பாவத்திற்கு உடன்படாதே


"மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்." 1 தீமோத்தேயு 5: 22 பி



நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல வேளைகளில் சிறந்த கிறிஸ்தவப் பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்களும் ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக வாழ்ந்தவர்களும் கூட உலகத்தின் போக்கிலே சென்று பாவம் செய்கின்றவர்களாக மாறி விடுகின்றார்கள். வேலைக்காக அல்லது கல்விக்காக செல்லுகின்ற இடங்களில் உள்ள புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலைகள் பல வேளைகளில் பாவங்களுக்கு உடன்பட்டு வாழ தூண்டு கோலாக அமைந்து கிறிஸ்து காட்டிய நல்ல பாதையை விட்டு விலகிச் செல்லும் நிலையை உறுவாக்கி விடுகின்றது.


பல வேளைகளில் உலகத்தோடு ஒத்துப் போகவில்லை என்றால் அவர்கள் நம்மை ஏளனமாய்ப் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் அமைந்து விடுகின்றது. உதாரணத்திற்கு ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது ஒரு சான்றிதழ் கொடுக்க வேண்டியிருந்தாலும் விதிகளைப் பார்த்து சரியாகச் செய்யும் போது பலவிதங்களில் நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. நண்பர்களும் உடன் வேலை பார்ப்பவர்களும் மேலதிகாரிகளும் சொல்லுகின்ற காரியம் சார் வாங்குறத (லஞ்சம்) வாங்கிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுங்க என்பது தான். நான் நேர்மையாகத் தான் நடப்பேன்  என்று அவர்களிடம் சொல்லும்போது அவர்கள் நம்மைக் கேலி செய்யும் சூழ்நிலை வந்து விடுகின்றது. இப்படிப்பட்ட கேலிக்கு ஆளாகக்கூடாது என்று சொல்லிப் பல வேளைகளில் அவர்களோடு கூடச் சேர்ந்து பலவிதமான பாவங்களுக்கு உடன்பட்டு ஆண்டவருக்குப் பிரியமில்லாதக் காரியத்தை செய்து விடுகின்றனர்.

         இப்படிப்பட்ட காரியங்கள் நாகரிகம் அல்லது ஒரு தவறாகப் பார்க்கப்படாதக் காலத்தில் வாழ்கின்ற நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். உலகத்தின் வழியில் சென்று உலகத்தாரின் பாவத்துக்கு உடன்பட்டு வாழ்கின்றோமா அல்லது வேதத்தின் கற்பனைகளுக்குச் செவிகொடுத்து மற்றவர்கள் நம்மைக் கேலி செய்தாலும் நம்மைச் சுத்தவானாகக் காத்துக் கொண்டு பரிசுத்த வாழ்வு வாழ்கின்றோமா என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். இது வரை நாம் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த வேளையிலும் நாம் தானியேலைப் போல, யோசேப்பைப் போலப் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்வு வாழ அழைக்கப்ப்டுகின்றோம். அப்படி நாம் வாழும் போது தேவன் நம்மையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்.


சிந்தனை: பாவம் நிறைந்த உலகில் கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்பவனே உண்மைக் கிறிஸ்தவன்.


ஜெபம்: அன்பின் ஆண்டவரே, பாவம் நிறைந்த இந்த உலகத்தில் பாவத்திற்கு உடன்பட்ட வாழ்க்கை வாழாமல் பரிசுத்த வாழ்வு வாழ உதவி புரியும். ஆமேன்.

அனைவரையும் கனம் பண்ணுங்கள்


"எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக்  கனம்பண்ணுங்கள்."1 பேதுரு 2: 17

          பிரியமானவர்களே, தேவன் நம்மை இந்த உலகத்தில் படைத்தது நாம் அவருக்குப் பயந்து அவருக்குப் பிரியமாய் பரிசுத்தமாக வாழ்ந்து உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களையும் கனம்பண்ணி ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக நம்மை அழைத்திருக்கின்றார். ஆனால் நாம் பலவேளைகளில் நம்மிடையே வாழுகின்ற சகமனிதர்களுக்குக் கனத்தைக் கொடுக்காமல் அவர்களை அசட்டை பண்ணியும் அற்பமாக எண்ணியும் நாம் வாழுகின்றோம். இப்படிப்பட்ட மனமேட்டிமை கொண்ட குணங்களை ஆண்டவர் நம்மிடம் விரும்பவில்லை. மாறாக நாம் தாழ்மையின் குணங்களைத் தரித்துக் கொண்டு நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களிடம் அன்புடன் நடந்து கொள்வதைத் தான் நம்மிடம் விரும்புகின்றார்.

        வேதாகமத்திலே நாம் பார்ப்போமென்றால் யாக்கோபு ராகேலை நேசித்து லேயாளை அற்பமாக எண்ணியபடியினால் தேவன் லேயாள் கர்ப்பம் தரிக்கும்படிச் செய்தார். அதேப்போல தாவீது யுத்தத்திற்குச் செல்லும் போது கோலியாத் தாவீதை அற்பமாக எண்ணுகின்றான். ஆனால் தேவன் எளியவனாகிய தாவீதின் மூலமாக இஸ்ரவேல் ஜனத்திற்கு வெற்றியைத் தருகின்றார். நாமும் நம்முடைய நல் நடக்கைகளின் மூலமாக , பிறருக்கு மதிப்பளிக்கக்கூடிய நற்குணங்களின் மூலமாக ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்த விரும்புகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தான் வாழ்ந்தக் காலங்களில் எல்லோரிடமும் அன்பு செலுத்தி முன் மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கின்றார். நாமும் நம்மைச் சுற்றி வாழ்கின்றவர்கள், உடன் வேலை பார்க்கின்றவர்கள் அனைவரிமும் அன்பு செலுத்தி கனம் பண்ணி, உயர் அதிகாரிகள், ஆளுகின்றவர்கள் அனைவருக்கும் கனத்தை செலுத்தித் தாழ்மையாக வாழும் போது தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராயிருக்கின்றார். அப்படிப்பட்ட கிருபையை நம் அனைவருக்கும் தந்து வழி நடத்துவாராக.

சிந்தனை: அனைத்து மனிதர்களையும் நேசித்து அவர்களைக் கனம்பண்ணுகின்றேனா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நான் இந்த உலகத்தில் என்னுடன் வாழ்கின்ற, வேலை பார்க்கின்ற சக மனிதர்களிடம் அன்புடன் பழகி அனைத்து மக்களையும் கனம் பண்ணி என்னுடைய நல்ல நடக்கைகள் மூலமாக உம்முடைய அன்பினை அனைவருக்கும் காண்பிக்க உதவி புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சோதனை

"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்." 1 பேதுரு 1 : 7

           உலக வாழ்க்கையிலே மனிதனுக்குப் பலவித வகைகளிலே சோதனைகள் ஏற்படுகின்றது. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளை மேற்கொண்டு தேவனின் துணை கொண்டு அவைகளை ஜெயித்து வாழும்படியாக நம்மை இந்த உலகத்தில் படைத்திருக்கின்றார். தேவனுடைய மனிதர்கள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை ஜெயித்து கர்த்தரின் நாம மகிமைக்காக இந்த உலகத்திலே சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். ஆபிரகாமுடைய வாழ்க்கையிலும் அவனுடைய விசுவாசத்திற்கும் சோதனை ஏற்பட்டது. ஈசாக்கினிடத்திலே உன்னுடைய சந்ததி விளங்கும், ஈசாக்கின் மூலமாக கடற்கரை மணலத்தனையாய் ஜனங்கள் உருவாகுவார்கள் என்று கர்த்தர் ஆபிரகாமினிடத்தில் வாக்குத்தத்தமாகக் குறிப்பிட்டார். ஆனால் ஆபிரகாமைக் கர்த்தர் அழைத்து ஈசாக்கை எனக்காகப் பலியிடு என்று கூறினார். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று விசுவாசித்து ஈசாக்கைப் பலியிடக் கூட்டிக்கொண்டு சென்றான். தேவதூதன் அங்குத் தரிசனமாகி உன்னுடைய ஏகசுதன் என்றும் பாராமல் எனக்கென்று பலியிட ஒப்புக்கொடுத்தபடியால் நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதித்து ஈசாக்கையும் தப்புவித்தார்.

          மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்திலும் பேதுரு நம்முடைய விசுவாசமும் சோதிக்கப்படும் என்று குறிப்பிடுகின்றார். பொன் எப்படி நிலத்தில் இருந்து பலவிதப் பொருள்களுடன் சேர்ந்து வெட்டி எடுக்கப்பட்டடு பின்பு அக்கினி மற்றும் பலவிதமானக் செயல்பாடுகளின் மூலமாக மின்னும் பொன்னாக உருவாக்கப்படுகின்றதோ அதேப் போல நாம் ஆண்டவர் மேல் வைத்துள்ள நமது நம்பிக்கையும் பலவிதமானச் சோதனைகளின் மூலமாகச் சோதிக்கப்படும். கர்த்தர் நமக்குப் பல வேலைகளில் வாக்குத்தத்தங்களை வேத வசனங்கள் மூலமாகத் தருகின்றார். பல வேலைகளில் கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்கு எதிராக நடப்பது போலத் தோன்றலாம். ஆனால் நாம் வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு விசுவாசமாக இருப்போமேன்றால் ஆபிரகாமின் வாழ்க்கையில் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றின ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையிலும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். நாம் விசுவாசத்தில் மேலும் உறுதியாக நிலைத்திருக்கும் போது நமக்குப் பரலோக வாழ்வின் ஆனந்தத்தையும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: நான் தேவன் மேல் வைத்துள்ள விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கின்றேனா?

ஜெபம்: அன்பு நிறைந்த ஆண்டவரே, என்னுடைய வாழ்விலே சோதனைகள் வரும்போது நீர் எனக்குத் தந்த வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டவனாக விசுவாசத்தில் நிலைத்திருந்து பரலோக வாழ்வைப் பெற்றுக் கொள்ள உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆசீர்வதிக்கும் தேவன்


வேத பகுதி: யாத்திராகமம் 23

                "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்." யாத்திராகமம் 23:25

                 நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகின்றார். நாம் சுகத்தோடு ஆரோக்கியத்தோடு பூமியில் வாழுவதை அவர் விரும்புகின்றார். அதற்காக நாம் செய்ய வேண்டிய கட்டளைகளாக மோசேயின் மூலம் யாத்திராகமம் 23ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அவைகளாவன


  • அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ள வேண்டாம் 
  • திரளான கூட்டமாகத் தீங்கு செய்யும்போது அவர்களோடு சேராதே 
  • நியாயத்தைப் புரட்ட மிகுதியான பேர்களோடு சேராதே 
  • உன்னுடைய சத்துருவாயிருப்பவனுக்கு உதவி செய் 
  • எளியவர்களின் நியாயத்தைப் புரட்டாதே 
  • கள்ளக் காரியத்துக்குத் தூரமாயிரு 
  • கொலை செய்யாதே 
  • பரிதானம்(லஞ்சம்) வாங்காதே 
  • அந்நியனை ஒடுக்காதே 
  • அந்நிய தேவர்களை வணங்காதே 
  • உன்னுடைய முதற்பலனை தேவனுடைய ஆலயத்திற்கு கொண்டுவருவாயாக

              மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கும் போது நம்மையும் தேவன் ஆசீர்வதித்து நாம் வாழுகின்ற பூமியிலே சுகமாய்த் தங்கியிருக்கும்படிச் செய்வார். மேலும் நமக்குப் பரலோக வாழ்வையும் தந்து ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக நான் தேவனுடையக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றேனா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே நான் வாழுகின்ற இந்த உலக வாழ்க்கையில் நான் உம்முடையக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக் கிருபை புரிந்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்மை செய்யுங்கள்

"ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்." யாக்கோபு 4:17


         நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நன்மை வேண்டி பல மக்கள் வாழ்கின்றனர். ஒருவருக்குப் பண உதவியாக இருக்கலாம் அல்லது வேறு எந்த வகையிலாவது இருக்கலாம். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற காரியம் உதவி என்று நம்மிடம் வருபவருக்கோ அல்லது நம்மால் இந்த நபருக்கு உதவ முடியும் என்று உணர்த்தப் படும்பொழுதோ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதைத்தான் ஆண்டவர் விரும்புகின்றார். நாகமானின் வீட்டில் வேலை பார்த்த சிறுமி, தன்னுடைய எஜமான் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய எலியாவிடம் சென்றால் அவரின் குஷ்டரோகம் தேவனுடையக் கிருபையால் நீங்கும் என்று தன்னுடைய எஜமானியிடம் கூறுகின்றாள். நாகமான் சுகத்தைப் பெறுகின்றான். இயேசுவின் பிரசங்கத்தின் போது ஒரு சிறுவன் தன்னிடம் உள்ள 5 அப்பம் 2 மீன்களையும் ஆண்டவரிடம் கொடுக்கின்றான் அதன் மூலமாக அனேக மக்கள் போஷிக்கப்பட்டனர்.


          வேதாகமத்திலே நன்மை செய்தவர்களைக் குறித்துச் சொல்ல  வேண்டுமானால் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நன்மை செய்கின்றவராகச் சுற்றித் திரிந்தார் என்று வேதத்தின் வாயிலாகப் படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து லூக்கா 11: 41,42 வசனங்களில் நீங்கள் உங்களுடைய வருமானத்தில் தசமபாகங்களை தேவ ஊழியங்களுக்காகச் செலுத்த வேண்டும் அதோடு கூட உதவி தேவைப்படுகின்ற மக்களுக்குக உதவி செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். நாம் காணிக்கைகளை மட்டும் கொடுத்தால் போதாது ஏழை எளிய மக்கள் மற்றும் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். நாம் அப்படி உதவி செய்யும் போது நாம் இவ்வுலக வாழ்க்கையை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் போது மத்தேயு 25: 35, 36 வசனங்களில் கூறியுள்ளது போல ஆசிர்வதிக்கப்பட்டவர்களே என்று நம்மை வரவேற்பார். நாம் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு உதவி செய்யாமல் கடின மனதுள்ளவர்களாக வாழ்வோமென்றால் நாம் பரலோக பாக்கியத்தை இழந்து விடுவோம்.


சிந்தனை: நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கின்றேனா?


ஜெபம்: அன்பும் இரக்கமும் கிருபையும் நிறைந்த நல்ல ஆண்டவரே, நான் இந்த உலகத்தில் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு உதவக்கூடிய நல் மனதைத் தாரும். அதன் மூலமாக உமக்குச் சாட்சியுள்ள பிள்ளையாகவும் உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்களாகவும் வாழ எனக்கு உதவி செய்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகின்றோம் நல்ல பிதாவே. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நித்திய வெளிச்சம்


வேத பகுதி: ஏசாயா 60: 19,20

"கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்." ஏசாயா 60: 19 பி

தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலமாக இந்த வாக்குத்தத்தத்தைக் கர்த்தர் நமக்குக்கொடுக்கின்றார். நாம் நம்மை கிறிஸ்துவுக்கு முழுமையாக அர்ப்பணித்து அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரது பிள்ளைகளாக வாழும்போது கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமும் மகிமையுமாக காணப்படுகின்றார். நம்முடையக் கிரியைகள் தேவனுக்குப் பிரியமானவைகளாகக் காணப்படும்போது அவருடையக் கரம் நம்மைத் தாங்கி நடத்துகின்றது. எந்தவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் நமக்கு வந்தாலும் அவர் நமக்கு ஆறுதலையும் சகாயத்தையும் தந்து வழிநடத்துகின்றார். இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையின் வாழ்க்கையிலும் கர்த்தர் நம்மோடு கூட இருப்பார்.

நாம் நம்மைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். நாம் ஆண்டவருடையப் பிள்ளைகளாக வாழ நம்மை அர்ப்பணிக்கும்போது இவ்வுலகத்தின் துன்பங்கள் சோதனைகள் நிறைந்த வாழ்க்கையிலும் கர்த்தரே நமக்குத் துணையாக நின்று நம்மை வழி நடத்துவார். கர்த்தர் நமக்குத் துணையாய் இராவிட்டால்  இவ்வுலக வாழ்க்கையின் சோதனைகளில் நாம் வீழ்ந்து விடுவோம். பொறாமைகள் வஞ்சகங்கள் நிறைந்த இந்த உலகத்திலே மனிதர்கள் நம்மைக் கைவிட்டு விடுவார்கள் ஆனால் நாம் கர்த்தரை முழுமையாக நம்பி அவரைச் சார்ந்து வாழும் போது அவர் நமக்கு நித்திய வெளிச்சமாக இருந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: நான் கர்த்தரை நம்பியிருக்கின்றேனா? அல்லது மனிதர்களையா, படிப்பையா, பணத்தையை, சொத்துக்களையா? எதனை நம்பியிருக்கின்றேன்?

ஜெபம்: கிருபையும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே நான் என்னையே முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன். நீரே எனக்கு நித்திய வெளிச்சமாக இருந்து என்னை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே.ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்