மதியம் வெள்ளி, 12 அக்டோபர், 2007

யார் சுத்தமுள்ளவன்

வேதபகுதி:மீகா 6:9 - 12

கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? வசனம். 11





யோசுவா ஜனங்களை நோக்கி, உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதம் செய்வார் என்றான் (யோசுவா 3:5). அவ்விதம் அவர்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு யோர்தானைக் கடக்க முயன்றார்கள். அப்பொழுது அது இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. நாமும் ஆண்டவருக்கு முன்பாகப் பரிசுத்தமாக வாழ்ந்தால் அற்புதம் காணமுடியும்.



"புறத்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.



பரிசுத்தம் என்பது முழுவதும் சுத்தம் அதாவது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை. புறத்தூய்மை குளித்தல், கழுவுதல் போன்றவற்றால் அமைகிறது. ஆனால் அகத்தூய்மை, மனதை சுத்தப்படுத்துவது. இயேசுவின் இரத்தம் நம்மை சகல பாவத்திலிருந்தும் சுத்திகரிக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் தேவனைத் தரிசிக்கமுடியும். தேவ வல்லமையையும் அற்புதங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவேதான் தாவீது தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் என்கிறார். இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன். அதன் முடிவு நித்திய ஜீவனாகும் (ரோமர் 6:22). கைகளில் சுத்தம் மற்றும் இருதயத்தில் சுத்தமுள்ளவனே கர்த்தருடைய பர்வதத்தில் எற முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு அநேக ஆசிர்வாதங்கள் இருப்பதால் நாமும் அதைப் பெற்றுக் கொண்டுத் தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.




சிந்தனை: பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்.


ஜெபம்: தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியால் என்னைப் புதுப்பித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்