வேதபகுதி:யாக்கோபு 2 : 14 - 26
கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. வசனம் 20.
ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் விசுவாசம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். பெரும்பாடுள்ள பெண், குஷ்டரோகி ,குருடன் ஆகியோர் விசுவாசத்தினால் பிணி நீங்கிச் சுகம் பெற்றதைத் திருமறையில் வாசிக்கிறோம். கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட மலையைப் பெயர்த்துக் கடலுக்குள் போகச் செய்துவிடலாம். விசுவாசம் அந்த அளவுக்கு வலிமையானது.
ஆனால் விசுவாசம் நமது வாழ்வின் செயல்பாடுகளில் வெளிப்படவேண்டும். விசுவாசத்தின் கனியாகிய அன்பு நமது அன்றாட வாழ்வில் பொங்கி வழிய வேண்டும். இல்லையென்றால் விசுவாசம் செத்ததாகி விடும். இயேசுநாதர் தன்னிடம் நம்பி வந்த மக்களை வெறுமையாய் அனுப்பாமல் சுகம் கொடுத்து வயிறார உணவு கொடுத்தே அனுப்பினார்.
நாமும் நம்மிடம் வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும் நன்மைகளையும் செய்ய வேண்டும். வெறும் இனிமையான வார்த்தைகளால் எவ்வித பயனுமில்லை. ஆதித் திருச்சபையில் விசுவாசியாகிய கொர்நேலியு தன்னிடம் வந்த மக்களுக்கெல்லாம் தான தருமங்கள் செய்தான் என்று வாசிக்கிறோம். இப்படிப்பட்ட நற்காரியங்கள் மூலமே அநேகர் ஆண்டவரிடம் வழி நடத்தப்பட்டனர்.
சிந்தனை: கர்த்தருடைய நாமத்தை நம்முடைய நற்காரியங்கள் மூலமாக மகிமைப்படுத்தி, பிற மக்களை ஆதாயம் செய்கிறோமா?
ஜெபம்: ஆண்டவரே உம்மை விசுவாசிப்பதைக் கிரியைகளில் காட்ட எனக்கு உதவி புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக