"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." சங்கீதம் 1 :2
கடந்த வாரத்தில் நான் ஊருக்குச் சென்று விட்டு இரயிலில் வந்து கொண்டிருந்தேன். நான் வந்த பெட்டியில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் ஏறினார்கள். மூவரும் கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் பேச்சிலேத் தெரிந்தது. சிறிது நேரம் அவர்களது குடும்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் வேதாகமம் எடுத்து வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் கடந்த முறை வந்த போது எடுத்து வந்ததாகவும் அப்படி வந்தபோது அதை ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் போது எடுத்துச் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் அதனால் இந்த முறை எடுத்து வரவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர்கள் இரயிலில் ஏறும் போது கனமான பெட்டிகள் மற்றும் பையுடன் தான் ஏறினார்கள்.
சுமையானப் பைகளைக் கொண்டு வருவதற்கு அவர்களால் முடிகிறது ஆனால் 500 கிராம் எடை அளவு கூட இல்லாத வேதாகமத்தை அவர்களால் தூக்கிக் கொண்டு வரமுடிகிறதில்லை. அநேகக் கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குக் கூட வேதாகமம் கொண்டு வருவது கிடையாது ஆனால் பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ செல்லும்போது புத்தகமூட்டையை அள்ளிக் கொண்டுச் செல்லுகிறார்கள். உலகக் காரியங்களிலே நாட்டம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். கர்த்தருடைய வேதத்தை மறந்து விட்டார்கள். நாளடைவில் கர்த்தரும் அவர்களை மறந்து விடுவார். இப்படிப்பட்டவர்கள் சமாதனக் குறைவினாலும் ஆசீர்வாதக் குறைவினாலும் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன், நாம் கர்த்தரைத் தேடும் போது மட்டும் தான் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். நாம் கர்த்தருடைய வேதத்தையும் அவருடைய வல்லமைகளையும் நாடும் போது நாம் பாக்கியவான்களாயிருப்போம். இல்லையென்றால் நாம் அவர் கொடுக்கின்ற ஆசீர்வாதங்களுக்கு அபாத்திரராயிருப்போம்.
சிந்தனை: "வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது."நீதிமொழிகள் 28:9
ஜெபம்: அன்பின் பிதாவே நான் உம்முடைய வேதத்தை நேசித்துக் கற்று அதின்படி நடந்து பாக்கியம் பெற்றவர்களாக வாழக் கிருபை தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக