நன்மை செய்யுங்கள்

"ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்." யாக்கோபு 4:17


         நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நன்மை வேண்டி பல மக்கள் வாழ்கின்றனர். ஒருவருக்குப் பண உதவியாக இருக்கலாம் அல்லது வேறு எந்த வகையிலாவது இருக்கலாம். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்ற காரியம் உதவி என்று நம்மிடம் வருபவருக்கோ அல்லது நம்மால் இந்த நபருக்கு உதவ முடியும் என்று உணர்த்தப் படும்பொழுதோ நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதைத்தான் ஆண்டவர் விரும்புகின்றார். நாகமானின் வீட்டில் வேலை பார்த்த சிறுமி, தன்னுடைய எஜமான் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய எலியாவிடம் சென்றால் அவரின் குஷ்டரோகம் தேவனுடையக் கிருபையால் நீங்கும் என்று தன்னுடைய எஜமானியிடம் கூறுகின்றாள். நாகமான் சுகத்தைப் பெறுகின்றான். இயேசுவின் பிரசங்கத்தின் போது ஒரு சிறுவன் தன்னிடம் உள்ள 5 அப்பம் 2 மீன்களையும் ஆண்டவரிடம் கொடுக்கின்றான் அதன் மூலமாக அனேக மக்கள் போஷிக்கப்பட்டனர்.


          வேதாகமத்திலே நன்மை செய்தவர்களைக் குறித்துச் சொல்ல  வேண்டுமானால் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நன்மை செய்கின்றவராகச் சுற்றித் திரிந்தார் என்று வேதத்தின் வாயிலாகப் படிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து லூக்கா 11: 41,42 வசனங்களில் நீங்கள் உங்களுடைய வருமானத்தில் தசமபாகங்களை தேவ ஊழியங்களுக்காகச் செலுத்த வேண்டும் அதோடு கூட உதவி தேவைப்படுகின்ற மக்களுக்குக உதவி செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றார். நாம் காணிக்கைகளை மட்டும் கொடுத்தால் போதாது ஏழை எளிய மக்கள் மற்றும் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். நாம் அப்படி உதவி செய்யும் போது நாம் இவ்வுலக வாழ்க்கையை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் போது மத்தேயு 25: 35, 36 வசனங்களில் கூறியுள்ளது போல ஆசிர்வதிக்கப்பட்டவர்களே என்று நம்மை வரவேற்பார். நாம் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு உதவி செய்யாமல் கடின மனதுள்ளவர்களாக வாழ்வோமென்றால் நாம் பரலோக பாக்கியத்தை இழந்து விடுவோம்.


சிந்தனை: நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கின்றேனா?


ஜெபம்: அன்பும் இரக்கமும் கிருபையும் நிறைந்த நல்ல ஆண்டவரே, நான் இந்த உலகத்தில் உதவி தேவைப்படுகின்ற மக்களுக்கு உதவக்கூடிய நல் மனதைத் தாரும். அதன் மூலமாக உமக்குச் சாட்சியுள்ள பிள்ளையாகவும் உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்களாகவும் வாழ எனக்கு உதவி செய்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகின்றோம் நல்ல பிதாவே. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்