நீடிய பொறுமை

வேதபகுதி:யாக்கோபு 5 : 7 - 12


நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். வசனம் 8



தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் வேதாகமக் கல்லூரிகளில் பணியாற்றிய வேத நிபுணரான சாமுவேல் ஐயர் அவர்கள் தன் வாழ்க்கையில் நீண்டகாலம் பல சோதனைகளை அனுபவித்தார். மனைவி நீண்ட நாட்களாக வியாதிப்படுக்கையில் இருக்க மகன் மரித்தான். அடக்க ஆராதனை நிறைவு பெற்றவுடன் தன் பேராயரைச் சந்திக்க ராஜினாமாக் கடிதத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் பட்ட ஒரு துண்டுத் தாளில் அடங்கிய வாசகம், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" (யோபு 19:25) என்பதே. உடனே அவர் மனக்கன்முன் தோன்றிய வேதபகுதி யோபுவின் புஸ்தகம். யோபு சந்தித்தப் பாடுகள் அவர் கண்முன் திரைப்படம் போல ஓடியது. அத்தனை பாடுகளுக்கு மத்தியிலும் மனம் தளராது இவ்வசனத்தைக் கூறிய விசுவாச வீரரான யோபுவின் வாழ்க்கை சாமுவேல் ஐயருக்குப் புத்துண்ரச்சியைக் கொடுத்தது. அப்போது அவர் எழுதிய பாடல் தான் "என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கு என்ன குறையுண்டு நீ சொல் மனமே"



ஆம் அருமையானவர்களே, நாம் சந்திக்கும் பாடுகள் மத்தியிலும் நாம் ஆண்டவரைத் துதித்தால் தேவனே அதை நன்மையாக முடியச் செய்வார். பக்தன் யோபுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது இத்தனை பாடுகள் மத்தியிலும் அவர் தூஷிக்கவேயில்லை, அவருடைய மனைவி யோபுவைப் பார்த்து தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று சொல்லுகிறார். அதற்கு யோபு தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை(யோபு 2: 9,10).




ஆண்டவருக்கு நன்றி செலுத்தும்போது நாம் இழந்து போன ஆசிர்வாதமோ, சுகமோ, நன்மையோ எதுவாயிருந்தாலும் ஆண்டவரை நாம் துதிக்கும் போது அவர் யோபுவை ஆசிர்வதிதது போல இரட்டிப்பான நன்மைகளால் நம்மையும் ஆசிர்வதிப்பார்.




சிந்தனை: நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டத்தைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரேயர்: 10 : 36


ஜெபம்: ஆண்டவரே, வேதனைகள் துன்பங்களின் மத்தியில் நீடிய பொறுமையைத் தந்து ஆசிர்வதியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எது பாவம்?

வேதபகுதி:யாக்கோபு 4 : 16 - 17


ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதை செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும். வசனம் 17



சுந்தர் தன் நண்பர்களோடு தன் கிராமத்திற்குச் செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் (படிக்காதவர்) பாபநாசம் செல்ல எந்தப் பேருந்தில் ஏற வேண்டும் என்று கேட்டார். சுந்தர் அவரை சங்கரன்கோவில் பேருந்தில் ஏற்றிவிட்டான். தன் நண்பர்களோடு தான் செய்ததைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டான். தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனது தகப்பனார் இரவில் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். எதற்காக இவ்வளவு நேரம் ஆனது என்று சுந்தரின் அம்மா கேட்டார்கள். தகப்பனார் தான் வந்த பேருந்து காட்டுப்பாதையில் பிரேக் டவுண் ஆகியதாகவும், அடையாளம் தெரியாத ஒரு வாலிபன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினார். இதைக் கேட்ட சுந்தர் சுக்கு நூறாய் உடைந்தான். மனம் திருந்தினான்.



தீமையான காரியத்தைச் செய்வதிலும், பேசுவதிலும் வரும் புகழ்ச்சி, பாராட்டு யாவுமே பாவம்.




நன்மை செய்ய முடியும் என்றால் அந்த நன்மையை, உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். செய்யாமற்போனால் பாவம். 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த மனிதனுக்கு நன்மை செய்ய ஒருவரும் இல்லை. இதைப்போல் எத்தனை பேர் உன்னை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.




சிந்தனை: நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்? தீமைக்குத் தீமை செய்கிறோமா? அல்லது நன்மை செய்கிறோமா?


ஜெபம்: தேவனே நான் தீமைக்குத் தீமை செய்யாமல் நன்மையை மட்டுமே செய்ய என்னைப் பெலப்படுத்தும் . ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நாளை நமதா?

வேதபகுதி:யாக்கோபு 4 : 13 - 15


நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. வசனம் 14



சந்திரன் பெரிய தொழில் அதிபர். பண ஆசை பிடித்தவர். பணம் சம்பாதிப்பதுதான் அவரது பிரதான நோக்கம். அவரது பழைய நண்பர் ஜெயராஜ். சந்திரனிடம் எதற்காக இவ்வாறு பணம் பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கிறாய்? இருப்பது போதும் என்று அதிலே திருப்தி அடையவேண்டியதுதானே என்று கேட்டார். அதற்கு சந்திரன் கோபமாக, "நீ ஒரு முட்டாள். இந்தக் காலத்தில் பணம் இல்லவிட்டால் உலகில் மதிப்பே கிடையாது" என்றார். அன்று இரவே சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்து அவர் உயிர் பிரிந்தது.



நமது சுயபெலத்தை நம்பி, இறைவனை மறந்துவிடுகிறோம். தன்னம்பிக்கை வேண்டும். அதோடு தேவகிருபை அவசியம். சுய பெலத்தை மாத்திரம் நம்புகிறவர்கள் ஏராளம். அதைச் செய்வேன், இதைச் சாதிப்பேன் என்று கூறுபவர்கள் பலர் உண்டு.




நாளை நடப்பது நமக்குத் தெரியாது. வசனம் 14ல் நமது ஜீவன் புகையைப் போன்றது. ஜீவன் மீது அதிகாரமுடையவர் கிறிஸ்து ஒருவர் தான். சுய நம்பிக்கை அழிந்துபோகிறது.



நாம் செய்ய வேண்டியது,

தேவனுடைய கிருபையை முன் நிறுத்தவாண்டும். ஆண்டவருக்குச் சித்தமானால், தேவன் எனக்கு ஆயுசை, பெலனை கொடுத்தல் இதைச் செய்வேன் என்று சொல்லவேண்டும்.



சிந்தனை: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் - சொல்லுகிறோமா?


ஜெபம்: தேவனே உம்முடைய கிருபை ஒவ்வொரு நாளும் என்னைத் தாங்குவதாக. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்