மதியம் புதன், 19 டிசம்பர், 2007

நீடிய பொறுமை

வேதபகுதி:யாக்கோபு 5 : 7 - 12


நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். வசனம் 8



தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் வேதாகமக் கல்லூரிகளில் பணியாற்றிய வேத நிபுணரான சாமுவேல் ஐயர் அவர்கள் தன் வாழ்க்கையில் நீண்டகாலம் பல சோதனைகளை அனுபவித்தார். மனைவி நீண்ட நாட்களாக வியாதிப்படுக்கையில் இருக்க மகன் மரித்தான். அடக்க ஆராதனை நிறைவு பெற்றவுடன் தன் பேராயரைச் சந்திக்க ராஜினாமாக் கடிதத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் பட்ட ஒரு துண்டுத் தாளில் அடங்கிய வாசகம், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" (யோபு 19:25) என்பதே. உடனே அவர் மனக்கன்முன் தோன்றிய வேதபகுதி யோபுவின் புஸ்தகம். யோபு சந்தித்தப் பாடுகள் அவர் கண்முன் திரைப்படம் போல ஓடியது. அத்தனை பாடுகளுக்கு மத்தியிலும் மனம் தளராது இவ்வசனத்தைக் கூறிய விசுவாச வீரரான யோபுவின் வாழ்க்கை சாமுவேல் ஐயருக்குப் புத்துண்ரச்சியைக் கொடுத்தது. அப்போது அவர் எழுதிய பாடல் தான் "என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கு என்ன குறையுண்டு நீ சொல் மனமே"



ஆம் அருமையானவர்களே, நாம் சந்திக்கும் பாடுகள் மத்தியிலும் நாம் ஆண்டவரைத் துதித்தால் தேவனே அதை நன்மையாக முடியச் செய்வார். பக்தன் யோபுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது இத்தனை பாடுகள் மத்தியிலும் அவர் தூஷிக்கவேயில்லை, அவருடைய மனைவி யோபுவைப் பார்த்து தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று சொல்லுகிறார். அதற்கு யோபு தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை(யோபு 2: 9,10).




ஆண்டவருக்கு நன்றி செலுத்தும்போது நாம் இழந்து போன ஆசிர்வாதமோ, சுகமோ, நன்மையோ எதுவாயிருந்தாலும் ஆண்டவரை நாம் துதிக்கும் போது அவர் யோபுவை ஆசிர்வதிதது போல இரட்டிப்பான நன்மைகளால் நம்மையும் ஆசிர்வதிப்பார்.




சிந்தனை: நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டத்தைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரேயர்: 10 : 36


ஜெபம்: ஆண்டவரே, வேதனைகள் துன்பங்களின் மத்தியில் நீடிய பொறுமையைத் தந்து ஆசிர்வதியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்