யாருக்கு உயர்வு

"அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்." ஏசாயா 33:16





கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உயர்வு கிடைத்து விடுமா என்று பார்ப்போமானால் இல்லை என்பதே பதில். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள், ஆசீர்வதிக்கப்படூவீர்கள் என்று தானே ஊழியர்கள் பிரசங்கிக்கின்றார்கள். அவர்கள் கூறுவது பொய்யா அல்லது உண்மையா? பின்னை யார் உயர்வடைவார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பக்கூடும். உங்களது கேள்விக்குப் பதில் இங்கே. யார் கிறிஸ்துவின் முன்பாக உயர்த்தப்படுவார்கள் என்று பார்ப்போமானால்




1 நீதி செய்பவர்கள்:

"நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்." நீதிமொழிகள் 10: 6

2. செம்மையானவைகளைச் செய்பவர்கள்:


"நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது." சங்கீதம் 97:11

3. பரிதானம்(லஞ்சம்) வாங்காதவர்கள்:


"தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 15: 5

4.பொல்லாங்கான(தீமையான) காரியங்களைச் செய்யாதவர்கள்:


"பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." சங்கீதம் 37:9



நாமும் மேலேக் குறிப்பிட்டுள்ளக் காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் கர்த்தர் நம்மையும் இந்தப் பூமியிலே உயர்த்துவார்.




சிந்தனை: நான் உயர்த்தப்படுவதற்குத் தகுதியாய் இருக்கின்றேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் இவைகளைக் கைக்கொண்டு இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உமதுக் கிருபைகளைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நீதியின் கிரியை

"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்." ஏசாயா 32:17





நாம் வாழுகின்ற இந்த நவீனக் காலத்தில் நீதியாய் நடப்பது என்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது. கர்த்தருக்குப் பயந்து நீதியாய் நடப்பவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கின்றது. கிறிஸ்தவர்களும் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நியாயங்களையும் நீதியையும் விட்டு விடுகின்றார்கள். அநேக கிறிஸ்தவ அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைக் காண முடிகின்றது. ஒரு சில கிறிஸ்தவ நீதிபதிகளும் கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு நியாயத்தைப் புரட்டுகின்றார்கள். இப்படி நியாயங்களைப் புரட்டி கர்த்தர் நமக்கு கூறியக் கட்டளையை மறந்து விடுகின்றோம்.

"நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக." லேவியராகமம் 19 : 15




நோவா தன்னுடையக் காலத்திலே நீதிமானாக இருந்ததினால் தான் கர்த்தர் அவரை அழிக்கச் சித்தம் கொள்ளாமல் பேழையினால் அவரைக் காப்பாற்றினார்.


"நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்." சங்கீதம் 92: 12



ஆனால் ஆகாப் ராஜாவைப் பாருங்கள் அவன் நாபோத்தினிடமிருந்து தோட்டத்தை அநியாயமாகப் பறித்ததினால் அவனுடைய சந்ததியே அழிந்துப் போனது.


"கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்" சங்கீதம் 1: 6



நீதி நியாயங்களைப் புரட்டுகின்றக் கடைசிக் காலத்திலே கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கியிருக்கின்ற நாம் கர்த்தருக்குப் பயந்து நீதி நியாயங்களைச் செய்வோமானால் நாமும் அவருடைய வருகையில் நித்திய ராஜ்ஜியத்திற்குச் செல்லலாம்.மாறாக இந்த உலகத்தின் மக்களைப் போல நாமும் அநீதிகளைச் செய்து நியாயங்களைப் புரட்டுவோமானால் நம்மைத் தேவன் நியாயத்தீர்ப்பின் நாளிலே நித்திய அக்கினிக் கடலுக்கு ஒப்புக் கொடுப்பார்.




சிந்தனை: "துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்." நீதிமொழிகள் 3 : 33


ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடையக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நீதி செய்யவும் நியாயங்களை நிறைவேற்றவும் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்