மதியம் வெள்ளி, 23 நவம்பர், 2007

அவர் ஆண்டவர்

வேதபகுதி: ஆமோஸ் 9 : 1 - 6


கர்த்தர் என்பது அவருடைய நாமம். வசனம் 6



பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளிடம் தேசப்பிதா காந்தியடிகள் படத்தைக் காட்டி இவர் யார் என்று கேட்டால் உடனே தேசப்பிதா என்றும் அறநெறி வழிகாட்டி என்றும் காந்தி தாத்தா என்றும் பலவிதமான உறவுகளை வெளிப்படுத்தி பிள்ளைகள் பதில் அளிப்பர். அந்த பதிலில் இருந்து உறவை அறிந்து கொள்ள முடியும்.



இங்கோ ஆண்டவர் தம்மைக் குறித்து இஸ்ரவேல் மக்களிடத்தில் நான் உங்களை ஆளுகிறவர் என்று உரைக்கிறார். இஸ்ரவேலரின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த கடவுள் அவர்களது பித்தலாட்ட வாழ்வு நெறியைப் பார்த்து அவர்களை தண்டிக்க விழைவதை வசனம் கூறுகிறது. பகலின் மேகத்தினாலும் இரவில் அக்கினியினாலும் பாதுகாத்து வழிநடத்தி வாழ்வு தந்த அவர்களின் கடவுள் இப்பொழுது அவர்களை எச்சரிப்பதை காண்கிறோம்.




கர்த்தர் சர்வவல்லவர். அவருக்கு ஒன்றும் மறைவில்லை. உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்து வருபவர். அவர்தான் இயற்கையைப் படைத்தவர். அதுமட்டுமல்ல தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறவர்.



நமது வாழ்வில் கடவுள் மன்னிக்கிறவர் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதால் நாம் தவறு செய்வதற்கு அஞ்சுவதில்லை. ஆண்டவரின் கண்களுக்கு மறைவாக மனிதர்கள் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது. நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நமது வாயின் வார்த்தைகளையும் கடவுள் கவனித்துக் கொண்டே இருக்கிறார். நாம் அவருக்குக் கடைசி நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.




சிந்தனை: கர்த்தர் மன்னிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உடையவர்.


ஜெபம்: தீய வாழ்வில் இருந்து என்னை விடுவித்துக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்