வேத பகுதி: நீதிமொழிகள் 17: 13
"நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் வீட்டை விட்டுத் தீமை நீங்காது" நீதிமொழிகள் 17: 13
நன்மைக்குத் தீமை செய்வது மனிதத்தன்மை கிடையாது. ஆனால் நாம் நமக்கு நன்மை செய்தவர்களுக்குப் பதிலாக பல வேளைகளில் தீமை செய்து விடுகின்றோம் ஜென்ம சுபாவத்தில் பிறந்த நமது எண்ணங்கள் நம்மை அப்படிச் செய்யத் தூண்டுகின்றது. நன்மைக்குத் தீமை செய்கின்ற நம்மால் தீமைக்கு நன்மை செய்ய முடிவதில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னுடைய உபதேசங்களிளெல்லாம் பகைவனையும் நேசிக்க வேண்டும் தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். நம்மால் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. ஏனென்றால் பாவத்தில் பிறந்த நம்மால் தீமைக்கு நன்மை செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவுக்குள்ளாக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது தேவ ஒத்தாசையால் நன்மை செய்து நமக்குத் தீமை செய்பவர்களையும் ஆண்டவரண்டை நடத்த முடியும்.
தாவீது ராஜாவின் வாழ்க்கையை நாம் பார்ப்போமானால், தாவீது ராஜா தனக்கு விசுவாசமாக, உண்மையான போர்ச்சேவகனாக இருந்த உரியாவைப் போர்முனையில் வைத்து எதிரிகளால் உரியாவைக் கொன்று உரியாவின் மனைவியை தனக்கு மனைவியாக்குகின்றான். கர்த்தர் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தாவீதைக் கடிந்து கொண்டு, அவன் செய்த தீமைக்கு அவனுக்குக் கிடைத்த சாபம் "பட்டயம் உன் வீட்டை வீட்டு என்றும் விலகாதிருக்கும்". இந்த சாபம் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறியது. நாமும் நன்மைக்குத் தீமை செய்யும் போது நம்மை விட்டு தீமை என்றும் நீங்காது. ஆனால் நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்குப் பதிலாக நன்மை செய்யும் போது கர்த்தர் நாம் செய்த நன்மைக்குப் பதிலாக நம்மை அதிகமாக ஆசீர்வதித்து வழி நடத்துவார்.
சிந்தனை: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் ஜெபம்: அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவே, நாங்கள் எங்களுக்குத் தீமை செய்கின்றவர்களுக்கு நன்மை செய்ய எங்களுக்குக் கிருபை புரியும். அதன் மூலமாக உமது அன்பை மற்றவர்களும் கண்டு கொள்ள உதவி செய்யும். ஆமேன்.தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக