பாவத்திற்கு உடன்படாதே


"மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்." 1 தீமோத்தேயு 5: 22 பி



நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல வேளைகளில் சிறந்த கிறிஸ்தவப் பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்களும் ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக வாழ்ந்தவர்களும் கூட உலகத்தின் போக்கிலே சென்று பாவம் செய்கின்றவர்களாக மாறி விடுகின்றார்கள். வேலைக்காக அல்லது கல்விக்காக செல்லுகின்ற இடங்களில் உள்ள புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலைகள் பல வேளைகளில் பாவங்களுக்கு உடன்பட்டு வாழ தூண்டு கோலாக அமைந்து கிறிஸ்து காட்டிய நல்ல பாதையை விட்டு விலகிச் செல்லும் நிலையை உறுவாக்கி விடுகின்றது.


பல வேளைகளில் உலகத்தோடு ஒத்துப் போகவில்லை என்றால் அவர்கள் நம்மை ஏளனமாய்ப் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் அமைந்து விடுகின்றது. உதாரணத்திற்கு ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது ஒரு சான்றிதழ் கொடுக்க வேண்டியிருந்தாலும் விதிகளைப் பார்த்து சரியாகச் செய்யும் போது பலவிதங்களில் நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. நண்பர்களும் உடன் வேலை பார்ப்பவர்களும் மேலதிகாரிகளும் சொல்லுகின்ற காரியம் சார் வாங்குறத (லஞ்சம்) வாங்கிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுங்க என்பது தான். நான் நேர்மையாகத் தான் நடப்பேன்  என்று அவர்களிடம் சொல்லும்போது அவர்கள் நம்மைக் கேலி செய்யும் சூழ்நிலை வந்து விடுகின்றது. இப்படிப்பட்ட கேலிக்கு ஆளாகக்கூடாது என்று சொல்லிப் பல வேளைகளில் அவர்களோடு கூடச் சேர்ந்து பலவிதமான பாவங்களுக்கு உடன்பட்டு ஆண்டவருக்குப் பிரியமில்லாதக் காரியத்தை செய்து விடுகின்றனர்.

         இப்படிப்பட்ட காரியங்கள் நாகரிகம் அல்லது ஒரு தவறாகப் பார்க்கப்படாதக் காலத்தில் வாழ்கின்ற நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். உலகத்தின் வழியில் சென்று உலகத்தாரின் பாவத்துக்கு உடன்பட்டு வாழ்கின்றோமா அல்லது வேதத்தின் கற்பனைகளுக்குச் செவிகொடுத்து மற்றவர்கள் நம்மைக் கேலி செய்தாலும் நம்மைச் சுத்தவானாகக் காத்துக் கொண்டு பரிசுத்த வாழ்வு வாழ்கின்றோமா என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். இது வரை நாம் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த வேளையிலும் நாம் தானியேலைப் போல, யோசேப்பைப் போலப் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வு வாழ அழைக்கப்ப்டுகின்றோம். அப்படி நாம் வாழும் போது தேவன் நம்மையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்.


சிந்தனை: பாவம் நிறைந்த உலகில் கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்பவனே உண்மைக் கிறிஸ்தவன்.


ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் பாவத்திற்கு உடன்பட்ட வாழ்க்கை வாழாமல் பரிசுத்த வாழ்வு வாழ உதவி புரியும். ஆமேன்.