தீமை செய்யாதிருங்கள்

வேத பகுதி: நீதிமொழிகள் 17: 13

"நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் வீட்டை விட்டுத் தீமை நீங்காது" நீதிமொழிகள் 17: 13

நன்மைக்குத் தீமை செய்வது மனிதத்தன்மை கிடையாது. ஆனால் நாம் நமக்கு நன்மை செய்தவர்களுக்குப் பதிலாக பல வேளைகளில் தீமை செய்து விடுகின்றோம் ஜென்ம சுபாவத்தில் பிறந்த நமது எண்ணங்கள் நம்மை அப்படிச் செய்யத் தூண்டுகின்றது. நன்மைக்குத் தீமை செய்கின்ற நம்மால் தீமைக்கு நன்மை செய்ய முடிவதில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய உபதேசங்களிளெல்லாம் பகைவனையும் நேசிக்க வேண்டும் தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். நம்மால் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. ஏனென்றால் பாவத்தில் பிறந்த நம்மால் தீமைக்கு நன்மை செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவுக்குள்ளாக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது தேவ ஒத்தாசையால் நன்மை செய்து நமக்குத் தீமை செய்பவர்களையும் ஆண்டவரண்டை நடத்த முடியும்.

தாவீது ராஜாவின் வாழ்க்கையை நாம் பார்ப்போமானால், தாவீது ராஜா தனக்கு விசுவாசமாக, உண்மையான போர்ச்சேவகனாக இருந்த உரியாவைப் போர்முனையில் வைத்து எதிரிகளால் உரியாவைக் கொன்று உரியாவின் மனைவியை தனக்கு மனைவியாக்குகின்றான். கர்த்தர் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தாவீதைக் கடிந்து கொண்டு, அவன் செய்த தீமைக்கு அவனுக்குக் கிடைத்த சாபம் "பட்டயம் உன் வீட்டை வீட்டு என்றும் விலகாதிருக்கும்". இந்த சாபம் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறியது. நாமும் நன்மைக்குத் தீமை செய்யும் போது நம்மை விட்டு தீமை என்றும் நீங்காது. ஆனால் நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்குப் பதிலாக நன்மை செய்யும் போது கர்த்தர் நாம் செய்த நன்மைக்குப் பதிலாக நம்மை அதிகமாக ஆசீர்வதித்து வழி நடத்துவார்.

சிந்தனை: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் ஜெபம்: அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவே, நாங்கள் எங்களுக்குத் தீமை செய்கின்றவர்களுக்கு நன்மை செய்ய எங்களுக்குக் கிருபை புரியும். அதன் மூலமாக உமது அன்பை மற்றவர்களும் கண்டு கொள்ள உதவி செய்யும். ஆமேன்.

தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பகைவனையும் நேசி

வேத பகுதி: I சாமுவேல் 26


"சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய் என்றான்" 1 சாமுவேல் 26 : 25

தாவீது இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் சவுல் ராஜாவை விடப் பெயர் பெற்றவனாக மாறுகின்றான். இதனைப் பொறுக்க முடியாத சவுல் தாவிதைக் கொலை செய்ய நினைக்கின்றான். இதை அறிந்த தாவீது சவுலுக்குத் தப்பி ஒடுகின்றான். சவுல் தாவீதைப் பின் தொடருகின்றான். ஒரு மலையில் தாவீதும் இன்னொரு மலையில் சவுலும் இருக்கின்றார்கள். சவுலின் கூட்டத்தார் தூங்குகின்ற வேளையில் தாவீதும் அபிசாயும் சவுல் இருக்கின்ற இடத்திற்கு வருகின்றார்கள். அபிசாய் தாவீதிடம் நம்முடையப் எதிரியாய் இருக்கின்ற சவுலைக் கொன்று போடுவோம் என்று தாவீதிடம் கூறுகின்றான். ஆனால் தாவீதோ சவுலைத் தப்ப விட்டு சவுலுடைய ஈட்டியையும் தண்ணீர்ச் சொம்பையும் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். தாவீது தன்னுடைய இடத்திற்கு வந்து சவுலின் கூட்டத்தாரிடம் பேசுகின்றான். இதனை உணர்ந்த சவுல் தாவீதை நீ மேன்மேலும் பலப்படுவாய் என்று ஆசீர்வதித்து தன் வழியே செல்லுகின்றான்.

ஆம் பிரியமானவர்களே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். மத்தேயு 5: 44,45" என்று தனது மலைப் பிரசங்கத்தில் கூறுகின்றார். நாமும் நமது சத்துருக்களாய், பகைஞர்களாய் இருக்கின்றவர்கள் செய்கின்றத் தீமையானக் காரியங்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்வோமானால் அவர்களும் நமது நல்ல நடக்கைகளைப் பார்த்து கிறிஸ்துவின் அன்பினை அறிந்து கொள்வார்கள்.நம்மையும் கர்த்தர் ஆசீர்வத்து வழிநடத்துவார்.


சிந்தனை: நான் எனக்குத் தீங்கு செய்கிறவர்களுக்குப் பதிலாகத் தீங்கு செய்கின்றேனா அல்லது கிறிஸ்துவின் அன்பினைக் காட்டுகின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவா, நான் எனக்குத் தீமை செய்கிறவர்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்யும்படிக் கிருபையத் தந்து அதன் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப் படும் படி செய்யும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்