில் மனந்திரும்பி விடுவேன் இப்பொழுது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நீ சொல்லுவாயாகில் "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.




சிந்தனை: "நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை."எசேக்கியேல் 18:30


ஜெபம்: இயேசுவே என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன், நீரே என் பாவங்களையெல்லாம் கழுவிப் பரிசுத்தமாக்கும். ஆமேன்


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாவத்திலிருந்து விடுதலை

வேதபகுதி: 1யோவான்


தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். "
1யோவான் 3:9



ஒரு மனிதர் தன்னுடைய வீட்டை விற்க விரும்பினார். ஆனால் அந்த வீட்டின் ஒரு மூலையில் உள்ள ஒரே ஒரு அறை மட்டும் தனக்குச் சொந்தமாக இருக்கும் என்று கூறினார். இந்த வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் அந்த வீட்டைக் குறைந்த விலைக்கு வாங்க முன் வந்தார்.வீட்டை வாங்கியக் குடும்பத்தினர் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் வீட்டை விற்ற அந்த நபர் ஒரு சில ஆண்டுகள் கழித்து தான் விற்ற வீட்டைப் பார்ப்பதற்காக வந்தார். பின்னர் வீட்டை வாங்கிய நபரிடம் தான் மீண்டும் இந்த வீட்டை வாங்குவதாகவும் வீட்டை தங்களுக்கு விற்று விடும் படிக் கேட்டார். அதற்கு வீட்டை வாங்கிய நபர் தான் விற்க விரும்பவில்லை என்று கூறினார். வீட்டை விற்ற நபர் சென்று விட்டார். ஒரு சில நாட்கள் கழித்து விட்டை விற்ற நபர் தனக்குச் சொந்தமான அந்த அறையில் ஒரு செத்த நாயைக் கொண்டு வந்துத் தொங்க விட்டுச் சென்றார். வீட்டை வாங்கிய நபரால் அந்த வீட்டில் இருக்க மூடியாமல் வெளியேற வேண்டியதாகி விட்டது.



ஆம் பிரியமானவர்களே, இப்படித்தான் நாமும் நம்மை முழுமையாக ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்காமல், ஏதாவது ஒரு சிலத் தவறுகளைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஒருகட்டத்தில் பாவம் நம்மை ஆட்கொண்டு நாம் முழுவதுமாகச் சாத்தானின் பிள்ளைகளாகி விடுகின்றோம். மேலே கூறிய சம்பவத்தில் வீட்டை வாங்கிய நபர் ஓரத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய அறை தானே அதனால் நமக்கு என்ன நஷ்டம் வரப்போகிறது விலை குறைவாக வீடு கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கி விட்டார். ஆனால் அவரால் நிரந்தரமாக குடியிருக்க முடியவில்லை.




நாமும் நம்முடைய சிற்றின்பத்திற்காக ஒரு சில பாவங்களைச் செய்துக் கொண்டிருப்போமானால் "நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" என்று 1 யோவான் 1 :6 - 8 ல் சொல்லியிருக்கிறபடி நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். ஒளி நம்மிடத்தில் இல்லை. நாம் நம்மைப் பூரணமாய் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் அவர் நம்மை ஆசிர்வதிப்பார்.





சிந்தனை: :"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" 1 யோவான் 1:9


ஜெபம்: தேவனே நான் என்னை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீரே என்னை வழிநடத்தி பரலோக வாழ்விற்குப் பங்காளராக என்னை மாற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்