"எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்."1 பேதுரு 2: 17
பிரியமானவர்களே, தேவன் நம்மை இந்த உலகத்தில் படைத்தது நாம் அவருக்குப் பயந்து அவருக்குப் பிரியமாய் பரிசுத்தமாக வாழ்ந்து உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களையும் கனம்பண்ணி ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக நம்மை அழைத்திருக்கின்றார். ஆனால் நாம் பலவேளைகளில் நம்மிடையே வாழுகின்ற சகமனிதர்களுக்குக் கனத்தைக் கொடுக்காமல் அவர்களை அசட்டை பண்ணியும் அற்பமாக எண்ணியும் நாம் வாழுகின்றோம். இப்படிப்பட்ட மனமேட்டிமை கொண்ட குணங்களை ஆண்டவர் நம்மிடம் விரும்பவில்லை. மாறாக நாம் தாழ்மையின் குணங்களைத் தரித்துக் கொண்டு நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களிடம் அன்புடன் நடந்து கொள்வதைத் தான் நம்மிடம் விரும்புகின்றார்.
வேதாகமத்திலே நாம் பார்ப்போமென்றால் யாக்கோபு ராகேலை நேசித்து லேயாளை அற்பமாக எண்ணியபடியினால் தேவன் லேயாள் கர்ப்பம் தரிக்கும்படிச் செய்தார். அதேப்போல தாவீது யுத்தத்திற்குச் செல்லும் போது கோலியாத் தாவீதை அற்பமாக எண்ணுகின்றான். ஆனால் தேவன் எளியவனாகிய தாவீதின் மூலமாக இஸ்ரவேல் ஜனத்திற்கு வெற்றியைத் தருகின்றார். நாமும் நம்முடைய நல் நடக்கைகளின் மூலமாக , பிறருக்கு மதிப்பளிக்கக்கூடிய நற்குணங்களின் மூலமாக ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்த விரும்புகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தான் வாழ்ந்தக் காலங்களில் எல்லோரிடமும் அன்பு செலுத்தி முன் மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கின்றார். நாமும் நம்மைச் சுற்றி வாழ்கின்றவர்கள், உடன் வேலை பார்க்கின்றவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்தி கனம் பண்ணி, உயர் அதிகாரிகள், ஆளுகின்றவர்கள் அனைவருக்கும் கனத்தை செலுத்தித் தாழ்மையாக வாழும் போது தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராயிருக்கின்றார். அப்படிப்பட்ட கிருபையை நம் அனைவருக்கும் தந்து வழி நடத்துவாராக.
சிந்தனை: அனைத்து மனிதர்களையும் நேசித்து அவர்களைக் கனம்பண்ணுகின்றேனா?
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நான் இந்த உலகத்தில் என்னுடன் வாழ்கின்ற, வேலை பார்க்கின்ற சக மனிதர்களிடம் அன்புடன் பழகி அனைத்து மக்களையும் கனம் பண்ணி என்னுடைய நல்ல நடக்கைகள் மூலமாக உம்முடைய அன்பினை அனைவருக்கும் காண்பிக்க உதவி புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக