கடிவாளம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 1 - 3


ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷன். வசனம் 2



நமது உடலில் உள்ள உறுப்புகளில் நாவு மிகவும் சிறியது. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்கிறது. மனிதனின் நற்கிரியை அல்லது துற்கிரியைகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.



ஒரு பெரிய கொடிய முரட்டுக் குதிரையின் வாயில் ஒரு கடிவாளம் பொட்டு அதை நமக்கேக் கீழ்ப்படிய வைத்து விடுகிறோம். நாம் சொல்லுகிற வேலையைச் செய்கிறது. நாம் சொல்கிற திசையில் செல்கிறது. குதிரை ஒரு பலமுள்ள மிருகம். எந்திரங்களின் சக்தியைக் குதிரையின் பலத்தோடு ஒப்பிட்டு அறிகிறோம். போர்களிலும், வண்டி இழுப்பதற்கும் குதிரைகளைப் பயன்படுத்தினோம். குதிரையின் பலமும், இயக்கமும் கடிவாளத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது.





நமது நாவைப் பயன்படுத்திக் கடவுளைத் துதிக்க வேண்டும். புகழ வேண்டும், பிறரைப் பாராட்ட வேண்டும், சிந்தித்துப் பேசுங்கள், சிறந்ததையே பேசுங்கள்.



சிந்தனை: நான் நாவடக்கமுள்ள விசுவாசியா?


ஜெபம்: தேவனே நான் பூரணமாய் வாழ பெலனும் தூய மனமும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிருள்ள விசுவாசம்

வேதபகுதி:யாக்கோபு 2 : 14 - 26


கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. வசனம் 20.



ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் விசுவாசம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். பெரும்பாடுள்ள பெண், குஷ்டரோகி ,குருடன் ஆகியோர் விசுவாசத்தினால் பிணி நீங்கிச் சுகம் பெற்றதைத் திருமறையில் வாசிக்கிறோம். கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட மலையைப் பெயர்த்துக் கடலுக்குள் போகச் செய்துவிடலாம். விசுவாசம் அந்த அளவுக்கு வலிமையானது.



ஆனால் விசுவாசம் நமது வாழ்வின் செயல்பாடுகளில் வெளிப்படவேண்டும். விசுவாசத்தின் கனியாகிய அன்பு நமது அன்றாட வாழ்வில் பொங்கி வழிய வேண்டும். இல்லையென்றால் விசுவாசம் செத்ததாகி விடும். இயேசுநாதர் தன்னிடம் நம்பி வந்த மக்களை வெறுமையாய் அனுப்பாமல் சுகம் கொடுத்து வயிறார உணவு கொடுத்தே அனுப்பினார்.





நாமும் நம்மிடம் வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும் நன்மைகளையும் செய்ய வேண்டும். வெறும் இனிமையான வார்த்தைகளால் எவ்வித பயனுமில்லை. ஆதித் திருச்சபையில் விசுவாசியாகிய கொர்நேலியு தன்னிடம் வந்த மக்களுக்கெல்லாம் தான தருமங்கள் செய்தான் என்று வாசிக்கிறோம். இப்படிப்பட்ட நற்காரியங்கள் மூலமே அநேகர் ஆண்டவரிடம் வழி நடத்தப்பட்டனர்.



சிந்தனை: கர்த்தருடைய நாமத்தை நம்முடைய நற்காரியங்கள் மூலமாக மகிமைப்படுத்தி, பிற மக்களை ஆதாயம் செய்கிறோமா?



ஜெபம்: ஆண்டவரே உம்மை விசுவாசிப்பதைக் கிரியைகளில் காட்ட எனக்கு உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ராஜரீகப் பிரமானம்

வேதபகுதி:யாக்கோபு 2:8 - 13


உன்னிடத்தில் நீ அன்புகூறுகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக வசனம் 8.



உலகில் சட்டங்கள் முக்கியம். சட்டங்களைக் கைக்கொண்டு கீழ்ப்படிய வேண்டும். சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குத் தண்டனை உண்டு.



பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்கிறோம், நாம் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தால் நமக்குத் தண்டனை. பயணச்சீட்டு இருந்தால் மட்டும் போதாது, உரிய பயணச்சீட்டு வேண்டும்.





சட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எல்லாச் சட்டங்களும் முக்கியமானவை. ஒன்றுக்குக் கீழ்ப்படிந்து மற்றொன்றிற்குக் கீழ்ப்படியாமலிருக்க முடியாது. ஒன்றைக் கைக்கொண்டு மற்றொன்றைக் கைக்கொள்ளாமலிருக்க முடியாது.



கிறிஸ்தவர்கள் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் முன்பாக நீதியாக நடக்க வேண்டும். அது அன்பினால் மட்டுமே முடியும்.



இறையரசின் சட்டங்கள் திருமறையில் உள்ளன. திருமறையை நன்கு படித்து அவற்றை அறிந்து கொள்ளுவோம். அதன்படி அனைத்துக்கும் கீழ்ப்படிவோம். தேவன் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்ற வேதவசனத்தின் படி நாம் இறைவனிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் அன்பு கூறுவோம்.




சிந்தனை: பிறரிடம் நான் காட்டும் அன்பு என்னிடத்தில் நான் காட்டும் அன்புக்குச் சமமானதா?




ஜெபம்: ஆண்டவரே என்னில் நான் அன்புகூறுவது போல உம்மிடத்திலும் பிறரிடத்திலும் அன்பு கூற கிருபை தாரும். ஆமேன்




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்



Blog Directory

பட்சபாதம்

வேதபகுதி:யாக்கோபு 2 : 1 - 7


விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக வசனம் 1



ஆள்பார்த்துச் செயல்படுதல் மனிதர்களின் இயற்கையான குணங்களுள் ஒன்று. இறைமக்களுக்குள்ளும், திருச்சபையிலும் இப்பண்பு விசுவாசிகள் நடுவே காணப்படுவதைக் கண்ட யாக்கோபு வேதனையோடு எச்சரிக்கிறார். ஏழை, செல்வந்தர்; வேண்டியவர், வேண்டாதவர்; உறவினர், உறவினர் அல்லாதோர் என்று பட்சபாதம் காட்டுகிறோம்.



ஆவியின்படி பிறந்த நாம் சமமாக்கப்பட்டவர்கள். நாம் நமக்குள் ஏற்றத் தாழ்வு பாராட்டக்கூடாது. விசுவாசத்தையும், பக்தியையும் பாரபட்சம் சீர் குலைத்துவிடும். கடவுள் பட்சபாதமுள்ளவர் அல்ல.




பணமும், அந்தஸ்தும், உறவும், ஜாதியும் விசுவாசிகள் நடுவே பெயரளவில் கூட காணப்படக்கூடாது. பட்சபாதத்தின் அடிப்படையில் ஒருவரை உயர்வாக மதிப்பதும், ஒருவரைத் தாழ்வாக கனவீனப்படுத்துவதும் கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதர்களிடையே பட்சபாதம் காட்டுவது தீய நோக்கத்தை உள்ளடக்கியது. தன்னலத்தைப் பிரதானமாகக் கொண்டது. ஆகவே நாம் ஒருவருக்கொருவர் பட்சபாதம் காட்டாமல் நாம் தேவசாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று எண்ணி ஒருவர் பேரில் ஒருவர் சமமாக அன்புகூரக்கடவோம். தேவன் அன்புள்ளவராயிக்கிறார்.




சிந்தனை: நாம் எப்படிப்பழகுகின்றோம்? சமமாகப் பழகுகின்றோமா? அல்லது பட்சபாதம் உள்ளவர்களாகப் பழகுகின்றோமா?



ஜெபம்: தேவனே திருமறையின் அடிப்படையில் அனைவரிடமும் சமமாகப் பழக அருள்புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்