வேதபகுதி:யாக்கோபு 5 : 1 - 6
உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. வசனம் 2
யாக்கோபு இந்தப் பகுதியில் ஐசுரியவான்களின் பாவமான காரியங்களைச் சொல்லி அதன் மூலமாக வரும் நியாயத்தீர்ப்புகளைக் குறித்து எச்சரிக்கிறார். அவர்கள் மற்றவர்களை வஞ்சித்து தங்களுக்குப் பணத்தையும் பொருளையும் சேர்ப்பதையே தங்கள் எண்ணமாகக் கொண்டு, தங்களிடம் வேலை பார்க்கும் கூலியாட்களுக்குக் கூலி கொடுக்காமல் மற்றும் தங்களுக்கு அருகில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வது போன்ற நற்காரியங்கள் செய்யாமல் வாழ்கின்றார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவதை விட ஐசுவரியவான்கள் பரலோகத்திற்குச் செல்வது அரிதாயிருக்கும்" என்று ஐசுவரியவான்களை எச்சரிக்கிறார்.
இங்கிலாந்து தேசத்தில் ஒரு சிறு வியாபாரி வசித்து வந்தார். இவர் கர்த்தருக்குப் பிரியமானபடி வாழ்ந்து வந்தார். இவர் ஆண்டவரிடம் நீர் என்னை இன்னும் அதிகமாக ஆசிர்வதித்தால் ஊழியங்களுக்குத் தசமபாகத்திற்கு அதிகமாகக் காணிக்கைகளை தருவதாக ஜெபித்தார். ஆண்டவரும் இவரை சிறிது சிறிதாக ஆசிர்வதித்து வந்தார். இவர் ஆண்டவரிடம் ஜெபித்தபடி ஒரு சில காலங்கள் ஆண்டவருக்குப் பிரியமாக வாழ்ந்து வந்தார்.சொந்தமாகக் கப்பல் வாங்கி ஏற்றுமதி பண்ணும் அளவிற்கு ஆண்டவர் அவரை ஆசிர்வதித்தார். செல்வம் பெருகப் பெருகத் தன்னுடைய வேலையில் மட்டுமே கவனமாயிருந்து தேவனை மறந்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அவருடைய கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்லும்போது புயலில் சிக்கிக் கடலில் மூழ்கியது. இந்தச் செய்தியைக் கேட்ட பொழுதுதான் தன்னுடைய தவறை உணர்ந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திருந்தினார். இப்படித்தான் ஐசுவரியம் நம்முடைய வாழ்வில் வரும்போது தெய்வபயம் நம்மைவிட்டுப் போய் விடுகின்றது, பின்பு சோதனை வரும் போதுதான் நாம் தேவனை நோக்கிப் பார்கின்றோம்.
ஒருசிலர் தங்களுடைய ஐசுவரியத்தைக் கொண்டு ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் ஒருநாள் தேவனுடைய சந்நிதியில் நியாயத்தில் வந்து நிற்கும். அவர்கள் சேர்த்து வைக்கின்ற பொன்னும் பொருளும் ஒரு நாள் அழிந்து நாசமாகிப் போகும் என்பதை உணராமல் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். இதைத் தான் சாலமோன் ராஜா" கர்த்தரின் ஆசிர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்". அதாவது நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடக்கும் போது வருகின்ற ஆசிர்வாதம் மட்டுமே நமக்கு நிம்மதியைக் கொடுக்கும் தவறான முறையில் வருகின்ற ஆசிர்வாதம் வேதனையைத்தான் தரும்.
நாம் கர்த்தருக்குப் பிரியமாய் அவருக்குப் பயந்து நடக்கும் போது அவர் நம்மை ஆசிர்வதிக்கிறார். தீங்கு நம்மை அனுகாமல் பார்த்துக் கொள்ளுவார்.
சிந்தனை: நாம் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறோமா?
ஜெபம்: தேவனே நான் உமக்குப் பயந்து நடந்து பூமியில் அல்ல பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கப் பெலமும் ஞானமும் தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக