"நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்."சங்கீதம் 138 :7
சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார். சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உண்வில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார்.
மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார். நாமும் கிறிஸ்துவுக்காக நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் போது நாம் துன்பத்தில் நடந்தாலும் கர்த்தர் நம்மை உயிர்பித்து வழிநடத்துவார்.
சிந்தனை: நான் என்னைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருக்கிறேனா?
ஜெபம்: தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன் என்னுடைய துன்பங்கள் எல்லவற்றிலும் நீரே என்னுடையத் துணையாக இருந்து வழிநடத்தும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக